12 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ; சிக்கி தவித்த 60 பேர் மீட்பு - 39 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


12 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ;  சிக்கி தவித்த 60 பேர் மீட்பு - 39 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கரும்புகையில் சிக்கி தவித்த 60 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 39 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை,

மும்பையில் 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கரும்புகையில் சிக்கி தவித்த 60 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 39 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

12 மாடி கட்டிடம்

மும்பை குர்லா மேற்கு பகுதி கோகினூர் ஆஸ்பத்திரி அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 12 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று அதிகாலையில் தரைத்தளத்தில் மின்வயரில் திடீரென தீ பற்றியது. இதில் ஏற்பட்ட தீ அங்கிருந்த பழைய பொருட்களில் பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்து கட்டிடத்தின் மேல் பகுதிக்கு பரவியது. மேலும் கட்டிடத்தை கரும்புகை சூழ்ந்தது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திடுக்கிட்டு எழுந்த பலர் கட்டிடத்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பலர் கட்டிடத்தில் சிக்கி கொண்டு பரிதவித்தனர்.

60 பேர் மீட்பு

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிடத்தின் மின் இணைப்பை துண்டித்து தீயணைப்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மற்றொரு புறம் கட்டிடத்தின் மாடிகளில் சிக்கியவர்களை ராட்சத ஏணிகள் மூலம் மீட்டனர். இவ்வாறு 60 பேர் மீட்கப்பட்டனர். இதில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 39 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாநகராட்சியின் ராஜவாடி ஆஸ்பத்திரியில் 35 பேரும், கோகினூர் ஆஸ்பத்திரியில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கட்டிடத்தில் பற்றிய தீயை 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி முற்றிலும் அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story