விடிய, விடிய பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய நாக்பூர் நகரம் - பெண் பலி; 400 பேர் மீட்பு


விடிய, விடிய பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய நாக்பூர் நகரம் - பெண் பலி; 400 பேர் மீட்பு
x
தினத்தந்தி 24 Sept 2023 12:45 AM IST (Updated: 24 Sept 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் பலத்த மழை காரணமாக நகரமே வெள்ளக்காடானது. வெள்ளத்தில் சிக்கிய பெண் பலியானார். 120 மாணவர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மும்பை,

நாக்பூரில் பலத்த மழை காரணமாக நகரமே வெள்ளக்காடானது. வெள்ளத்தில் சிக்கிய பெண் பலியானார். 120 மாணவர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விடிய, விடிய பலத்த மழை

நாக்பூர் 3-வது பெரிய நகரமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் சுவையான ஆரஞ்ச் பழங்கள் விளைவதால், நாக்பூரை ஆரஞ்ச் நகர் என்று அழைப்பது உண்டு. நாக்பூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த மழை பெய்தது. விடிய, விடிய கொட்டிய மழை அதிகாலை வரை நீடித்தது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக நாக்பூர் அம்பாசாரி ஏரி நிரம்பி அதில் இருந்து பெருமளவில் உபரி நீர் வெளியேறியது. ஏரியில் இருந்து வெளியேறிய நீர் மற்றும் பலத்த மழையின் காரணமாக நாக்பூர் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. சாலைகளில் நிறுத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

400 பேர் மீட்பு

சுமார் 2 மணி நேரத்தில் மட்டும் 10 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் இந்த விபரீதம் நேர்ந்தது. இதனால் நேற்று நாக்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி ராணுவமும் வரவழைக்கப்பட்டனர். செவி, பேச்சு திறன் குறைபாடு மாணவர்களின் உண்டு உறைவிட பள்ளியில் சிக்கி தவித்த 70 மாணவர்களை அவர்கள் மீட்டனர். மேலும் பெண்கள் கல்லூரி விடுதியை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு சிக்கி தவித்த 50 மாணவிகள் மீட்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகளை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்டப்பட்டனர். இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் பலியானதாக மாநகராட்சி தெரிவித்தது. இதேபோல 14 கால்நடைகளும் உயிரிழந்தன. துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் சொந்த ஊரான நாக்பூரில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டு உள்ளார்.


Next Story