மும்பையில் 'தஹி ஹண்டி' திருவிழா கோலாகலம்
மும்பையில் ‘தஹி ஹண்டி' திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தாக்கள் தயிர் பானையை உடைத்து அசத்தினர்.
மும்பை,
மும்பையில் 'தஹி ஹண்டி' திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தாக்கள் தயிர் பானையை உடைத்து அசத்தினர்.
'தஹி ஹண்டி'
மும்பையில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'தஹி ஹண்டி' என அழைக்கப்படும் உறியடி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாட்டிலேயே மும்பையில் நடைபெறும் உறியடி நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் உறியடி நிகழ்ச்சிகளில் கோவிந்தாக்கள் குழுவாக கலந்து கொண்டு அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் தயிர் பானைகளை உடைத்து அசத்துவார்கள்.
உற்சாக கொண்டாட்டம்
நேற்று மும்பையில் தஹி ஹண்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு, மைதானங்கள், தெருக்கள், முக்கிய சாலைகள் என பல்வேறு இடங்களில் உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. அமைப்புகள், அரசியல் கட்சியினர் சார்பிலும் பல இடங்களில் பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தெருக்கள், சாலைகள் மற்றும் மைதானங்கள் மலர் அலங்காரம் மற்றும் மின் அலங்காரத்தில் மின்னியது. நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் ஸ்பீக்கர்களில் ஒலிக்கப்பட்ட சினிமா பாடல்கள், இசை காதை கிழித்தன.
பொதுமக்கள் பிரமிப்பு
குறிப்பாக மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பரேல், லால்பாக், தாதர், பாண்டுப், முல்லுண்டு, கோரேகாவ், ஒர்லி, அந்தேரி போன்ற பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டியது. நேற்று மும்பையில் மழை கொட்டி தீர்த்தது. எனினும் கோவிந்தாக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி லாரி, வேன், பஸ், இருசக்கர வாகனங்களில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று மனித பிரமீடு அமைத்து அலங்கரிக்கப்பட்ட தயிர் பானைகளை உடைத்து அசத்தினர்.
கோவிந்தாக்கள் சுமார் 10 அடுக்கு வரை பிரமிடு அமைத்து தயிர் பானையை உடைத்த மெய் சிலிர்க்க வைக்கும் சாகச காட்சிகளை பொதுமக்கள் பிரமித்து பார்த்து ரசித்தனர்.
ஷிண்டே, பட்னாவிஸ் பங்கேற்பு
மும்பை, தானேவில் தங்களது கட்சி சார்பில் நடந்த உறியடி நிகழ்ச்சிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினர். பல இடங்களில் நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
தஹி ஹண்டி கொண்டாட்டம் காரணமாக நேற்று மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முக்கியமான இடங்கள், சாலை பகுதிகளில் அதிகளவில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். மதுகுடித்து வாகனம் ஓட்டும் நபர்களை பிடிக்க அதிக இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.