விவசாயிகள் தற்கொலையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது; ஜெயந்த் பாட்டீல் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தொடர் வறட்சி
மரத்வாடா மண்டலம் வறட்சி பாதித்த பகுதியாக உள்ளது. விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள இந்த பகுதிகளில் தொடர் வறட்சி, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 856 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
விவசாயிகள் தற்கொலை
மாநில அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும், அதன் தலையில் உள்ள விவசாயிகள் தற்கொலை கறையை துடைக்க முடியாது. விவசாயிகள் தற்கொலையில் இருந்து மராட்டியம் விடுபடும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக மரத்வாடாவில் விவசாயிகள் தற்கொலை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 8 மாதங்களில் 865 விவசாயிகள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 முதல் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடன்சுமை, நிலத்தின் மலட்டுத்தன்மை, மாறிவரும் பருவ நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக மோசமாகி உள்ள விவசாயிகளின் நிதிநிலையை மீட்க அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்