உத்தவ் தாக்கரே கட்சி எதிர்ப்பு எதிரொலி; சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் வெளிநாட்டு பயணம் ரத்து
உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் ராகுல் நர்வேக்கரின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் ராகுல் நர்வேக்கரின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்துக்கு எதிர்ப்பு
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆப்பிரிக்க நாடான கானாவில் நேற்று தொடங்கி வருகிற 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் கலந்து கொள்ள இருந்தார். இந்தநிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் ராகுல் நர்வேக்கர் வெளிநாடு செல்வதாக உத்தவ் தாக்கரே சிவசேனா குற்றம்சாட்டியது. இதுகுறித்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், " மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் செல்லும் குழுவில் முதலில் ராகுல் நர்வேக்கர் பெயர் இல்லை. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் அவரது பெயர் பின்னர் சேர்க்கப்பட்டது " என்றார்.
பயணம் ரத்து
ஜனநாயகத்தை கொலை செய்யும் ராகுல் நர்வேக்கர், கானாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என ஆதித்ய தாக்கரே விமர்சித்து இருந்தார். உத்தவ் தாக்கரே கட்சி எதிர்ப்பை அடுத்து ராகுல் நர்வேக்கரின் கானா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. " சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கும், ராகுல் நர்வேக்கர் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும் தொடர்பு இல்லை. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விசாரணை வருகிற 13-ந் தேதி தான் தொடங்க உள்ளது " என சட்டசபை அதிகாரி ஒருவர் கூறினார்.