உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம விமர்சனத்தை கண்டிக்காதது ஏன்?- உத்தவ் கட்சிக்கு ஷிண்டே கேள்வி


உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம விமர்சனத்தை கண்டிக்காதது ஏன்?- உத்தவ் கட்சிக்கு ஷிண்டே கேள்வி
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்த விமர்சனத்தை கண்டிக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் என்று உத்தவ் சிவசேனாவுக்கு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பி உள்ளார்.

தானே,

உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்த விமர்சனத்தை கண்டிக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் என்று உத்தவ் சிவசேனாவுக்கு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பி உள்ளார்.

சனாதனத்தை ஒழிக்க முடியாது

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் தானேயில் தஹி ஹண்டி (உறியடி) கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகள் குறித்து பேசாமல் இந்தியா கூட்டணி கட்சியினர் வாய்மூடி மவுனம் சாதித்து வருகின்றனர்.

எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது. இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் இந்துக்கள், இந்துத்வாவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். அவர்களின் உண்மையான முகம் தற்போது அம்பலமாகிவிட்டது.

தயிர்பானை உடைப்பார்..

தற்போது சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே இருந்திருந்தால் மணிசங்கர் அய்யர், சாவர்க்கர் குறித்து பேசிய கருத்துகளுக்காக ஒரு காலத்தில் எதிர்கொண்ட விமர்சனங்களை இவர்கள் தற் போது எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரை பின்பற்றுவதாக கூறிக்கொள்பவர்கள் (உத்தவ் சிவசேனா) தற்போது வாய் திறக்கவில்லை.

முதல்-மந்திரி பதவிக்காக தங்களின் விசுவாசத்தை விற்றவர்கள், தற்போது விசுவாசத்தை பற்றி பாடம் எடுக்க கூடாது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் தயிர்பானையை உடைப்பார் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சியால் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தாலும், அந்த வெற்றிக்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் இருந்தது.

இவ்வாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.


Next Story