இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைநீக்கம் ரத்து


இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைநீக்கம் ரத்து
x
தினத்தந்தி 13 Jan 2017 6:45 PM GMT (Updated: 13 Jan 2017 5:04 PM GMT)

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது.

புதுடெல்லி,

சென்னையில் கடந்த டிசம்பர் 27–ந் தேதி நடந்த இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் தலைவர்களான சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதலா ஆகியோரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவர்களாக நியமனம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலில் சிக்கி ஜெயிலுக்கு சென்ற சுரேஷ் கல்மாடியையும், சொத்து குவிப்பு வழக்கில் மாட்டி இருக்கும் சவுதாலா ஆகியோருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மீண்டும் பதவி அளிப்பதா? என்று கடும் எதிர்ப்பு நிலவியது. இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பிய மத்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த 30–ந் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணிந்த இந்திய ஒலிம்பிக் சங்கம் கல்மாடி, சவுதாலா ஆகியோரின் நியமனத்தை சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதனை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைநீக்கத்தை நேற்று மத்திய விளையாட்டு அமைச்சகம் நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது. இது மத்திய விளையாட்டு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார். 

Next Story