வல்லுனர் குழு அமைக்கவேண்டும்


வல்லுனர் குழு அமைக்கவேண்டும்
x
தினத்தந்தி 5 April 2022 6:24 PM GMT (Updated: 5 April 2022 6:24 PM GMT)

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளை ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கவேண்டும் என அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளை ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கவேண்டும் என அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
தனியார் ஆஸ்பத்திரி
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மனித உயிர் சம்பந்தமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். புதுச்சேரி நகர பகுதி முழுவதும் புற்றீசல் போன்று பல தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள், பரிசோதனை கூடங்கள் உருவாகி வருகின்றன. இங்கு போதிய மருத்துவ வல்லுனர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளனரா என்பதை பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்வதில்லை.
மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் அறுவை சிகிச்சை செய்யும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆபரேஷன் தியேட்டர்களில் போதிய நவீன கருவிகள் இல்லாமலேயே ஆபரேஷன் செய்யப்படுகிறது. பரிசோதனை கூடத்திற்கு அனுமதி பெற்றதை வைத்துக்கொண்டு அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம் பார்ப்பதும், பிரசவ நேரத்தில் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையில் ஆபரேஷன் செய்ய நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக அனுப்புவதும், அதனால் பல நோயாளிகள் மரணமும் அடைகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரி, பரிசோதனை கூடங்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு வல்லுனர்கள் குழு
சமீபத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த பெண் திடீரென மரணமடைந்தார். அந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஆபரேஷன் தியேட்டரில் போதிய உள்கட்ட வசதி உள்ளதா? அதற்காக நவீன கருவிகள் உள்ளதா? ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் அதற்கேற்ப சிறப்பு மருத்துவர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
புதுவை மாநிலத்தில் தனியாரால் நடத்தப்படும் ஆஸ்பத்திரிகள் மருத்துவ சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழுவை அரசு அமைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story