வீட்டுக்குள் முளைக்கும் விபரீதங்கள் : (குழந்தைகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள்)


வீட்டுக்குள் முளைக்கும் விபரீதங்கள் : (குழந்தைகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள்)
x
தினத்தந்தி 30 Sept 2018 5:02 PM IST (Updated: 30 Sept 2018 5:02 PM IST)
t-max-icont-min-icon

நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது. நாம் நம்பும்படியான சம்பவங்கள் நமது வீட்டிற்குள்ளும் நடக்கும்.

வெளியேயும் நடக்கும். ஆனால் அதன் உண்மை இன்னொருவிதமானதாக இருக்கும். அதுபோல் பிரச்சினைக் குரிய விஷயங்கள் எங்கேயாவது நடந்து, அது நமது கவனத்திற்கு வரும்போது ‘எங்கோ.. யாருக்கோ நடந்திருக்கிறது.. நமக்கென்ன..’ என்று கடந்துபோய் விடக்கூடாது. ஏனென்றால் அதுபோன்ற சம்பவம் நமது வீட்டிலும் நடக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படுவது நமது மகனோ, மகளாகவோ இருக்கவும்கூடும்.

அதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை சொல்கிறேன். அவைகளில் வெளிப்படையாக நடந்தவை ஒன்றாக இருந்தது. கவுன்சலிங்கின்போது வெளிவந்த அதன் பின்னணி உண்மைகள் திடுக்கிட வைக்கும் விதத்தில் இன்னொருவிதமாக அமைந்திரு ந்தது.

முதல் சம்பவம்

அவள் ‘பிளஸ் ஒன்’ படித்துக்கொண்டிருக்கிறாள். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். அன்று மாலை நேரத்தில் அவளது வீட்டில் இருந்து திடீர் கூச்சல் கேட்டிருக்கிறது. அவள், திருடன்.. திருடன் என்று கத்தியிருக்கிறாள். அருகில் உள்ள வீடுகளில் இருந்து ஒருசிலர் விரைந்து வெளியே வந்தபோது, இளைஞன் ஒருவன் வேகமாக வெளியே ஓடியிருக்கிறான். யாரும் அவனை பிடிக்க முயற்சிக்கவில்லை. விசாரித்தவர்களிடம் அவள் ‘திருடன் திடீரென்று வீட்டிற்குள் புகுந்து என் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்தான். நான் சங்கிலியை பற்றிக்கொண்டு போராடினேன். அதில் ஒரு துண்டு அவன் கையில் சிக்கிக் கொண்டது’ என்று தனது கையில் இருந்த இன்னொரு துண்டை காண்பித்தாள். இரண்டு சவரன் சங்கிலியில் பாதி மட்டுமே அவன் கைக்கு சென்றதால், அவர்கள் போலீசிலும் புகார் செய்யவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து, மகளின் புத்தகப்பையை தாயார் எதற்கோ துழாவ, திருடன் கையோடு கொண்டு போனதாக கூறப்பட்ட ஒரு துண்டு சங்கிலி அங்கே இருந்தது. அதை பார்த்ததும் பெற்றோருக்கு அதிர்ச்சி!

தெரியவந்த உண்மை

அவள் கூறியதுபோல் அவன் திருடன் அல்ல. அவளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அறிமுகமானவன். ஒருவருட இணையதள நட்பிற்கு பிறகு அவர்கள் நேரிலும் பலமுறை சந்தித்திருக்கிறார்கள். அன்று அவள் தனியாக வீட்டில் இருந்ததால், வீட்டிலே சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்கள். திட்டமிட்டபடி அவன் வீட்டிற்குள் நுழையும்போது பக்கத்து வீட்டில் இருந்து யாரோ அவனை பார்த்துவிட்டார்கள். அவர் தன்னை சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்று நினைத்த அவள், சங்கிலியை அவளே அறுத்து கையில் வைத்துக்கொண்டு, அவனை ஓடச் சொல்லிவிட்டு திருடன்.. திருடன்.. என்று கத்தியிருக்கிறாள்.

இரண்டாவது சம்பவம்

அவள் ‘பிளஸ்-டூ’ மாணவி. தனிமை விரும்பி. ஆறு மாதங் களுக்கு முன்பு அவளுக்கு கலகலப்பான கல்லூரித் தோழி ஒருத்தி அறிமுகமானாள். இருவரும் நெருக்கமாக பழகினார்கள். கல்லூரித் தோழி இவளுக்கு அவ்வப்போது பரிசுகள் வழங்கிக்கொண்டிருப்பாள். தனது உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்கள் வரும்போதெல்லாம் பரிசுகள் தருவதாகவும், அதை தனக்கு பிடித்தமான தோழியான இவளுடன் பகிர்ந்துகொள்வதாகவும் சொன்னாள். அதில் விலை உயர்ந்த பரிசுகளும் இருந்தன. அவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியேயும் செல்வார்கள். பள்ளி மாணவியின் பெற்றோர் அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.

அன்று அந்த கல்லூரித் தோழி வந்து இவளை வெளியே செல்வதற்காக அழைத்தாள். இவள் அவளோடு செல்ல மறுத்து, அடம் பிடித்தாள். அவளோ அழைத்துச் செல்வதில் உறுதி யாக இருந்தாள். அதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பும் உருவானது. அப்போது, கல்லூரி தோழி தனக்கு வழங்கிய பரிசுகளை எல்லாம் அவள் வீட்டிற்கு வெளியே தூக்கிவீசினாள். பதிலுக்கு அவள் ‘உன்னை என்ன செய்கிறேன்.. பார்..’ என்று மிரட்டினாள். அதுவரை வீராவேசமாக காணப்பட்ட அந்த பள்ளி மாணவி, அந்த மிரட்டலுக்கு பயந்து குழந்தை போன்று அழத் தொடங்கினாள்.

பின்னணி உண்மை

தனிமை விரும்பியான இவளிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்ட அந்த கல்லூரித் தோழி, நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்பு ஒருநாள் பேஸ்புக்கில் உள்ள ஒரு ஆணின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக்கொள்ளும்படி அவளிடம் கூறியிருக்கிறாள். இவளும் அதை செய்திருக்கிறாள். பின்பு அந்த நபரோடு நட்பை பராமரிக்கும்படியும் வற்புறுத்தியிருக்கிறாள். அடுத்து அவரிடம் இருந்து பரிசுகளை பெற்று இவளுக்கு கொடுத்திருக்கிறாள். அவைகளைதான் தனது உறவினர் தந்த பரிசு என்று, இவளிடம் பொய் சொல்லியுள்ளாள். தனது வீட்டிற்கு இருவரையும் வரவழைத்து சந்திக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறாள். அடுத்தகட்டமாக அன்று காரில் வந்து காத்திருந்த அவனோடு இவளை வெளியே செல்லும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறாள். அவள் மறுத்ததால்தான் இருவருக் குள்ளும் மோதல் வந்திருக்கிறது. அப்போதுதான், ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று மிரட்டியிருக்கிறாள். அந்த நபரும், இவளும் கல்லூரித் தோழியின் வீட்டில் சந்தித்தபோது, அதை அவள் படமாக்கிவைத்திருக்கிறாள். அதை வைத்துதான் அப்படி மிரட்டியிருக்கிறாள் என்பது பின்பு கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு பெண்களின் அம்மாக்களும் நீர் நிறைந்த கண் களோடு தவித்தது பரிதாபத்திற்குரியதாக இருந்தது. சரியான திட்டமிடல் மற்றும் கவுன்சலிங் மூலம் இரு பெண்களும் அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிவிட்டாலும் கண்ணுக்குத் தெரியாமல், கவனத்திற்கு வராமல் தினமும் இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு வீடுகளில் நடந்துகொண்டிருக்கின்றன.

தினமும் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மகள் ஒரு நாள் தாமதமாகிவிட்டாலே என்ன வென்று காரணம் கேட்கும் அம்மாக்கள், அவள் இரவில் வெகு நேரம் விழித்திருந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும்போது, ‘அவள் பெரிய படிப்பு படிக்கிறாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் வேலை பார்க்கிறாள்’ என்று உண்மை தெரியாமல், தங் களை தாங்களே சமா தானம் செய்து கொள் கிறார்கள். கால நேரம் என்பது எல்லாவற்றுக் குமே உண்டு. சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும். பிள்ளைகள் நேரங் கடந்து எதை செய்தாலும் அதற்குள் தாமதம் மட்டு மல்ல, தவறுகளும் இருக்கக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்து விழிப்படைய வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள், வீட்டுக்கு வெளியேதான் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைகளும், ஆபத்துக்களும் இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகள் வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிரு க்கிறார்கள். அந்த பிள்ளைகள் வீடு திரும்பியதும், அவர்களை கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பான அறைக்குள் இருந்துகொண்டுதான் பிரச்சினைக் குரிய செயல்களை தொடங்குகிறார்கள்.. தொடருகிறார்கள்..! உங்கள் வீட்டில் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுவர் அளவுதான் இடைவெளி இருக்கிறது. அந்த சிறிய இடைவெளிக்குள் உங்களுக்கு தெரி யாமலே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டர் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் விபரீதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திருடர்களுக்கும், வழிப்பறி செய்பவர்களுக்கும் பயந்து, குழந்தை களிடம், ‘அறிமுகமற்ற யாரிடமும் பேசாதே’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை பின்பற்றும் அவர்கள் இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத ஏராளமான நபர் களோடு பழகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு சாட்டிங், போஸ்டிங் என்று கண்டதையும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.

உங்கள் குழந்தைகளும் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளட்டும் என்று கருதி நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்திருந்தால் அவர்களது செயல்பாடுகளை கவனியுங்கள். போனில் அழைப்புகளோ, தகவல்களோ வரும் போது பயம் கொள்ளுதல், பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழித்தல், காரணமில்லாமல் திடீர் கோபம் கொள்ளுதல், வன்முறையை கையாளுதல், படிப்பில் பின்தங்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக்- வாட்ஸ் ஆப்- ஈமெயில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல், பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்போது ஆப் செய்தல், எப்போதும் பதற்றமாக காணப்படுதல், மன அழுத்தத்திற்கு உள்ளாகுதல், சுத்தத்தை பேணாதிருத்தல் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் வலைத்தள சிக்கல்களால் ஏதாவது சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.

குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அறிவு உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வதாக நாம் நம்பி ஏமாந்து போய்விடக்கூடாது.

ஏன்என்றால், அதன் அதிக பயன்பாடு ஒட்டுமொத்தமாக அவர்களது உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கிறது.

புதுப்புது தொழில் நுட்பங்கள் குழந்தைகளிடம் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்கு கின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் முன்பைவிட கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டியதிருக்கிறது.

வீட்டிற்குள் இருந்து விரல்களை பிடித்து வெளியே அழைத்துச் சென்று இந்த உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத் திய நீங்கள்தான், தொடுதிரைகளில் அவர்கள் தேவையில்லாமல் விரல்களை பயன்படுத்தி புதிய சிக்கல்களில் சிக்கு வதை தவிர்க்கவும் வழிகாண வேண்டும். பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். விப ரீதங்களை தவிர்த்திடுங்கள்.

- விஜயலட்சுமி பந்தையன். 
1 More update

Next Story