பாட்டிலே கம்பன்...! வாழ்விலே கர்ணன்...!


பாட்டிலே கம்பன்...! வாழ்விலே கர்ணன்...!
x
தினத்தந்தி 16 Oct 2018 7:17 AM GMT (Updated: 16 Oct 2018 7:17 AM GMT)

நாளை (அக்டோபர் 17-ந்தேதி) கவிஞர் கண்ணதாசன் நினைவு தினம்.

‘என்னங்க அந்த வீட்டை வித்து தான் ஆகனுமா? அம்மா மெல்லிய குரலில் அப்பாவிடம் கேட்கிறார். இரவு மணி 10.30 இருக்கும். அப்பா பாட்டெழுதி விட்டு வீட்டுக்கு வந்து சிந்தனை செய்கின்ற நேரம். அவராக அழைத்தால் மட்டுமே அந்த நேரத்தில் அவரது அறைக்குள் நாங்கள் செல்ல முடியும். அம்மாவின் குரல்கேட்டு, அப்பாவின் அறை வாசலில் படுத்திருந்த நானும் எனது சகோதரர்களும் மெல்லதலையை நீட்டி அறைக்குள்ளே பார்க்கிறோம். அப்பா தலையை குனிந்தபடி யோசனையில் இருக்கிறார்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்படும் செட்டியார்களிடம் ஒரு வழக்கம் உண்டு. பிள்ளைப் பேறு இல்லாத வசதியான செட்டியார்கள், வசதி குறைந்த செட்டியார்கள் வீட்டு பிள்ளைகளை சுவீகாரம்(தத்து) எடுத்துக் கொள்வார்கள். அப்படி வசதியான வீட்டுக்கு தத்து போனவர்களில் பெரும்பாலானோர் தங்களது ,புதிய செல்வச்சூழலில் தங்களது தாய் வீட்டை மறந்து போவது சகஜம்.

அப்பா மட்டும் விதிவிலக்கு. வசதி குறைந்த வீட்டில் இருந்து வசதி குறைந்த வீட்டுக்கு தத்து போனவர் அப்பா.ஆனால் பிறந்த வீட்டில் இருந்தவர்களை தன் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றினார். அப்பாவின் மூத்த சகோதரி ஒருவர் இளம் வயதிலேயே இறந்து போனார்.அவர் இறக்கும் தருவாயில் அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு” முத்து.. என் பிள்ளைகளை உன்னை நம்பி விட்டுட்டு போறேன்“ என்று சொல்லி விட்டு மரணமடைந்துவிட்டார். அந்தப் பிள்ளைகளை அப்பா தான் வளர்த்தார். அதில் முதல் பெண்ணுக்கு திருமணம். அதற்காக மந்தை வெளியில் இருந்த ஒரு சிறிய வீட்டை விற்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்.அது குறித்து அம்மா சொன்னதைதான் முதல் வரியில் நீங்கள் படித்தீர்கள்.

“பார்வதி, எப்ப வேணும்னாலும் வீடு வாங்கலாம், ஆனா நல்ல மாப்பிள்ளை வரும் போது கல்யாணத்தை முடிச்சிடணும்.நம்ம பிள்ளைகளுக்கு வேணுமேனு யோசிக்காத, நிச்சயமா நம்மபிள்ளைகள் நல்லா இருப்பாங்க” அப்பா சொல்ல, அம்மா மவுனமாக இருக்கிறார்.

சென்னை நகரில் அப்பா வாங்கிய நான்கைந்து வீடுகளும் உற்றார் உறவினர் பிள்ளைகளின் திருமணங்களுக்கு விற்கப்பட்டுவிட்டன.ஆனால் அன்று இரவு அம்மாவிடம் அப்பா சொன்னது போல இன்று வரை கவிஞரின் பிள்ளைகள் நாங்கள் அனைவரும் நன்றாக,வசதியாகவாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கண்ணதாசனுக்கு மகனாக பிறக்க வேண்டி வரம் வாங்கிக் கொண்டு வந்து பிறந்ததாகவே நான் கருதுகிறேன்.

பதினான்கு பிள்ளைகள், இரண்டு மனைவியர், முப்பதுக்கும் குறையாத உறவினர்கள், பத்து உதவியாளர்கள், ஓட்டுனர்கள். இது தவிரவேலையாட்கள் ,கட்சிக்காரர்கள் என்று கவிஞரை நம்பி ஐம்பதுக்கும் அதிகமான குடும்பங்கள். இவர்கள் அனைவரையும் தன்னால் காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை அப்பாவிடம் இருந்தது. பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்.இல்லை என்று சொன்னதே இல்லை.

ஒருநாள் காலை. அப்பா வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டுஇருக்கிறார்.“ சார் மோடா” என்று வாசலில் ஒருகுரல்கேட்கிறது. பேப்பரில் இருந்து தலையை சற்று நிமிர்த்திப் பார்க்கிறார்.ஒரு வடநாட்டுக்காரன்,மோடா என்று சொல்லப்படும் பிரம்பு ஸ்டூல்களுடன் நின்று கொண்டிருந்தான்.ஏழு அல்லது எட்டு மோடாக்கள் அவன் உடலில் சுற்றி கட்டப்பட்டு இருந்தன.“ உள்ளே வா“ என்று அப்பா அவனை அழைத்தார். அவன் வந்து மோடாக்களை இறக்கி வைத்து விட்டு அப்பாடா என்று கீழே உட்கார்ந்தான். பிறகு அந்த மோடா மீது என்னை உட்கார சொன்னான். நான் உட்கார்ந்ததும் அதில் இருந்து பாட்டு சத்தம் கேட்டது. எனக்கும் என்சகோதரர்களுக்கும் ஒரேஆச்சரியம் .அந்த மோடாவின் உள்ளே ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ வைக்கப்பட்டு இருந்தது.அதன்மீது உட்கார்ந்தால் ஒரே ஒரு ஸ்டேஷன் ஒலிக்கும் வகையில் அது செய்யப்பட்டு இருந்தது.ஒருஅரைமணி நேரம் கழித்து வீட்டில் அங்கங்கே பாட்டு சத்தம் கேட்டு, அம்மா வேகவேகமாக வாசலுக்கு வந்து பார்த்தால் ஏழு மோடக்களை வாங்கியிருந்தார்அப்பா.

“ஒண்ணு வாங்குனா போதாதா? எல்லா மோடாவும் ஒரே ஸ்டேஷன்தான் எடுக்கும்..எதுக்கு காசைவீணாக்குறீங்க?“ என்றுஅம்மாகேட்க

“ஒண்ணு வாங்குனா எல்லாம் சண்டை போட்டுக்குவாங்க. அந்த மோடாக்காரன் பாவம், இந்த வெய்யிலில இவளோத்தையும் தூக்கிக்கிட்டு தெருத்தெருவா அலையணும்”. இதுஅப்பா.

பாட்டெழுத உட்கார்ந்தால் சரஸ்வதி அருளால் வார்த்தைகள் எப்படி பிரவாகமாக வந்ததோ, அதேபோல கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் போதெல்லாம் லட்சுமி கடாட்சத்தால் பணம் வந்து கொண்டே இருந்தது.

எப்போதும் அவர் மனதில் இரக்கம் , இரக்கம், இரக்கம்.

எம்.ஜி.ஆர், சிவாஜியை விட அதிகம் சம்பாதித்தவர் அப்பா. ஆனால் ஒரு ரூபாய் கூடதவறான வழியிலோ, அரசியல்ஆதாயத்தினாலே வந்தது இல்லை. நேர்மையாக வாழ்ந்தால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எங்களுக்கு புரியும்படி வாழ்ந்து காட்டியவர்.

“1960-ம் வருடத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் உனக்கு இந்த விருதை தந்திருக்கணும்டா”- மோகன்குமாரமங்கலம்

‘டேய் தமிழ்நாட்டுல ஏதோ ஒரு மூலையில யாரோ ஒருத்தன் ஒரு பாட்டை கேட்டுட்டு, இது கண்ணதாசன் பாட்டுனு சொல்றான் பாரு, அது ஆயிரம் தேசியவிருதுகளுக்கு சமம்’. -இது அப்பா. அப்பாவின் நெருங்கிய நண்பரான மோகன்குமாரமங்கலம், மத்திய அமைச்சர் ஆனபோது, அப்பாவின் பெயரை சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதைத் தான் அப்பா பதைபதைத்துப் போய் வேண்டாம் என்று சொன்னார்.

தமிழ்நாட்டின் ஆறு முதல்-அமைச்சர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். ஆனால் அப்பா யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்த்தது இல்லை. தன் செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதை அவர் தன் வாழ்நாளில் செய்ததே இல்லை.

“டேய் நாகர்கோவிலுக்கு போறேன், வறீங்களா? ” அப்பா கேட்டது எங்களுக்கு ஒரே குஷி. எல்லா சகோதரர்களும் ஒரே குரலில் “சரி“ என்று கத்தினோம். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது. அம்மா மட்டும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். காரணம் ஒருதேர்தல் பிரச்சாரத்திற்காக அப்பா போகிறார் என்பது.

1969-ம் ஆண்டு. நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேசமணி காலமானதால் நடந்த இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரம் செய்ய அப்பாவும் ஜெயகாந்தனும் சென்றனர். எங்களுக்கு பள்ளிவிடுமுறை என்பதால் எங்களையும் அழைத்து சென்றார். நான் சிறுவனாக இருந்தாலும், காமராஜர் அய்யாவுக்கு கிடைத்த மரியாதை என்னை பிரமிக்க வைத்தது. அப்பாவும் ஜெயகாந்தனும் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. நிச்சயம் காமராஜர் வெற்றி பெறுவார் என்று தெரிந்ததும் அப்பாவுக்கு சந்தோஷம், கன்னியாகுமரியில் மெரிலாண்ட் சுப்ரமணியம் விருந்தினர் மாளிகையில் அனைவரும் தங்கினோம். தினமும் காலையில் அங்கிருந்து கிளம்புவோம். வழியில் எங்காவது குளத்தை கண்டால் வண்டியை நிறுத்த சொல்லி அப்பாவும் ஜெயகாந்தனும் குளத்துக்குள் இறங்கி விடுவார்கள். உடன் வந்த நண்பர்கள் எல்லாம்“ என்னங்க இவங்களும் குழந்தைகளோட குழந்தைகளா மாறிடுறாங்க“ என்று பேசிக்கொள்வார்கள். அப்பாவை அவ்வுளவு சந்தோஷமாக நாங்கள் அதற்கு முன் பார்த்தது இல்லை. பதினைந்து நாட்கள் முழுக்க முழுக்க அப்பாவுடன் நாங்கள் இருந்ததும் அது தான் முதல் தடவை. இன்றைக்கும் எங்கள் வீட்டு விழாக்களில் கூடும் போது அந்த இடைத்தேர்தல் நினைவுகளைப் பற்றி பேசாமல் இருந்தது இல்லை.

நான் கண்ணதாசனின் மகன் என்ற கர்வம் எனக்கு உண்டு. ஆனால் தான் கண்ணதாசன் என்ற கர்வம் அப்பாவுக்கு என்றும் இருந்தது இல்லை. யாராவது அவரைப் புகழ்ந்தால் கூச்சத்தில் நெளிய ஆரம்பித்து விடுவார். வாய்ப்புக்காக யாரையும் புகழ்ந்து பேசியதும் இல்லை, வாய்ப்பு தராததால் இகழ்ந்ததும் இல்லை. அவர் நினைத்து இருந்தால் பத்துவருடங்கள் தமிழ்சினிமாவில் எல்லா படங்களுக்கும் அவரேபாடல்கள் எழுதி இருக்கலாம். புதிதாக பாடல் எழுத வந்தவர்களை போட்டியாக நினைத்தது இல்லை.

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்“ என்ற தனிப்பாடலை அப்பாவிடம் போட்டுக்காட்டி, இது போல ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார் இயக்குனர். முழுபாடலையும் கேட்ட அப்பா, “இதுவே ரொம்ப நல்லா இருக்கு. அதுல“ சென்னையிலே கந்தகோட்டம் உண்டு” ங்கிற வரியை மட்டும் “சிறப்புடனே கந்தகோட்டம் உண்டு “என்று மாற்றிக் கொள்ளுங்கள்“ என்று அந்தபாடலை ,அந்தபாடல் ஆசிரியர் பெயரிலேயே வெளியிட செய்தார். பூவை செங்குட்டுவன் என்றஅந்த பாடல் ஆசிரியரின் திரையுலக பிரவேசத்திற்கு கதவுகளை திறந்துவிட்டார். மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம் உருகி ஓடும் மெழுகை போல ஒளியை வீசலாம்” தான் எழுதிய வரிகளைப் போல வாழ்ந்து மறைந்தவர் அப்பா. அதனால் தான் அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார், நிலைத்திருக்கிறார்.

-அண்ணாதுரை கண்ணதாசன், (கவிஞர் கண்ணதாசன் மகன்)

Next Story