இணைய வலையில் தகவல் புறாக்கள்

இன்று (அக்டோபர் 24-ந்தேதி) உலக தகவல் வளர்ச்சி தினம்
புறாக்களின் கால்களில் தகவல்களைக் கட்டி அனுப்பிய கதைகள் இப்போது வேடிக்கையாய் இருந்தாலும், வரலாற்றில் அது நிகழ்த்திய பங்களிப்பு மகத்தானது. கடல், மலை கடந்து இன்னொரு ஊருக்கு, இன்னொரு நாட்டுக்கு செய்திகளை அனுப்ப புறாக்கள் தான் பயன்பட்டன. ஒற்றர்கள் தகவல்களைச் சுமந்து செல்வதில் இருந்த தாமதங்களையும், ‘தகவல் கசிவு’ போன்ற பாதுகாப்பு சிக்கல்களையும் புறாக்கள் சரிசெய்தன. காலநிலைகளைப் பொருட்படுத்தாமல் அவை கன கச்சிதமாகத் தகவல் பரிமாற்றை நிகழ்த்திக் காட்டின.
வரலாற்றுப் பதிவுகள் நமக்கு தகவல் பரிமாற்றத்தின் பல்வேறு நிலைகளை விளக்கிக் கொண்டே இருக்கின்றன. தோலில் செய்திகளை எழுதி வைப்பது, கல்வெட்டுகளில் செய்திகளை பதித்து வைப்பது, களிமண் ஓடுகளில் தகவல்களை எழுதி வைப்பது, எழுத்தாணி மூலம் ஓலைகளில் எழுதி வைப்பது என தகவல் வளர்ச்சி ஒவ்வொரு காலசூழ்நிலைக்கேற்ற வகையில் வளர்ந்து கொண்டே வருகிறது.
தபால் நிலையங்கள், அஞ்சல் துறை போன்றவையெல்லாம் வந்தபின் தகவல் பரிமாற்றங்கள் பெருமளவில் வளர்ச்சியடைந்தன. இதன் வேர்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் என்றாலும் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தான் இது முறைப்படுத்தப்பட்ட ஒரு வடிவத்தை எட்டியது. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் வந்தபின்பு தான் இது வளர ஆரம்பித்தது. கடந்த தலைமுறை மக்களுக்கெல்லாம் இன்னும் நினைவுகளில் அஞ்சல் நிலையங்கள் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை. இன்லண்ட் லெட்டர்களின் ஓரங்களிலும் கிறுக்கி எழுதிய சுவாரஸ்ய நினைவுகள் விலகுவதில்லை. தபால் கார்டு, தபால் கவர், இன்லண்ட் லெட்டர் போன்றவை தான் தகவல் பரிமாற்றத்தின் ஒரே ஆயுதமாக, வலுவாக இருந்த காலகட்டம் நீளமானது. தொலைபேசிப் பயன்பாடு வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து பரிமாற்றங்கள் குறையத் தொடங்கின. இருந்தாலும் ஸ்மார்ட்போன்களின் காலம் வரை அஞ்சல் துறையின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தொலைபேசி சேவை இந்தியாவில் 1881- களில் ஆரம்பிக்கப்பட்டபோது இந்திய அளவில் நூறை விடக் குறைவான எண்ணிக்கையில் தான் வாடிக்கையாளர்கள் இருந்தனர். அது படிப்படியாக வளர்ந்து 1990-களில் 200 பேருக்கு ஒரு தொலைபேசி என்ற அளவில் வந்து நின்றது. இன்றைக்கு ஒரு நபர் பல தொலைபேசியை வைத்து இருக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
தொலைபேசிக்கும், செல்போன்களுக்கும்இடையே நுழைந்த ஒரு தகவல் தொழில்நுட்பம் பேஜர். துரதிர்ஷ்டவசமாக அதன் ஆயுள் மிக மிகக் குறைவாக இருந்தது. பெல்டில் கட்டப்பட்டிருக்கும் ஒரு சின்ன கருவியில் செய்திகள் வரும். இது பெரும்பாலும் நிறுவனங்கள் தங்களுடைய விற்பனை பிரதிநிதிகளுக்கு செய்திகளை அனுப்பும் வகையில் பயன்பட்டது.செல்போன் வந்தபின் எஸ்.எம்.எஸ்கள் பேஜரின் தேவையை முழுவதுமாக ஒழித்து விட்டன. அந்தஸ்தின் அடையாளம், செல்வந்தர்களுக்கே உரியது என்றெல்லாம் இருந்த செல்போன்கள் இன்றைக்கு குடிசைகளிலும் நிரம்பியிருக்கின்றன.
இப்போது ஸ்மார்ட்போன்களின் காலம். இணையத்தின் வருகைக்குப் பின் ஸ்மார்ட்போன்களின் சிம்மாசனம் சரியவேயில்லை. ஸ்மார்ட் போன்கள் தின்று ஏப்பம் விட்ட தொழில் நுட்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்லண்ட் லெட்டர்களை மின்னஞ்சல்கள் விழுங்கின. பேஜர்களை எஸ்.எம்.எஸ்கள் தின்று தீர்த்தன. தந்திச் சேவையை குறுஞ்செய்திகள் இல்லாமல் செய்து விட்டன. கேசட்கள், சிடிக்கள் போன்றவற்றை டிஜிட்டல் வடிவ எம்பி 3 கள் இல்லாமல் செய்து விட்டன. டிவிடிக்களை டிஜிட்டல் வீடியோக்கள் முழுங்கி விட்டன. வகை வகையாய் வந்து கொண்டிருந்த கேமராக்களை செல்போன்களின் கேமராக்கள் நாடு கடத்தி விட்டன. இணையமும், சமூக வலைத்தளங்களும், ஸ்மார்ட் போன்களும் தகவல் வளர்ச்சியை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரத்தில் கொண்டு போய் வைத்திருக்கின்றன.
நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே ‘லைவ்’ ஆக காண்பிக்க பேஸ்புக் லைவ் உள்பட பல்வேறு செயலிகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் நடக்கின்ற காதுகுத்து, கல்யாணங்களை ஊரின் கிராமத்து சொந்தங்களும் இப்போது திண்ணையில் அமர்ந்து கொண்டே ரசிக்க முடிகிறது.
வீடியோ சேட்கள் தகவல் பரிமாற்றத்தை உணர்வு ரீதியாக மாற்றியிருக்கிறது. ‘எண்ணெய் தேய்ச்சு குளிடா’ என தூர தேசத்தில் இருக்கும் மகனுக்கு அம்மா தன் வெற்றிலை வாயோடு செய்தியைச் சொல்ல முடிகிறது. வீட்டில் இருக்கும் குழந்தையோடு அலுவலகத்தில் இருக்கும் அம்மா ‘சாப்டியா ?’ என நலம் விசாரிக்க முடிகிறது. நள்ளிரவு தாண்டிய பொழுதுகளிலும் நட்புகளும், காதல்களும் கவித்துவம் பேசித் திரிய முடிகிறது.
அலெக்ஸா, இன்னிக்கு மழை பெய்யுமா? சிரி, நுங்கம்பாக்கம் டிராபிக் எப்படி ? கூகிள், நல்லதா ஒரு பாட்டு போடு என இப்போது நமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல கருவிகள் காது திறந்துக் காத்திருக்கின்றன.உலகம் முழுவதும் இன்றைக்கு தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. அவையே நிறுவனங்களுக்கு லாபத்தை கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கின்றன. பிக்டேட்டா, இண்டர் நெட் ஆப் திங்க்ஸ், மெஷின் லேர்ணிங், ஆர்டிபிஷியல் இண்டெலிஜெண்ட் என எல்லாமே இன்றைக்கு தகவல்களின் மேல் கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களே.
உலக தகவல் வளர்ச்சி தினத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம், இன்றைக்கு எதுவும் ரகசியமாய் இல்லை என்பது தான். பொதுவெளியில் பேசுகிற, பகிர்கிற, எழுதுகிற எல்லா செய்திகளும் ஏதோ ஒரு தொழில்நுட்பத்தின் காது வழியாக இன்னொரு தொழில்நுட்பத்தின் மனதுக்குள் போய் அமர்ந்து கொள்கிறது. அதை அழிக்கவே முடியாது, ராவணன் தலை போல வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டே இருக்கும். விழிப்பாய் இருப்போம்!
- சேவியர்
Related Tags :
Next Story






