மீன்: வளர்க்கலாம்.. சம்பாதிக்கலாம்.. அலங்கார மீன் வளர்ப்பில் தண்ணீர் தர மேலாண்மை

அலங்கார மீன் வளர்ப்பு தொழில் இரண்டு விதங்களில் பலன் தருகிறது. ஒருபுறம் பொருளாதாரரீதியாக பலன்தருகிறது. மறுபுறம் குழந்தைகளுக்கு பயனுள்ள பொழுதுபோக்காகி, அவர் களது ஆளுமைத்தன்மையையும் வளர்க்கிறது.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வீடுகளில் வளர்க்கும் அலங்கார மீன்களால் குழந்தைகளின் கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது. அவர்களின் பொறுப்புணர்ச்சி கூடுகிறது. குழந்தைகள் உயிரினங்களின் வளர்ப்பு முறையை அறியவும் உதவுகிறது. அதனால் இந்த தொழில் உலகம் முழுக்க வளர்ந்துகொண்டிருக்கிறது.
சிறப்பு வாய்ந்த இந்த அலங்கார மீன் வளர்ப்பில், நீர் தர மேலாண்மை மிக முக்கியமானது. அதை சரியான முறையில் மேற்கொண்டால் மீன் வளர்வதற்குரிய நல்ல சூழ்நிலை அமையும். அதன் மூலம் நோய் பாதிப்பினை குறைத்து அதிக உற்பத்தியை பெறலாம். மேலும் சந்தையில் அதிக விலை போகும் தரமான மீன்களையும் உற்பத்தி செய்ய முடியும்.
நீர் தர மேலாண்மைக்கு பண்ணை யாளர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள்:
நீரின் வெப்பம்
கார அமிலத்தன்மை
உப்பின் அளவு
பிராணவாயு நிலை
கடினத்தன்மை
அமோனியா அளவு
நைட்ரேட் சீர்நிலை
பாஸ்பேட் அளவு
ஹைட்ரஜன்சல்பைடு
நீரின் வெப்ப நிலை
மீன் வளர்ப்பு தொட்டிகளில் இருக்க வேண்டிய தண்ணீரின் வெப்ப நிலை 26 முதல் 30 டிகிரி செல்சியஸ். இதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ வெப்ப நிலை இருந்தால் தொட்டிகளில் போதுமான அளவு நீர் மாற்றம் செய்து அதனை சீராக்கவேண்டும். பொதுவாக வெப்பம் மதிய வேளையில் தான் அதிகமாகும். அந்த நேரத்தில் காற்றுப்புகுத்திகளை இயக்கி வெப்ப நிலையை சீர்செய்யலாம். குளிர் பிரதேசங்களில் நீரின் வெப்பம் 26 டிகிரி செல்சியசுக்கும் கீழ் குறையும். அப்போது நீரின் வெப்பத்தை உயர்த்த தகுந்த வெப்பமேற்றும் கருவிகளை பயன்படுத்தவேண்டும். மேற்கண்ட முறைகளை பின்பற்றி நீரின் வெப்ப நிலையை பண்ணையாளர்கள் சீராக்கிக்கொள்ளவேண்டும்.
உப்பின் அளவு
அலங்கார மீன் வளர்ப்பில், நீரின் உப்பு அளவை அறிந்துகொள்வது மிக அவசியம். பல பண்ணையாளர்கள் இதனை கருத்தில்கொள்ளாமல் மீன் இனவிருத்தியில் ஈடுபட்டு பல்வேறு பாதிப்புகளில் சிக்கியிருக்கிறார்கள். மீன்கள் வளரும் நீரில் உப்பின் அளவு எப்போதும் சீரான நிலையில் இருக்கவேண்டும். தொட்டிகளில் நீர் மாற்றம் செய்யும் போதும், உப்பின் அளவில் அதிக மாற்றம் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம். உப்பின் அளவு சீராக இருந்தால் மீன்கள் நன்றாக வளரும். ஸ்கேட், கடல் ஏஞ்சல் ஆகிய மீன் இனங்கள், உப்பு மாற்றங்களை தாங்கும் திறன் கொண்டவை.
பிராணவாயு நிலை
பிராணவாயு அனைத்து நீர்வாழ் ஜீவராசி களுக்கும் தேவை. இது சராசரியாக நீரில் லிட்டருக்கு 3 முதல் 5 மில்லி கிராம் என்ற அளவில் இருக்கவேண்டும். நீரில் உள்ள பிராணவாயுவின் அளவு எப்போதும் சீராக இருப்பதில்லை. இது பல காரணங்களால் மாறுபடும். நீர்வாழ் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் நீர் பரப்பின் மேல் உள்ள அலைகள், நீரில் பிராணவாயு உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றன. நீரில் இருப்பு செய்த மீன்களின் சுவாசம், நீரில் இருக்கும் வெப்பம், நீரில் எஞ்சியிருக்கும் தீவனம், மீன் கழிவுகளின் சிதைவுகள் ஆகியவை, நீரில் பிராணவாயுவின் அளவினை நிர்ணயிக்கிறது.
இவைகளை பற்றி தெளிவாக தெரிந்துகொண்டு அதற்கேற்ப நீர் மேலாண்மை செய்தால் பிராணவாயுவின் அளவினை சீராக்கி மீன் உற்பத்தியை பெருக்கலாம். பிராணவாயு பொதுவாக காலையில் ஒளிச்சேர்க்கையினால் அதிகரிக்கும். இரவில் நீரில் உள்ள மீன்களின் சுவாசத்தால் அதி காலையில் குறைந்து காணப்படும். ஆகையால் அதிகாலையில் பிராணவாயுவின் அளவினை கணித்து சீராக்குவது சரியானது. இதற்கான பரிசோதனை கருவிகள் தற்போது எளிதாக கிடைக்கின்றன.
மீன் தொட்டிகளில் பிராணவாயு குறையும்போது காற்றுப்புகுத்திகளை இயக்கலாம். புதிய நீர் விடலாம் அல்லது பகுதி அளவு நீரை மாற்றம் செய்யலாம். பிராணவாயுவை லிட்டருக்கு 4 மில்லி கிராமுக்குள் வைத் திருப்பது மீன்கள் நன்கு வளர்வதற்கு ஏதுவானதாகும்.
கார அமிலத்தன்மை
நீரின் கார அமிலத்தன்மையை எளிதாக அளவிட்டுவிடலாம். இதை சரியான அளவில் பராமரித்தால் நோய் உருவாக்கும் கிருமிகளை கட்டுப்படு்த்தி விடலாம். பொதுவாக மீன்களுக்கு 7 முதல் 8.5 என்ற புள்ளிகள் வரை கார அமிலத்தன்மை இருக்கவேண்டும். ஒருவேளை இதைவிட அதிகமாக இருந்தால், நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். அது மட்டுமி்ன்றி நீரில் நுண்தாவரங்கள் நல்லமுறையில் வளரவும் செய்யும்.
அலங்கார மீன்களில் டிஸ்கஸ் எனப்படும் இனம் பார்க்க மிகவும் அழகானது. ஆனால் இதனை வளர்ப்பது கடினம். காரணம், இந்த மீன்கள் கார அமிலத்தன்மையை 6 முதல் 7 புள்ளி அளவுக்கு மட்டுமே தாங்கும். அதற்கு குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் டிஸ்கஸ் மீன் உடல் அழுத்தத்தினால் பாதித்து இறந்துவிடும். டிஸ்கஸ் மீனை வளர்ப்பவர்கள் பி.ஹெச். என்று சொல்லக்கூடிய கார அமிலத்தன்மை அளவை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் மாற்றம் ஏற்படும்போது நீர் மாற்றம் செய்து மீன்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பொதுவாக பொன்மீன், பார்ப், டெட்ரா, ஏஞ்சல் மீன்களுக்கு கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை அல்லது அதற்கு சற்று குறைவாகவும் இருக்கலாம். கப்பி, மோலி, பிளாட்டி போன்ற குட்டியிடும் மீன்கள் அதிக கார அமிலத்தன்மையையும் தாங்கக்கூடியவை.
- நீர் தர மேலாண்மை தொடரும்.
கட்டுரை:பேராசிரியர்கள் குழு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்.
Related Tags :
Next Story






