சிறப்புக் கட்டுரைகள்

சமய பொது நெறி காட்டிய மாமனிதர் + "||" + The man who showed the religious norm

சமய பொது நெறி காட்டிய மாமனிதர்

சமய பொது நெறி காட்டிய மாமனிதர்
நாளை (நவம்பர் 11-ந்தேதி)அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம்.
இந்திய விடுதலை போராட்டத்தில் இன்றியமையாத தலைவர்களில் ஒருவர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆவார். சுதந்திர இந்தியாவில் கல்வித்துறை அமைச்சராகச் செயல்பட்டு நவீன கல்வித்திட்டத்திற்கு அடிகோலியவர். குறிப்பாக, பல்கலைக்கழகமானியகுழு, சாகித்ய அகாடமி (இதன் பணி, இந்திய மொழிகளில் இலக்கியத்தை வளர்க்கவும், ஒரு மொழியில் உருவாகும் படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யவும், எழுத்தாளர்களை அங்கீகரிப்பதும் ஆகும்), லலித் கலா அகாடமி (காட்சிக் கலைகளை வளர்ப்பதும், கலைபண்பாடு இவைகளை ஊக்குவிப்பதும் இதன் பணி), இந்திய அறியவியல் தொழிற்நுட்ப கூட்டமைப்புகழகம், இந்திய கலாசார தொடர்புக் கூட்டமைப்பு என்று பல அமைப்புகளை நிறுவியவர்.


மவுலானாஆசாத் 1888-ம்ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி மெக்காவில் பிறந்தார். 1890-க்கு பிறகு கல்கத்தா திரும்பிய அவர் தனது பதினொன்றாவது வயதில் எழுத்தின் மீதிருந்த தீராத காதலால், ‘நைரங்இஅலாம்’ என்கிற மாதாந்திர பத்திரிகையைத் தொடங்கினார். சிறிய வயதிலேயே, எகிப்து, துருக்கி, சிரியா மற்றும் பிரான்சு நாடுகளுக்கு சென்று தனது அறிவை வளர்த்து கொள்கிறார். இதழியல் துறையில் பல்வேறு தகவல்களை கற்றறிகிறார். இத்தகைய அனுபவங்களைக் கொண்டு, 1908-ம்ஆண்டு ‘அல்ஹிலால்’ என்ற வார பத்திரிக்கை தொடங்கி இந்திய பத்திரிகை வரலாற்றில் பெரும் சாதனை படைத்தார். தனது எழுத்தின் மூலமாக, மக்களுக்கு சுதந்திரதாகத்தை ஊட்டினார். இஸ்லாமிய மக்கள் ஏனைய மக்களோடு இணைந்து இந்திய விடுதலைக்கு பாடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தினார். பொறுத்துப்பார்த்த பிரிட்டிஷ் அரசாங்கம், அவருக்கு அபராதம் விதித்தது. அதற்கு சிறிதும் கவலைப்படாமல் விடுதலை வேட்கையை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டார். 1915-ல் பத்திரிகை தடை செய்யப்பட்டது. அச்சு எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசாங்கம் ஆசாத்தை வங்காளத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டது. பல மாநிலங்களில் இவர் நுழைய தடைவிதிக்கப்பட்டது. பீகார் செல்ல மட்டும் அனுமதி கிடைக்கிறது. ஆனால், அவரது செயல்பாடுகளை நிறுத்தாதால் அரசு அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தலைச்சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் மற்றும் பத்திரிகையாளருமான ஆசாத் இந்தி, உருது, அரபி ஆங்கிலம், பெர்சியன், என பல மொழிகள் அறிந்தவர். ஒத்துழையாமை இயக்கம், உப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போன்ற முக்கிய விடுதலை போராட்டங்களில் கலந்து கொண்டு பெரும் பங்காற்றியவர். 1923ல், தன்னுடைய 35-வது வயதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி, இளவயதில் தலைவரானவர் என்கிற வரலாற்றுக்கு சொந்தக்காரரானார்.

‘வானிலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து டெல்லி குதுப்மினார் மீது அமர்ந்து இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கிறேன், ஆனால், அதற்கான விலையாக இந்து முஸ்லிம் ஒற்றுமை சீரழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், சுதந்திரத்தை கைவிட சம்மதிப்பேனே தவிர, இந்து முஸ்லிம் ஒற்றுமையை அல்ல. சுதந்திரம் கிடைக்காவிட்டால் நஷ்டம் இந்தியாவிற்கு, ஆனால், இந்து முஸ்லிம் ஒற்றுமை அழிந்தால், அது மனித இனத்திற்கே கேடு என்று 1923-ம்ஆண்டு, காங்கிரஸ் கட்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவராக வீரமுழக்கமிட்டவர் மவுலானா அபுல்கலாம்ஆசாத்,

ஆசாத், சுதந்திரத்திற்காக, நாட்டினை துண்டாடி விடக்கூடாது என்று கடைசி வரை உறுதியாக இருந்தார். சுதந்திர இந்தியாவை காணவேண்டும் என்கிற ஆர்வத்தில், இந்து முஸ்லிம் நல்லுறவினை குறித்து அவர் அளவிற்கு அன்றைய காலக்கட்டத்தில் எந்த தலைவரும்ஆழமாக சிந்திக்கவில்லை என்பதே யதார்த்தம். 1940-ல் பீகாரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தனது தலைமையுரையில் ஆசாத், ‘இந்தியாவில் பலமொழி பேசுபவர்களும், வெவ்வேறு இனத்தவர்களும் ஆயிரமாண்டுகளாக நீண்ட வரலாறு கொண்டவர்கள். அவர்கள் வேற்றுமைகளைத் தாண்டி இசை, உணவு, உடை, பாவனைகள் என பலவற்றில் பிணைந்து உள்ளனர். எந்தசக்தியும் நம்மை பிரித்து விட அனுமதிக்கக் கூடாது என்று முழக்கமிட்டார். பிரிட்டிஷ் அரசாங்கம் முன் வைத்த பிரிவினைக் கோரிக்கையை வன்மையாக எதிர்த்தார். இஸ்லாமியர்களுக்குஎன தனிநாடு அமைத்துக் கொடுத்தாலும், இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டு வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, சுதந்திர இந்தியா அனைத்து மதத்தினருக்கும், மற்றும் பல்வேறு மொழி, கலாசாரம் உடையவர்களை தன்னகத்தே கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக அமைய வேண்டும் என்று விரும்பியவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரு, வல்லபாய்பட்டேல் போன்றவர்கள், வைசிராய் மவுண்ட்பேட்டனின் பிரிவினைக்கான வாதங்களுக்கு செவிசாய்க்கும் போது ஆசாத் அதிர்ச்சியும் கவலையும் கொள்கிறார். தனது ஒரே நம்பிக்கையாக காந்தியை கருதுகிறார். ஒரு கட்டத்தில் பிரிவினைக்கு எதிரான காந்தியின் எதிர்ப்பு தளரும்போது மனம் வெதும்புகிறார். இருந்த போதும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

1958-ம்ஆண்டு தனது 70-வது வயதில் காலமானார். காலம் கடந்து, 1992-ல் அரசு இவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது. அவருடைய பிறந்தநாள் தேசியக் கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர வரலாறு எத்தனையோ ஆளுமைகள் கொண்டிருந்தாலும், மவுலானாஅபுல்கலாம் ஆசாத் சிறப்பான இடத்தை பெறுகிறார். வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மனிதநேயம் இவைகள் குறித்த அவரது ஆழ்ந்த கருத்துகள் என்றைக்கும் எப்பொழுதும் பொருந்தக்கூடியவை.

- கோ. ஒளிவண்ணன்