தவிடு நீக்கப்படாத அரிசியே வலிமை சேர்க்கும் உணவு...!


தவிடு நீக்கப்படாத அரிசியே வலிமை சேர்க்கும் உணவு...!
x
தினத்தந்தி 22 Nov 2018 6:03 AM GMT (Updated: 22 Nov 2018 6:03 AM GMT)

நெல்லின் மேல் இருக்கும் தோடாகிய உமியை மட்டும் நீக்கிவிட்டு முளைக்கும் சக்தியுள்ள முனை முறியாத தவிடு அகற்றப்படாத அரிசியை உணவாகப் பயன்படுத்தினால், உடல் மெலிந்தோரின் எடையைக் கூட்டும்.

நல்ல பசியை ஏற்படுத்தும். மலம் எளிதாகக் கழியும். சீரணக் குழாயில் நோய் உண்டாக்கும் கிருமிகள் தங்காமல் தடுக்கும். எலும்பு நரம்புகளுக்கு பலம் அளிக்கும்.

இந்திய தேசிய புற்று நோய் ஆய்வு மையம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவை என்று கூறுகிறது. தவிடு நீக்காத, முனை முறியாத அரிசியைச் சமைப்பதால் அந்த நார்ச்சத்து கிடைத்து விடும். புற்று நோய் அண்டாது.

உடல் நலம் காக்கும் நுண்ணுயிர்ச் சத்துக்களான சோடியம், மக்னிசியம், செலுனியம் கிடைப்பதோடு, இரும்புசத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி-12, வைட்டமின் கே, வைட்டமின் இ ஆகியவையும் கிடைக்கின்றன. இவற்றால் மனிதனுக்குத் தேவைப்படும் சத்துகள், உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உள்ளவை அனைத்தும் காக்கப்படுகின்றன.

அரிசியை நன்றாகத்தீட்டி, சிறிது தவிடு கூட இல்லாத வகையில் வெள்ளைவெளேர் என்று மல்லிகைப்பூப்போல் ஆக்கிவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா சத்துகளும் போய்விடுகின்றன. மாவுச்சத்து மட்டுமே மிஞ்சும். இந்த மாவு உடலில் அதிகம் சேரும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது. இளவயதில் நான் கைப்பந்து விளையாடுவேன்.போட்டி நடக்கும் சில நாட்களுக்கு முன்பிருந்தே எங்கள் தாய் எனக்கு அரிசித்தவிட்டை கருப்புக்கட்டி போட்டு விரவிக் கொடுப்பார்.பலம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

ஆன்மிகம் பரப்பும் ஆசானாக வாழ்ந்த வாரியார் சுவாமிகள், “புதுமண மக்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கும் வகையில் அர்ச்சதை தூவுகிறோம். அர்ச்சதை என்பது உலக்கை படாதது என்றும், நெல்லின் உமியைக் கைவிரல்களாலேயே பெயர்த்து முளைக்கும் முளையோடும், தவிடோடும் அரிசியை மணமக்கள் மீது தூவுவதே முறை” என்றும் ஒரு நிகழ்ச்சியில் கூறியதை நேரில் கேட்டேன்; விளக்கமும் பெற்றேன்.

காந்தி மகான், தவிடு நீங்காத கைக்குத்தல் மூலம் கிடைக்கும் அரிசியாலான கோதுமையிலான உணவையே உண்டார் என்பதை உலகம் அறியும்.

இப்போது போதுமான கைக்குத்தல் அரிசி கிடைப்பதில்லை. ஆலையில் தீட்டிய அரிசியே எங்கும் கிடைக்கிறது. நாம் அரிசி ஆலை வைத்திருப்போரிடம் உமியை மட்டுமே நீக்கும்படி கேட்டுக்கொள்ளலாம்.

தமிழக அரசும் மக்கள் நல்வாழ்வு கருதி இத்திட்டத்தை கையிலெடுத்துச் செயல்படுத்த வேண்டும். முதற்கட்டமாக நண்பகல் உணவு பெறும் ஏறத்தாழ 43 லட்சம் குழந்தைகளுக்கு தவிடு நீங்காத அரிசியில் சமைத்ததையே கொடுக்கவேண்டும்.

அரசு நடத்தும் நியாய விலைக்கடைகள் மூலம் தவிடு நீக்காத அரிசியையே வினியோகிக்க வேண்டும். அரிசி ஆலை வைத்திருப்போரிடமும், அரிசி விற்கும் வணிக பெருமக்களிடமும் மக்கள் நலத்தொண்டாகக் கருதி, தவிடு நீக்காத அரிசியையே மக்கள் வாங்கும் வகையில் செயல்பட்டு உதவுங்கள் என்று கேட்டுக்கொள்வோம்.

மக்களிடம் நீடித்த நாள், நோயற்ற வாழ்வு பெற தவிடு நீக்காத அரிசியையே சமையலுக்குப் பயன்படுத்துங்கள் என்று விழிப்புணர்வுப் பரப்புரை செய்யவேண்டும்.

தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றி உலகத்திற்கே நல்வழிகாட்டவேண்டும்.

- குமரிஅனந்தன்

Next Story