மார்கழிப்பூவே..


மார்கழிப்பூவே..
x
தினத்தந்தி 9 Dec 2018 7:35 AM GMT (Updated: 9 Dec 2018 7:35 AM GMT)

மார்கழி மாதம் மங்கையர்களுக்கு தனித்துவமானது. மற்ற மாதங்களை விட மார்கழியில் பெண்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.

கோலங்கள் தனிக்கவனம் பெறுவது மார்கழி மாதத்தில்தான். வழக்கமாக தினமும் போடும் கோலத்தை விட மார்கழியில் கோலம் போடுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்ற நாட்களைவிட அதிகாலையிலேயே விழித்தெழுந்து கோலம் போட தொடங்கி விடுவார்கள். அன்றாடம் குறுகிய அளவுகளில் எளிமையாக போடப்படும் கோலங்கள் மார்கழி மாதத்தில் பிரமாண்ட உருவமெடுத்துவிடும். அழகிய உருவங்களுடன் காட்சியளித்து ரசிக்க வைக்கும். மங்கையர்கள் தினமும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வது போல் மார்கழியில் தங்கள் வீட்டு கோலத்தை அழகுப்படுத்துகிறார்கள்.

பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுவது ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை அளிக்கும். அறிவியல் ரீதியாக மார்கழி மாதத்தில்தான் ஓேசான் படலம் அதிகாலையில் பூமிக்கு அருகில் நெருங்கி வரும். அதனால் பூமியையொட்டியிருக்கும் காற்று மண்டலத்தில் தூய ஆக்சிஜன் அடர்த்தியாக படர்ந்திருக்கும். அந்த சமயத்தில் கோலம் போடுவதன் மூலம் தூய காற்றை சுவாசிக்க முடியும். மேலும் மார்கழியில் பனியும், குளிர்காற்றும் கலந்திருக்கும்.

அந்த பனி கலந்த காற்று உடலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும். அந்த குளிர் காற்றை சுவாசித்துக்கொண்டு கோலம் போடும்போது தூய்மையான பிராண வாயு முழுமையாக உடலுக்குள் சென்றடையும். அதனால் பல சுவாச பிரச்சினைகள் தீரும். காலையில் குனிந்து, நிமிர்ந்து கோலம் போடும்போது உடல் இயக்கங்கள் சீராக நடைபெறும். சிந்தனை ஒருநிலைப்படும். புள்ளிகளை இணைப்பதற்கு ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சீராக கோடுகள் போடும்போது கவனச்சிதறல்கள் ஏற்படாது. அது கோலத்திற்கு மட்டுமல்ல, எல்லா செயல்களுக்கும் கைகொடுக்கும்.

புள்ளிக்கோலம் போடுவது மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சியாக அமையும். கவனமெல்லாம் புள்ளிகள் மீதே கூர்மையாக பதியும்போது கண் பார்வை திறன் மேம்படும். முன்னோர்கள் வயதான போதும் அவர்களுடைய கண்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு கோலக்கலை தான் காரணம். புள்ளிகள்தான் கோலத்திற்கு ஜீவனாகவும் அமைந்திருக்கின்றன. அவை வரையப்படும் கோடுகளை நெறிப்படுத்தி முழுமையான வடிவமாக்கி கோலமாக மாற்றுகின்றன. புள்ளிகள் ஒழுக்க வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு. புள்ளி பிசகாத நெறியான வாழ்க்கை வாழ்ந்தால், கோலம் போன்று வாழ்க்கை அழகாக அமையும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

மார்கழி கோலங்கள் புதிய அவதாரமெடுத்திருக்கின்றன. அவைகள் ரங்கோலி கோலம், சிக்கு கோலம், பூக்கோலம், தண்ணீர் கோலம், 3 டி கோலம், மயில் கோலம், தேர் கோலம், சங்கு கோலம், கத்திரிக்காய் கோலம், ரோஜா கோலம் என பல விதங்களில் இருந்தாலும் பச்சரிசி மாவை கொண்டு மாக்கோலம் போடுவதுதான் சிறந்தது. அது வெண்மை நிறத்தில் பளிச்சென்றும், பார்க்க அழகாகவும் இருக்கும். அவை எறும்பு, வண்டு, பறவை இனங்களுக்கு உணவாகவும் மாறும். அன்னதானம் வழங்கும் மன திருப்தியையும் கொடுக்கும். வெறுமனே கோலம் மட்டும் போடாமல் அதன் மத்தியில் சாணத்தை உருண்டையாக பிடித்து அதன் நடுவில் பூக்கள் வைப்பது கோலத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

கோலத்தின் நடுவே பூசணிப்பூவை வைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. அது மங்களத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் விரும்பிய கோலங்களை போடுவது சாத்தியமில்லாததாக இருக்கிறது. ஆனாலும் அங்குள்ள பெண்கள் ஒருங்கிணைந்து தங்கள் பகுதி முழுவதையும் கோலத்தால் அலங்கரிக்கலாம்.

மார்கழி மாதத்திற்கும், மங்கையர்களின் ஆரோக்கியத்திற்கும், கோலத்திற்கும் உள்ள தொடர்பை நினைவில் நிறுத்தி ஏதாவதொரு ரூபத்தில் கோலம் போடுவதற்கு முயற்சி எடுங்கள். மார்கழி மாத வழிபாடு பிரசித்தம். வீட்டில் கோலத்தின் மீதும் விளக்கேற்றி நிறைய பேர் வழிபடுவார்கள். கோவிலுக்கு சென்றும் சாமி தரிசனம் சென்று மனநிறைவுடன் வீடு திரும்புவார்கள். கோவில்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவார்கள். நிறையபேர் வீதிகளிலும் பஜனை பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்வார்கள்.

மார்கழி மாதத்தில் நடத்தப்படும் இசைக்கச்சேரிகளும் மனதிற்கு இதமளிக்கும். சபாக்களில் இசை விழா இடைவிடாமல் அரங்கேறிக்கொண்டிருக்கும். கச்சேரியில் பாடுபவர்களின் பாடல்களில் மட்டுமின்றி நேர்த்தியாக உடுத்தியிருக்கும் உடையிலும் கலையழகு வெளிப்படும். ஒவ்வொரு நாளும் விதவிதமான பட்டு ஆடைகளை உடுத்தி வந்து தோற்றத்திலும் அசத்துவார்கள். இசை விழாக்களை காண செல்லும் பெண்களும் அவர்களை போலவே ஆடைத்தேர்வில் ஆர்வம் கொள்வார்கள்.

மார்கழிமாத ஆன்மிக, கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் விருப்ப தேர்வாக பட்டுதான் இருக்கிறது. இளம் பெண்கள் பேஷன் ரக ஆடைகள் உடுத்துவதற்கு விரும்புவார்கள். அதிலும் பட்டின் சாயல் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அந்த ஆடைத்தேர்வுதான் பொங்கல் பண்டிகைக்கு அச்சாரம் விடுவதாக இருக்கும். பட்டு ஆடைகள் அதிக விலை கொண்டதாக இருக்கிறதா? என்பதை விட அவை அழகும், தரமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப விதவிதமான ஆடை ரகங்கள் அணிவகுக்க தொடங்கி இருக்கின்றன. காஞ்சி பட்டு, பரம்பரா பட்டு, சாமுத்ரிகா பட்டு போன்றவை அழகிய வேலைப்பாடுகளில் புதிய டிசைன்களுடன் மிளிர்கின்ரன. சில்க் வகை ஆடைகளிலும் இன்றைய டிரெண்டிற்கு ஏற்ற பேஷன் உலக புதுமைகள் இடம்பெற தொடங்கிவிட்டன. கோவிலுக்கு செல்லும் பெண்கள் பட்டுப்புடவையைத்தான் விரும்பி அணிகிறார்கள். அதில் இறை சார்ந்த நம்பிக்கையும் கலந்திருக்கிறது. பட்டுப்புடவை உடுத்தி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால், அது இறை சக்தியை உள்வாங்கி தரும் என்ற நம்பிக்கை பெண்களிடம் இருக்கிறது. ஆடையின் தன்மையும், அணியும் நேர்த்தியும், பளிச்சென்று வெளிப்படுத்தும் பளபளப்பும், அணியும் அணிகலன்களும் பெண்களுக்கு கூடுதல் அழகை தருகின்றன. பட்டு மோகம் உலகளவில் இந்தியாவிற்கு தனித்துவ அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இங்குதான் அதிக அளவில் பட்டு ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மகிழ்ச்சி ‘கோலம்’ பூண்டு வரும் மார்கழியை வரவேற்போம்.

பட்டுப் புடவைகள் வாங்கும்போது..

பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.

பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.

வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.

பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.

பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.

மல்லிகை பூச்சரம்

மார்கழிக்கும், மல்லிகைக்கும் தொடர்பு உண்டு. மணக்கும் மல்லிகைப்பூ மார்கழியில் பெண்களை சிலிர்க்க வைக்கிறது. பெண்களை அழகாக்கவும் செய்கிறது.

வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் மல்லிகை பூவையும் கொடுத்து உபசரிப்பார்கள்.

கோவிலுக்கு மல்லிகை மலர் சூடி சென்று வழிபடுவார்கள்.

மார்கழி மாதத்தில் பெண்களின் கூந்தலை அலங்கரிப்பதோடு பூஜையிலும் மலர்களுக்கு முக்கியத்துவம் மிகும்.

வழிபாட்டு தலங்களிலும், கச்சேரி நிகழ்வுகளிலும் இடம்பெறும் மலர் அலங்காரம் மன நிறைவை கொடுக்கும். 

Next Story