புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருத்துவம்


புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருத்துவம்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:14 AM GMT (Updated: 17 Dec 2018 11:14 AM GMT)

‘தன் கையே தனக்குதவி’ என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, ‘தன் நோய் எதிர்ப்பு மண்டலமே தனக்குதவி’ என்று நாம் தைரியமாகச் சொல்லலாம்.

ஏனெனில், ஒருவன் எவ்வளவு பெரிய மாவீரனாக அல்லது பலசாலியாக இருந்தாலும், அவனுடைய நோய் எதிர்ப்பு மண்டலமும் அதன் முக்கிய உயிரணுக்களான டி செல், டென்ரைட்டிக் செல் உள்ளிட்டவை சரியாக வேலை செய்யவில்லை என்றால், எவ்வளவு பலம்பொருந்தியவனாக இருந்தாலும் அது வீண்தான்.

நம் உடலில் உள்ள அந்நிய பொருட்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் மற்றும் புற்றுநோய் செல்களை தேடிக்கண்டுபிடித்து கொல்வது மட்டுமல்லாமல், அவற்றின் புரதங்களை டி செல்களுக்கு அடையாளம் காட்டும் மகத்தான ஒரு பணியை டென்ரைட்டிக் செல்கள் (Dendritic cells) எனும் ஒரு குறிப்பிட்ட வகை உயிரணுக்கள்தான் செய்கின்றன. ஆக, உடலுக்குள் ஊடுருவும் நோய்க்கிருமிகளில் எது ‘எதிரி’ என்று டி செல்களுக்கு காட்டிக் கொடுப்பதே இந்த டென்ரைட்டிக் செல்கள்தான்.

இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச்சென்ற ஜேம்ஸ் பி.ஆலிசன் மற்றும் தசுக்கு ஹோன்ஜோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் இம்மியூனோ தெரபி (Immuno therapy) என்று கூறப்படும், நோயாளியின் நோய் எதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான சிகிச்சை முறைக்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்திவரும் இந்த இம்மியூனோ தெரபி சிகிச்சை வேகமாக முன்னேறி வருகிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இம்மியூனோ தெரபிக்கு அவசியமான டென்ரைட்டிக் செல்களை புற்றுநோயானது செயலற்றுப்போகும்படி மாற்றி விடும் என்பதால், பல சமயங்களில் இம்மியூனோதெரபியானது பலனளிக்காமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இந்த நடைமுறை சிக்கலுக்கான தீர்வுகளை உருவாக்க பல ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் முதல் முறையாக, சுவீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனித தோல் உயிரணுக்களை நேரடியாக டென்ரைட்டிக் செல்களாக மாற்றி அசத்தியுள்ளனர். இதன் மூலமாக, பல நன்மைகள் உண்டு.

முதலாவதாக, நோயாளியினுடைய தோல் செல்களில் இருந்து டென்ரைட்டிக் செல்கள் உருவாக்கப்படுவதால் நோயாளியின் உடல் அவற்றை ஏற்காமல் போக வாய்ப்பே இல்லை. இரண்டாவதாக, நோயாளியினுடைய தோல் உயிரணுக்களை டென்ரைட்டிக் செல்களாக மாற்ற வெறும் 9 நாட்கள் போதும் என்பது பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், இதுபோன்ற பெரும்பாலான சிகிச்சைகளுக்கான செல்களை சோதனைக்கூடங்களில் தயார் செய்ய மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். அதற்குள் நோயாளி பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உயிர்ச்சேதம் கூட ஏற்பட்டுவிடக்கூடும்.

மூன்றாவதாக, தோல் செல்களில் இருந்து உருவாக்கப்படும் டென்ரைட்டிக் செல்களை நோயாளியின் உடலுக்குள் செலுத்துவதற்கு முன்னர், நோயாளியின் உடலில் உள்ள குறிப்பிட்ட செல்களை தாக்கி அழிக்கும் வண்ணம் அவற்றை புரோகிராம் செய்ய முடியும் என்பது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும்.

மொத்தத்தில், இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பான இம்மியூனோ தெரபி சிகிச்சைகள் உருவாக்கப்படலாம் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் பிலிப்பே பெரைரா.

டைரெக்ட் புரோகிராமிங் (direct reprogramming) எனும் தொழில்நுட்பத்தின் மூலமாக, நோயாளியின் தோல் திசுவின் ஒரு பகுதியை எடுத்து, பின்னர் தோல் செல்களுக்குள் PU.1, IRF8 and BATF3 ஆகிய மூன்று புரதங்கள் செலுத்தப்படும். இந்த மூன்று புரதங்கள் மூலமாக தோல் செல்கள் டென்ரைட்டிக் செல்களாக மாற்றப்படும் அல்லது ரீபுரோகிராம் (reprogram) செய்யப்படும் என்பது.

இந்த ஆய்வு மூலமாக, இம்மியூனோதெரபிக்கு தேவையான லட்சக்கணக்கான டென்ரைட்டிக் செல்களை சோதனைக்கூடத்தில் வெறும் 9 நாட்களில் உருவாக்க முடியும் என்பதே இந்த ஆய்வு முறையின் மிகப்பெரிய பலம் என்கிறார் பெரைரா.

இந்த வருடத்தின் நோபல் பரிசை வென்றுள்ள இம்மியூனோதெரபி சிகிச்சையை இந்த தோல் செல் ரீபுரோகிராமிங் தொழில்நுட்பமானது மேலும் மேம்படுத்தும் என்பதும், ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும் தேவையான, ஒவ்வாமை ஆபத்தில்லாத மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கும் டென்ரைட்டிக் நோய் எதிர்ப்பு உயிரணு சிகிச்சையை விரைவில் நோயாளிகளுக்கு கொண்டு சேர்க்க லண்ட் பல்கலைக்கழகமும், பிலிப்பே பெரைரா குழுவினரும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story