தண்ணீர் பருகுவதற்கு இடைவேளை


தண்ணீர் பாட்டில்களுடன் மாணவ-மாணவிகள்
x
தண்ணீர் பாட்டில்களுடன் மாணவ-மாணவிகள்
தினத்தந்தி 20 Jan 2019 9:45 AM GMT (Updated: 20 Jan 2019 9:45 AM GMT)

பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் மறக்காமல் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை.

வீட்டில் இருந்து கொண்டு சென்ற தண்ணீரை ஒரு சொட்டுக்கூட பருகாமல் திருப்பி கொண்டு வரும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அதிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் தண்ணீர் பருகுவதற்கு ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் குடிநீர் பருகும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் டோமே பப்ளிக் பள்ளிக்கூடத்தில் அனைத்து மாணவ -மாணவிகளையும் கட்டாயம் குடிநீர் பருகவைப்பதற்காகவே இடைவேளை நேரத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். உணவு சாப்பிடுவதற்கும், கழிப்பறை செல்வதற்கும் மணி அடித்து இடைவெளி விடுவதுபோல குடிநீர் பருகுவதற்கும் மணியோசை எழுப்புகிறார்கள். உடனே மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்து தாங்கள் கொண்டு சென்றிருக்கும் தண்ணீர் பாட்டில்களுடன் பள்ளி வளாகத்திற்கு ஓடி வருகிறார்கள். மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடியதும் தண்ணீர் பருகிவிட்டு வகுப்பறைகளுக்கு திரும்புகிறார்கள். காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் தண்ணீர் பருகுவதற்காக இடைவேளை விடப்படுகிறது. தண்ணீர் பருகுவதை தவிர்ப்பதால் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகள் பற்றியும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூறுகிறார்கள்.

‘‘போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பதால் நிறைய குழந்தைகள் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதை தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்’’ என்கிறார், பள்ளி மானேஜர் ஷாகீர் வானிமெல். கேரள மாநிலத்தில் மேலும் சில பள்ளிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Next Story