தினம் ஒரு தகவல் : பெட்ரோல் சிக்கனம்

மின்சாரத்தைப் போலவே நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் பயணமும் அதற்குரிய வாகனங்களும்.
வாகன எரிபொருளுக்கு நாம் பெருமளவு செலவு செய்கிறோம். அத்துடன் இந்த எரிபொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கின்றன. பெட்ரோலும் டீசலும் பெட்ரோலியம் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30 முதல் 40 ஆண்டுகளில் தீர்ந்து போகக்கூடியது. இந்தியாவுக்கு பெட்ரோலும் டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலை சார்ந்து நாம் இயங்க முடியாது.
வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுதுநீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும். பெட்ரோல், டீசலை குறைவாகப் பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தை பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகரிக்கும். வேகத்துக்கு ஏற்ப வாகனத்தின் கியரை தொடர்ந்து மாற்றி இயக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல், சாலையின் தன்மையைப் பொறுத்து எப்போதும் குறிப்பிட்ட ஒரு வேகத்தில் மட்டும் வண்டியை ஓட்ட முயற்சியுங்கள்.
இந்தியச் சாலைகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டுவதன் மூலம் 40 சதவீதம் எரிபொருள் சேமிக்கப்படும் என்கின்றன, ஆய்வுகள். புறநகர் பகுதிகள், நெடுஞ்சாலைகள் போன்ற வாகன நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் அதிகபட்ச கியரில் ஓட்டலாம். மேடும் பள்ளமுமான சாலைகளுக்கு பதிலாக சமமான சாலையிலேயே ஓட்ட முயற்சிக்கவும்.
போக்குவரத்து சிக்னலில் வாகனத்தை அணைத்துவிட்டு, நமக்குச் சிக்னல் கிடைப்பதற்கு 3 வினாடிகள் முன்னதாக வாகனத்தை ஸ்டார்ட் செய்தால்போதும். குறைந்தபட்சமாக 14 வினாடிகள் வாகனம் அணைக்கப்பட்டிருந்தால்கூட எரிபொருள் சேமிக்கப்படும். அணைத்து வைப்பதன் மூலம் சராசரியாக 20 சதவீத எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
வண்டியில் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது. மீறி அதிக எடையை வாகனம் சுமந்து சென்றால், எரிபொருள் செலவு கூடும். ஸ்பீடாமீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே நல்லது. அதிக வேகத்தில் செல்வது எரிபொருள் செலவை அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும். கார்களில் குளிரூட்டும் எந்திரத்தைப் பயன்படுத்துவது எரிபொருள் செலவை பெருமளவு அதிகரிக்கும். குளிரூட்டும் எந்திரத்தைத் தவிர்க்கலாம், கூடியவரை அணைத்து வைக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளைச் சேமிக்கலாம். தனியாக காரில் செல்வதைத் தவிருங்கள். எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துவது நல்லது.
Related Tags :
Next Story






