பனைகளைப் பாதுகாப்போம்


பனைகளைப் பாதுகாப்போம்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:10 AM IST (Updated: 16 Feb 2019 11:10 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை தந்த அற்புதமான சீதனம் பனைமரங்கள். ‘பூலோக கற்பகம்’ என்றும், ‘கற்பகத்தரு’ என்றும் போற்றப்படுவது பனை.

உணவுக்கும், உறையுளுக்கும் அவை தரும் பயன்கள் பல. இவை இன்று சாலைகள் அமைப்பதற்காகவும், கட்டிடங்கள் கட்டுவதற்காகவும் அழிக்கப்பட்டு வருகின்றன. பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசும் மக்களும் இணைந்து பனைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய பனைகளைப் பயிரிட்டு வளர்க்கவும் வேண்டும்.

மக்களின் வாழ்வோடும், வளத்தோடும், வரலாற்றோடும் பின்னிப்பிணைந்தவை இவை. உலகம் முழுவதும் பரவலாகவும், இந்தியாவில் குறிப்பிட்ட அளவிலும் இவை உள்ளன. தமிழகத்தின் சில பகுதிகளில் நெருக்கமாகப் பனை மரங்கள் உள்ளன. மிகப் பழங்காலத்தில் பனை மரங்கள் நிறைந்த ஏழ்பனைநாடு என்ற பகுதி இன்றைய குமரி முனைக்குத் தெற்கே இருந்தது என்பதும், கடல் கொந்தளிப்பால் அழிந்து போனது என்றும் இறையனார் அகப்பொருள் உரை, சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரை ஆகியன தெரிவிக்கின்றன. சங்ககால இலக்கியங்கள் ‘பெண்ணை’ என்று பனையைக் குறிப்பிடுகின்றன.

பனம் பூ சேர மன்னரின் அடையாள மாலை என்பது வரலாறு. பனை மரங்கள் சூழ்ந்த பகுதி ‘விளை’ என்றும் ‘வடலி’ என்றும் இன்றும் அழைக்கப்படுகின்றன. ‘வடலி’, ‘விளை’, ‘பனை’ என்ற சொற்கள் இடம் பெற்ற பல்வேறு ஊர்களை இன்றும் காணலாம். பனையூர், தேரிப்பனை, கலந்தப்பனை, பனங்குளம், பனைமரத்துப்பட்டி, திருப்பறைந்தாள், திருப்பனங்காடு, வடலிவிளை, வள்ளிவிளை, மன்னன்விளை, செட்டிவிளை, பண்டாரஞ்செட்டிவிளை, பண்ணைவிளை, பண்டாரவிளை, பழவிளை, கொத்தலரிவிளை, சோனகன்விளை, திசையன்விளை, கோயில்விளை, தோப்புவிளை, கல்விளை, வெள்ளாளன்விளை, கண்ணாண்டிவிளை, முள்ளன்விளை, மொட்டைத்தாதன்விளை, பொத்தக்காலன்விளை, களியக்காவிளை, பெருவிளை, நல்லான்விளை, இடையன்விளை, இடைச்சிவிளை, பிச்சிவிளை, வட்டவிளை, பனைவடலிச்சத்திரம், பெரியகண்டன் வடலி, வல்லன்குமரன்விளை, விளாத்திவிளை, நெய்விளை என்பது போன்ற ஊர்கள் இன்றும் உள்ளன. திருப்பனந்தாள், திருப்பனங்காடு ஆகிய ஊர்கள் தேவார ஆசிரியர்களால் பாடப்பெற்றுள்ள பெருமை உடையவை. திருப்பனங்காட்டில் உள்ள சிவன் கோவிலில் பனம் பழம் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. அகத்தியர் இங்கு பனம் பழம் வைத்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீர் சிறந்த உணவு. சிறந்த மருந்துப் பொருளாகவும் உள்ளது. பதநீரிலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களும் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள் சத்து நிறைந்தவை. நோய் தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தவை. சளி, இருமல், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், நீரழிவு நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவை என்பது மருத்துவ அறிஞர்கள் கருத்து.

பதநீரைக் காய்ச்சி பனை வெல்லம் எடுக்கப்படுகிறது. இது கருப்புக்கட்டி, கருப்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது. பனஞ்சீனியும் தயாரிக்கலாம். இப்பொருட்கள் வெள்ளைச் சீனிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. உடல் நலத்திற்கு இவை மிகவும் நல்லது. பனம் பழத்தைச் சுட்டும், அவித்தும் சுவைக்கலாம்.

பதநீரைக் காய்ச்சி அதனுடன் சுக்கு, இஞ்சி, பயிறு போன்றவற்றைக் கலந்து செய்யப்படும் புட்டுக் கருப்பட்டி எனப்படும் சில்லுக்கருப்பட்டி ஆரோக்கியம் தரும். பனஞ்சீனி, பனை வெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கொழுக்கட்டை, புட்டு, பணியாரம் செய்யலாம். இவை சுவை மிகுந்தவை. பனையிலிருந்து கிடைக்கும் இளங்காய்கள் நுங்குக்காய்கள் எனப்படும் அவற்றை வெட்டி உள்ளிருக்கும் நுங்கைச் சாப்பிடலாம். சுவையானது, உடல் நலத்திற்கும் ஏற்றது. பனங்கொட்டைகளை முளைக்கப்போட்டு அதிலிருந்து விளையும் கிழங்குகள் சிறந்த உணவு. அவித்தும், சுட்டும் சாப்பிடலாம். அவித்த கிழங்குகளை காயவைத்து இடித்து கிழங்கு மாவு எடுக்கலாம். இதில் பனை வெல்லம், தேங்காய், சீனி ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். புட்டுச் செய்யலாம். பனை ஓலை, பனை மட்டை ஆகியவை வேலி அடைக்கவும், கூரைகள் அமைக்கவும் பயன்படுபவை. பனை மட்டைகளில் இருந்து கயிறு போன்ற நார்களை எடுக்கலாம். அவற்றை ஊறவைத்து தும்பு தயாரிக்கலாம். இந்தத் தும்பு தரை விரிப்புகள், தூரிகைகள் அழகு சாதனங்கள் செய்யப் பயன்படும். ஏற்றுமதிப் பொருளாகவும் உள்ளது.

பனை ஓலைகளை வைத்து பெட்டிகள், பாய்கள் செய்வார்கள். ஓலைகளை சாயங்கள் சேர்த்து அழகிய கலைப் பொருட்கள், வண்ணப் பாய்கள், விசிறிகள், தோரணங்கள் செய்தால் அழகாக இருக்கும். பனைமரக் கட்டைகள் வேலிகள், கூரைகள், வீடுகள் அமைக்கப் பயன்படும். காய்ந்து போன பனங்கட்டைகள், ஓலைகள், பாளைகள் சிறந்த எரிபொருள். பனங்கட்டைகள் செங்கல்சூளைகளில் எரிபொருளாகப் பயன்படுகின்றன. பனை மரத்தைச் சுத்தியலால் அடித்தால் நீர் வெளிவரும். இதைத் தேமல் உள்ள இடத்தில் தேய்த்தால் தேமல் குணமாகும். பனைமரங்கள் வீசும் காற்று சுவாசிப்பதற்கு ஏற்றது.

எல்லாவகை நிலங்களிலும், எல்லாவித சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியது பனை. நீர்பாய்ச்சவோ, களை எடுக்கவோ, உரம் போடவோ தேவையில்லை. தானாக முளைத்து, தானாக வளர்ந்து எதையும் எதிர்பார்க்காமல் பலப்பல பயன்களைத் தரும் பனை மரங்களை முதல் தரமான நட்புக்கு எடுத்துக்காட்டாக இலக்கியம் ஒன்று பாடுகிறது. நல்ல நண்பர்கள் பயன் கருதாமல் உதவுவார்கள். அதுபோல மக்களுக்கு உதவுவது பனை. திணை அளவு நன்மை செய்தாலும் பனை அளவாகக் கொள்வார்கள் நல்லவர்கள் என்பது குறள் ஒன்றின் கருத்து. பனை தரும் அளவற்ற பயன்களையே இது குறிப்பிடுகிறது.

பனை ஓலையைப் பட்டைபோல் செய்து பொருட்களைப் பொதிந்து எடுத்துச் செல்லலாம். பட்டைகளில் பதநீர், குடிநீர் ஊற்றிக் குடிக்கலாம்.

இப்படிப் பல்வேறு பயன்களைத் தரும் பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்குப் பல்வேறு உதவிகளை அரசு செய்யவேண்டும். கடினமான தொழில் என்பதாலும், பனைமரங்கள் குறைந்து வருவதாலும் பனைத்தொழில் நலிந்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலமும், வாரியங்கள் அமைத்தும், விபத்து உதவிகள் செய்தும், ஆயுள் காப்பீடு செய்தும் கடன் உதவி, மானியங்கள் அளித்தும் பனைத்தொழிலையும், பனைகளையும் பாதுகாப்பது அவசியம்.

- பேராசிரியர் அ.பாஸ்கரபால்பாண்டியன்
1 More update

Next Story