டர்பன் நிறத்திற்கு ஏற்ப, ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிக்கும் தொழிலதிபர்


டர்பன் நிறத்திற்கு ஏற்ப, ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிக்கும் தொழிலதிபர்
x
தினத்தந்தி 16 Feb 2019 5:51 PM IST (Updated: 16 Feb 2019 5:51 PM IST)
t-max-icont-min-icon

அணியும் டர்பனை போலவே ஓட்டி செல்லும் காரையும் ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொண்டே இருக்கிறார் ரூபன் சிங்.

உடுத்தும் ஆடைக்கு பொருத்தமான விதத்தில் அணிகலன்களை அணிந்து அழகு பார்ப்பது பெண்களின் சுபாவமாக இருக்கும். அதற்கேற்ப அணிகலன்கள் - ஆடைகள் இவை இரண்டையும் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கிடையே போட்டா போட்டியே நிலவும். இரண்டையும் வாங்கி  குவித்துக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான பெண்களின் ஆடை அலமாரிகளை திறந்து பார்த்தால் வண்ண வண்ண நிறங்களில் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிவகுத்து கொண்டிருக்கும். அதற்கு சற்றும் குறைவில்லாமல் அந்தந்த ஆடைகளுக்கு இணையான அணிகலன்களும் இடம்பிடித்துக்கொண்டிருக்கும்.

இந்த விஷயத்தில் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் விதத்தில் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவதற்கு அலாதி ஆர்வம் கொண்டிருப்பார்கள். அந்த பட்டியலில் இணைந்திருப்பவர் ரூபன் சிங். தொழிலதிபரான இவர் லண்டனில் வசிக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரும் ஆடை தேர்வு விஷயத்தில் மெனக்கெடும் சுபாவம் கொண்டவர். அதிலும் தலைக்கு அணியும் டர்பனை தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரத்தை செலவிடுபவர். இவரது அலமாரியில் டர்பனுக்குத்தான் அதிக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான டர்பனை அணிந்துக்கொண்டு காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அணியும் டர்பனை போலவே ஓட்டி செல்லும் காரையும் ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொண்டே இருக்கிறார்.

அன்று எந்த நிற டர்பனை அணிகிறாரோ, அதே நிற காரில் பயணிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுதான் அவருடைய அன்றாட வழக்கமாக இருந்தாலும் ஒரே நாளில் உலகறிந்த பிரபலமாக மாறிவிட்டார். ‘சேலஞ்ச்’ என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் நடக்கும் ‘டிரெண்டிங் போட்டிகள்’ ரூபன் சிங்கை வெளி உலகிற்கு தெரியப்படுத்தி இருப்பதுடன் ‘அடேங்கப்பா’ பாணியில் அனைவருடைய புருவங்களையும் விரிய வைத்துவிட்டது. அப்படி அவர் அணியும் டர்பனிலும், காரிலும் என்ன சிறப்பு என்கிறீர்களா? தொடர்ந்து அவர் நடத்திய ‘7 நாள் சேலஞ்ச்’க்கு பயன்படுத்திய கார், ரோல்ஸ் ராய்ஸ்.

விலை உயர்ந்த இந்த காரை தொழிலதிபரான ரூபன் சிங் வைத் திருப்பதில் ஆச்சரியமில்லை தான். எனினும் மிகப்பெரிய தொழிலதிபர்களின் வசம் கூட இந்த கார்கள் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கும். அவர்கள் வசம் ஏராளமான கார்கள் இருந்தாலும் ரோல்ஸ் ராய்ல் காரின் எண்ணிக்கை ஐந்தை தாண்டுவது அபூர்வம்தான். ஆனால் ரூபன் சிங்கோ 7 நாள் சேலஞ்சுக்கும் 7 நிறங்களை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன் படுத்தி இருக்கிறார். இவரது ரோல்ஸ் ராய்ஸ் காதல், 7 கார்களோடு நின்றுவிடவில்லை. இவரது பங்களா வீட்டின் காரேஜ் முழுக்க, வெவ்வேறு வண்ணங்கள் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களே நிறைந்திருக்கின்றன. மொத்த கார்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டுமாம். அதனால் இவர் 7 நாட்களுக்கு மட்டுமல்ல, மாதம் முழுக்கவே வெவ்வேறு கார்களில் பயணிக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு நாளும், தலையில் அணியும் டர்பன் நிறத்திற்கு ஏற்ப, அதே நிற ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் உலா வருகிறாராம்.

லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் இவர் ஆடம்பரக் கார்கள் மீது குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸின் மீது ஆர்வம் கொண்டவர். கடந்த 2000-ம் ஆண்டு சன்டே டைம்ஸ் பத்திரிகை, ரூபன் சிங்குக்கு சுமார் ரூ.738 கோடி சொத்து இருப்பதாகத் தகவலை வெளியிட்டது. இவர் `பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார். ‘7 நாள் சேலஞ்ச்’க்காக இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் களின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி உள்ளன.
1 More update

Next Story