சிந்து வெளியுடன் ஒன்று படும் கீழடி நாகரிகம்...!


சிந்து வெளியுடன் ஒன்று படும் கீழடி நாகரிகம்...!
x
தினத்தந்தி 21 March 2019 5:47 AM GMT (Updated: 21 March 2019 5:47 AM GMT)

கீ ழடி அகழ்வாராய்ச்சிகள், சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் ஆகியவை ஒரே இனம், ஒரே மொழி பேசிய திராவிட நாகரிகத்துக்கு உரியவை என அறிஞர்களால் நிறுவப்பட்டு வருகிறது.

1920-ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷின் கண்டுபிடிப்புகளை போலவே 2014 முதல் நடைபெற்று வரும் வைகைச் சமவெளி கீழடி கண்டுபிடிப்புகளும் உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ரோமிலா தாப்பர் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கீழடி கண்டுபிடிப்புகள் தமிழர் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் எனக்கூறியுள்ளார்.

கீழடியில் இதுவரை நடந்த நான்கு அகழ்வாராய்ச்சிகளில் மொத்தம் 13ஆயிரத்து 658 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். சிந்துவெளியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை விட, ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் பெரியவை. அணிகலன் ஏற்றுமதியில் சிந்துவெளியை விட கீழடி போன்ற தமிழக நகரங்களின் ஏற்றுமதி அதிகமானது. குண்டூசியின் தலையைவிட சிறிய பாசிமணிகளில் தலைமயிரைவிட குறுகிய துளையிட்டு, உலக நாடுகளில் விற்ற நேர்த்தியை கீழடியில்தான் காண முடிகிறது. 138 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் தான் கீழடி அகழ்வாய்வு நடந்து வருகிறது. சிந்து வெளி நகர அமைப்பைப் போன்றே கீழடியிலும் திட்டமிட்ட நகர அமைப்பு, உறை கிணறு, குளியலறை, கழிப்பறை, புதை சாக்கடை ஆகியவை காணப்படுகின்றன. கொல்லன் உலைக்களம் செம்புருக்கவும் பயன்பட்டது, செம்பு வெட்டி எடுக்கப்பட்ட பொதிய மலை செம்பின் பொருப்பு எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் செம்புக்காலம் இல்லையென்று கூறுவது பொருந்தாது. அம்பில் செருகும் கூரிய எலும்பு முனைகள் வேட்டைக்கால நாகரிகத்திலிருந்தே தமிழர்களின் நாகரிகத் தொன்மை விளங்கியதைக் காட்டுகிறது.கீழடியிலிருந்தே சிந்து வெளி நாகரிகம் வடக்கு நோக்கிப் பரவியது என்பதை அது உறுதிப் படுத்துகிறது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தென் பிராமி எனப்படும் தமிழி எழுத்தில் வேந்தன், பேரையன், இயனன், ஆதன் போன்ற பெயர்களைப் படித்துக் காட்டியுள்ளனர். ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் எழுதப்பட்ட மூன்று பானை ஓடுகளை அவர்கள் படிக்கவில்லை. அவற்றில் உள்ள காவன், உன்னு, வக்கன் உன்னப்பன் போன்ற சிந்துவெளிப் பெயர்களை நான் படித்துக்காட்டியுள்ளேன். ஆதிச்சநல்லூரில் நான் கண்டெடுத்த பானை ஓட்டில் மணக்கன் என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இயக்குனரிடம் ஒப்படைத்தேன். நகரமைப்பு, செம்பின் பயன்பாடு உலகளாவிய வணிகம், எழுத்தறிவு பெற்ற கல்வி வளர்ச்சி, தாய் தெய்வ வழிபாடு. தாழியில் புதைத்தல் ஆகியவை கீழடிக்கும் சிந்துவெளிக்கும் உள்ள பொதுவான நாகரிக ஒப்புமைகள் எனலாம், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் இரண்டுக்கு மட்டும் காலக்கணிப்பு செய்து, கீழடி நாகரிகம் கி.மு. 300 முதல் கி.மு. 200 வரை நிலவியது எனக் கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள்கள் காலக்கணிப்பு செய்யப்படவில்லை. பழைய நாகரிகங்கள் மூன்று காரணங்களால் அழிகின்றன. அவை, வெயில்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் எனப்படும். மழை பெய்யாமல் வெயில் நீடித்த நீண்ட காலங்களிலும், பெருவெள்ளத்தில் நகரங்கள் மூழ்கிய போதும், போர், கொள்ளை நோய் போன்றவற்றால் குடிமக்கள் இடம் பெயரும் போதும் பழைய நாகரிகங்கள் அழிகின்றன. இருப்பினும் நூற்றாண்டுகள் கடந்தும், மக்கள் மீண்டும் அங்கே குடியேறுவதும் உண்டு. எனவே நகரத்தின் அழிவை அந்த மக்கள் இனத்தின் அழிவு எனக்கூறலாகாது. கேரளத்து தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர் செரியன் என்பவர் முசிறித் துறைமுக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள்அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களொடு நூற்றுக்கு நூறு ஒப்புமையாக உள்ளன என்கிறார். தமிழ்நாட்டில் 44 இடங்கள் அகழாய்வு செய்யப்பட வேண்டும் தமிழக மூவேந்தர்கள் எகிப்து, மத்திய தரைக்கடல் நாடுகள் உள்ளிட்ட மேலைக்கடல் நாடுகளிலும் சீனா முதலிய கீழைக்கடல் நாடுகளிலும் மொத்தம் 40 துறைமுகங்களில் கடல் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் எனவும் தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் உலகத் துறைமுகங்களுக்கு நடுநாயகமாக வணிகத் தலைநிலமாக விளங்கின என்றும் கூறுகிறார். வைகைச் சமவெளியில் உள்ள 293 இடங்களில் 90 இடங்கள் அகழ்வாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. கீழடி அகழ்வாய்வில் முதன்முதலில் ஈடுபட்ட அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையும், தமிழக தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையும் விரைவில் வெளியிடப்பட்டால், பல உண்மைகள் வெளிவரும்.

கீழடி போன்று ஆதிச்சநல்லூரை அடுத்த குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் கொங்கராயன்குறிச்சி மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும். வரலாற்றை மறந்த இனம் பிற நாட்டாருக்கு அடிமையாகி விடும் என்பதால் தமிழ் வரலாற்று மீட்டெடுப்பு தமிழினம் தலை நிமிரும் காலத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.

பேராசிரியர் இரா.மதிவாணன், இயக்குனர் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம்.

Next Story