முதல் 11 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 16,553 கோடி டாலர்

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 பிப்ரவரி) வர்த்தக பற்றாக்குறை 16,553 கோடி டாலராக உள்ளது.
புதுடெல்லி
நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.
கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி 30,284 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அந்த ஆண்டில் ஏற்றுமதி 30,000 கோடி டாலரை தாண்டியது. நடப்பு நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி 33,000 கோடி டாலரை எட்டும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 5.41 சதவீதம் குறைந்து 3,626 கோடி டாலராக உள்ளது. அதனால், வர்த்தக பற்றாக்குறை 960 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,230 கோடி டாலராக இருந்தது. முந்தைய மாதத்தில் (ஜனவரி) 1,473 கோடி டாலராக இருந்தது.
பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் சரக்குகள் இறக்குமதி 9.75 சதவீதம் அதிகரித்து 46,400 கோடி டாலராக உள்ளது. ஏற்றுமதி 29,847 கோடி டாலராக இருக்கிறது. இது 8.85 சதவீத உயர்வாகும். எனவே வர்த்தக பற்றாக்குறை 16,553 கோடி டாலராக உள்ளது.
சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story






