பரஸ்பர நிதி திட்ட முதலீடு 60% சரிந்தது


பரஸ்பர நிதி திட்ட முதலீடு 60% சரிந்தது
x
தினத்தந்தி 29 April 2019 10:54 AM IST (Updated: 29 April 2019 10:54 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி திட்ட முதலீடு 60% சரிந்தது

புதுடெல்லி

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு ஏறக்குறைய 60 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

ரூ.23.79 லட்சம் கோடி

கடந்த மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் அது ரூ.23.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, சொத்து மதிப்பு சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில், பரஸ்பர நிதி துறையின் பல்வேறு திட்டங்களில் நிகர அடிப்படையில் ரூ.1.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) அது ரூ.2.72 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, முதலீடு சுமார் 60 சதவீதம் குறைந்து இருக்கிறது. கடன் சந்தை திட்டங்களில் அதிக முதலீடு வெளியேறியதே இதற்குக் காரணமாகும்.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையின் கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் (வருவாய், லிக்விட், நிதிச்சந்தை மற்றும் கில்ட் ஆகியவை) இருந்து சுமார் ரூ.1.25 லட்சம் கோடி விலகி உள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) இந்த திட்டங்கள் ரூ.9,128 கோடியை மட்டுமே வெளியேறி இருந்தது.

எனினும் சென்ற நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 1.11 லட்சம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு புதிய சாதனை அளவாகும்.

பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களும் அதிக முதலீட்டை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக இத்துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இந்த திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து வருகிறது.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என கருதப்படுகிறது.

1 More update

Next Story