‘ஆட்டிசத்துக்கு’ ஒரு அற்புத சிகிச்சை...!


‘ஆட்டிசத்துக்கு’ ஒரு அற்புத சிகிச்சை...!
x
தினத்தந்தி 1 May 2019 3:46 AM GMT (Updated: 2019-05-01T09:16:04+05:30)

ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும்

குழந்தை பிறந்து மூன்று வயது நிறைவடைவதற்கு முன் இக்குறைபாடு ஏற்படும். இக்குறைபாடுடையக் குழந்தைகளின் உடலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. அவர்களின் நடத்தையிலேயே குறைபாடுகள் காணப்படும். ஆட்டிசக் குறைபாட்டிற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இது குறித்து ஆராய்ச்சிகள் பலவும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மரபுக்கூறுகள் மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பால் மரபணுவின் செயல்பாட்டிலும், வெளிப்பாட்டிலும் ஏற்படும் மாற்றமே ஆட்டிசக் குறைபாட்டிற்குக் காரணமென்று கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கருத்தரித்த தாயின் வயது, கர்ப்பக்காலத்தில் தாயின் ஆகாரம், தடுப்பூசிகள், கர்ப்பிணியின் உடல் மன ஆரோக்கியமின்மை, குறை பிரசவம், பிராணவாயு குறைபாடு, நச்சுப்பொருட்கள் போன்றவை ஆட்டிசக் குறைபாட்டிற்கான காரணிகளாக கருதப்படுகிறது. சரிவிகித உணவு உண்ணாமை, இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு போன்ற சுவைகளை மிகவும் அதிகமாக உட்கொள்ளுதல், சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, மது அருந்துதல், புலன்களின் (ஒலி, ஒளி, சுவை, மணம், தொடு) அதீத நுகர்ச்சி, தகாத சொற்களை அதிகமாக கேட்பது, பயன்படுத்துவது, மன அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள் பல தீய பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தலால் இந்த பாதிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும் கர்ப்பிணி தனியாக இரவில் உலாவுதலால் அவர்களின் ஆசைகள் நிராசையாகி மனவேதனை உண்டாவதால் மரபுக்கூறுகளில் மாற்றங்கள், சரீர தோஷங்களான வாத, பித்த, கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை பாதிக்கப்பட்டு கர்ப்பத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குழந்தையின் உடலில் குறைபாடோ, நோய்களோ உண்டாகலாம்.

மேலும் குழந்தைகள் குறைந்த மனவலிமையுடையவர்களாக திகழ்வதால் எளிதில் மனநல குறைபாடு உடையவர்களாகவோ நடத்தைப் பாங்கில் குறைபாடு உடையவர்களாகவோ இருப்பர் என்கிறது ஆயுர்வேதம். பிறந்த குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சிப்படிகளை தானாகவே அடைவர். ஆறு மாதங்களாகியும் தாயின் முகம் பார்த்து சிரிக்காமல் இருத்தல், தாயின் கண்களை நேருக்குநேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களாகியும் சத்தங்கள் செய்யாமல் இருத்தல், 12 மாதங்களாகியும் தனக்கு வேண்டியதை சுட்டிக்காட்டாமல் இருத்தல், பை-பை எனக் கை அசைக்காமல் இருத்தல் இக்குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

சமூக நல்லுறவு பிறருடன் தொடர்புகொள்ளும் திறனில் சிக்கல்கள், தகவல் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை, பாவனை விளையாட்டு செய்யாமலிருப்பது, எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது, பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பி பார்க்காமலிருப்பது, மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதில் பழகுவதில் ஆர்வமின்மை, காரணமின்றி சிரிப்பது, பயம் ஆபத்து போன்றவற்றை உணராதிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறிகளாகும்.

மேலும், தினசரி செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாதவராக இருப்பது, சொற்களை அர்த்தம் புரிந்துகொள்ளாமல் திருப்பிச்சொல்வது, புலன் சார்ந்த தூண்டல்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது (சிலவகை துணிகள் அணிவதிலோ, துணி தன் உடல்மேல் உரையும் போதோ சிரமம் அடைவர், சாதாரண சத்தத்திற்கே காதுளை மூடிக்கொள்வது), அடுத்தவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள இயலாதிருப்பது, ஒரே தன்மையுடைய செயலை திரும்பத்திரும்ப செய்வது (விரல்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, தலையை ஆட்டுவது), விரைவில் கோபம் கொள்வது, தனக்குத் தானே காயம் உண்டாக்கிக்கொள்வது, ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே பயன்படுத்துவது, தனக்கு வேண்டியதை சுட்டிக்காட்டியோ சைகைகள் மூலமோ வெளிப்படுத்த இயலாதது, அதீத இயக்கம் உடையவர்களாக இருப்பது அல்லது மந்த இயக்கம் உடையவர்களாக இருப்பதும் இந்த குறைபாட்டின் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சை கொடுப்பது அவசியம். நடத்தை சீராக்கல் பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப்பயிற்சி, உணவுக்கட்டுபாடு மூலம் இக்குழந்தைகளின் நடத்தைப் பாங்கில் மாற்றங்கள் வரவழைக்கப்படுகிறது. ஆட்டிசம் குறைபாட்டிற்கு ஆயுர்வேத சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பதைக் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை.

மூலிகை தைலம் கொண்டு மசாஜ் செய்யலாம். மூலிகை தைலத்தை தலையில் பஞ்சு கொண்டு தேக்கி வைக்கலாம். மூலிகைப்பொடியை தலையில் தடவலாம். மேலும் மூலிகை தைலம் அல்லது மூலிகைகளுடன் காய்ச்சிய மோரை தலையில் சீராக ஊற்றுவது.

மூலிகை தைலம், கஷாயத்தை ஆசனவாய்வழி உட்செலுத்துவது இத்துடன் மேத்யம் என்றழைக்கப்படும் மூளையின் செயல்பாட்டை சீராக்கும் மூலிகைகளான ப்ரம்மி, வல்லாரை, சங்குபுஷ்பம், அதிமதுரம், சீந்தில்கொடி, வசம்பு போன்றவற்றை பொடியாகவோ, சாறுபிழிந்தோ கொடுக்கப்படும். இச்சிகிச்சையினை 45 நாட்கள் தொடர்ந்து செய்தபின்பு 45-60 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சையினை மேற்கொண்டால் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பது உறுதி.

மரு.த.ம.செந்திஅரசி, இணை பேராசிரியர்,
அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நாகர்கோவில்.


Next Story