இன்று (மே2-ந் தேதி) உலக பாஸ்வேர்டு தினம்.


இன்று (மே2-ந் தேதி) உலக பாஸ்வேர்டு தினம்.
x
தினத்தந்தி 2 May 2019 10:19 AM IST (Updated: 2 May 2019 10:19 AM IST)
t-max-icont-min-icon

‘டிஜிட்டல்’ வேலிகள்...!

முன்பெல்லாம் வீடுகளுக்குக் கதவுகளே இருக்காது. அவரவர் பொருட்கள் அவரவருக்கு எனும் சிந்தனையில் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. இப்போதோ, வீட்டின் வெளிப்புற கேட்டிலிருந்து, வரவேற்பறையை எட்டுவதற்குள் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. காரணம் மாற்றான் தோட்டத்து மல்லிகையை எப்படியேனும் பறித்துப்போக வேண்டும் என மக்கள் காத்திருப்பது தான். இந்த டிஜிட்டல் யுகத்தில் அத்தகைய திருட்டுகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. இதைத் தகவல் திருட்டு என அழைக்கிறார்கள். எப்படி வீட்டுக்குப் பூட்டு பாதுகாப்பைத் தருகிறதோ அப்படி தகவலுக்குப் பாதுகாப்பைத் தரும் டிஜிட்டல் பூட்டு தான் பாஸ்வேர்டு என புரிந்து கொள்ளலாம். பாஸ்வேர்டு என்றால் எல்லோருக்கும் தெரியும். ‘பாஸ்வேர்டு டே’ அதாவது கடவுச்சொல் தினம் தெரியுமா?

எல்லாத்துக்கும் ஒரு தினம் இருக்கே, பாஸ்வேர்டு தினம் மட்டும் இல்லையா? இதென்ன அநியாயம் என பாஸ்வேர்டு பக்கம் நின்றுவாதிட்டவர் மார்க் பர்னெட் என்பவர் தான். இவர் ஒரு பாதுகாப்பு ஆய்வாளர். மக்களுக்கு பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த யோசனையை 2005-ம் ஆண்டு அவர் தனது “பெர்பக்ட் பாஸ்வேர்டு” எனும் நூலில் பதிவு செய்தார்.

கிணற்றில் போட்ட கல் போல கிடந்த அந்த யோசனையை எடுத்து தூசுதட்டி அங்கீகாரம் கொடுத்தது இண்டல் நிறுவனம் தான். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் வியாழக்கிழமை தான் உலக பாஸ்வேர்டு தினம் என அவர்கள் 2013-ல் பிரகடனப்படுத்தினார்கள். அதன் பின்பே இந்த தினம் பிரபலமானது. எப்படி பலருக்கு ஒரு அம்மா இருப்பதே அன்னையர் தினத்தில் தான் நினைவுக்கு வருகிறதோ, அதே போல இந்த பாஸ்வேர்டு தினத்திலாவது நமது பாஸ்வேர்டுகளை குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும் என்பது தான் இந்த தினத்துக்கான அடிப்படைச் சிந்தனை.

அம்மாவை நினைத்து வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்களிலும், பேஸ்புக் வால்களிலும் மூளையை கசக்கி எப்படி கவிதை கிறுக்குகிறோமோ, அப்படி பாஸ்வேர்டுகளை குறித்து இந்த நாளில் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய யுகம் தகவல் யுகம். நமது கையிலிருக்கும் மொபைலை விட அதிக மதிப்புடையது அதனுள் இருக்கும் தகவல்கள். நம்மிடம் இருக்கும் கணினியை விட அதிக மதிப்புடையவை அதனுள் இருக்கும் தகவல்கள். எனவே நாம் பொருட்களைப் பாதுகாப்பதற்கு எடுக்கும் சிரத்தையை விட அதிக சிரத்தையை அதன் தகவல்களைப் பாதுகாக்க எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பல நேரங்களில் நாம் அதை கவனத்தில் கொள்வதில்லை. வெறுமனே நமது பாஸ்வேர்டுகளை 1111, 1234 போன்ற எளிதில் ஊகித்து விடக்கூடிய பாஸ்வேர்டுகளால் அமைத்து விடுகிறோம் அல்லது பெயர், போன் நம்பர், குழந்தைகளின் பெயர் போன்ற எளிதான கடவுச் சொற்களை பயன்படுத்துகிறோம். அது மிகவும் தவறான விஷயம்.

நாம் எந்த அளவுக்கு வலுவான பூட்டுகளைப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு தான் நமது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். அதே போல எந்த அளவுக்கு வலிமையான பாஸ்வேர்டு பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் இவை.

ஒன்று, நீளமான பாஸ்வேர்டு பயன்படுத்துவது. எவரும் யூகிக்க முடியாத பாஸ்வேர்டு. எழுத்து, எண்கள், ஸ்பெஷல் எழுத்துகள், கேப்பிடல் லெட்டர்ஸ், ஸ்மால் லெட்டர்ஸ் எல்லாம் கலந்த கலவையான பாஸ்வேர்டு. இது மிக முக்கியம். பல நிறுவனங்கள் கடவுச்சொல்லின் நீளம் 14 எழுத்துகள் இருக்க வேண்டுமென இப்போது சட்டம் வகுத்திருக்கின்றன. இரண்டு, பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுவது. ஒரே பாஸ்வேர்டை தொடர்ந்து பயன்படுத்துவது நாட்கள் செல்லச்செல்ல வலிமையிழக்கும். எனவே பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பல நிறுவனங்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தங்கள் பணியாளர்கள் பாஸ்வேர்டை மாற்றுவதை கட்டாயமாக்கியிருக்கின்றன. கடவுச் சொற்களை உடைக்கவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தகவல் திருடர்களிடமிருந்து தப்ப, தொழில்நுட்பம் பல்வேறு புதுமைகளை புகுத்துகின்றன. விரல்பதிவு, முகம், விழிகள், குரல் போன்ற பல புதிய வகைகளில் கடவுச்சொற்களை உருவாக்குகிறது. அடுத்தகட்டமாக மனித நரம்பு மண்டலத்தை பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் முறை செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. ஒரு மனிதருடைய நரம்பு மண்டலம் போல இன்னொருவருக்கு இருக்காது என்பதும், நரம்பு மண்டலத்தை காப்பியடிக்க முடியாது என்பதும் இதன் முக்கிய காரணங்கள்.

அதே போல பாஸ்வேர்டு காப்சூல்கள் அடுத்தகட்ட பாஸ்வேர்டுகளாகப் போகின்றன. இந்த காப்சூலை விழுங்கினால் போதும், அது உடலில் உள்ள வேதியல் பொருட்களினால் இயங்கிக் கொண்டே இருக்கும். வெளியேறவும் செய்யாது. இதன்மூலம் ஒவ்வொருவரும் நடமாடும் பாஸ்வேர்டுகளாக செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஒரு புறம் இருக்க, இருக்கின்ற தொழில்நுட்பங்களைக் கொண்டு நம் கடவுச்சொற்களை வலிமையாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. பலரும் பணப் பரிவர்த்தனைக்கு வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்திவிட்டு, அதை செயல்படுத்தும் மொபைலுக்கு வலுவற்ற பாஸ்வேர்டை வைப்பதுண்டு. அது வீட்டின் ஜன்னல்களை இறுக மூடிவிட்டு கதவை அகலத் திறந்து வைப்பது போன்றது.

சிலர் வங்கி ஆப்ஸ்களின் கூடவே தேவையற்ற பல ஆப்களை சேர்த்தே வைத்திருப்பார்கள். இது புதையலுக்கு திருடனைக் காவல் வைப்பது போன்றது. இந்தத் தவறுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். எத்தனை அடுக்கு பாதுகாப்பை கொடுக்க முடியுமோ அத்தனை நிலைகளில் பாதுகாப்பை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

திருடவே முடியாது என எல்லோரும் நினைத்த யாகூ நிறுவனத்திலிருந்து தான் சில ஆண்டுகளுக்கு முன் 3 பில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டன. பாதுகாப்பானது என நினைத்த இபே நிறுவனம் தான் 145 மில்லியன் பயனர் தகவல்களைக் கோட்டைவிட்டது. எனவே அலட்சியம் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த பாஸ்வேர்டு தினத்தில் கொஞ்சம் நிதானிப்போம்! பாஸ்வேர்டுகளை நாம் எந்த அளவுக்கு வலிமையாய் வைத்திருக்கிறோம் என்பதை அலசுவோம். “எப்படா உடைக்கலாம்” என யாரோ கழுகுக் கண்களோடு நம் தகவல்களை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் எனும் உண்மையை மனதில் எப்போதும் கொண்டிருப்போம்.

செய்ய வேண்டிய சில அடிப்படை விஷயங்கள். நீளமான வலிமையான கடவுச் சொற்களைப் பயன்படுத்துங்கள். கடவுச் சொற்களை அடிக்கடி மாற்றுங்கள். ஒரே கடவுச் சொல்லை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தாதீர்கள். மொபைலுக்கு நிச்சயம் பாஸ்வேர்டு பயன்படுத்துங்கள்.

மொபைலில் நுழைந்தால் மற்ற எல்லாவற்றையும் பாஸ்வேர்டு இல்லாமலேயே பயன்படுத்தலாம் எனும் “ஒன் டச் ஆதண்டிகேஷன்” முறையை பயன்படுத்தாதீர்கள். பாஸ்வேர்டை பிறரிடம் பகிராதீர்கள். யாருக்காவது தெரிந்திருக்கும் என சந்தேகம் எழுந்தால் உடனே பாஸ்வேர்டை மாற்றுங்கள். கடவுச் சொல்லை எங்கும் எழுதி வைக்காதீர்கள். அப்படி மறந்துவிடுவீர்கள் என பயமாக இருந்தால் ஆப்பிள் நிறுவனத்தின் “கீசெயின் ஆக்ஸஸ்” போன்ற பாதுகாப்பான ஆப்களைப் பயன்படுத்தி சேமிக்கலாம்.

புதுமையாய் பாஸ்வேர்டு உருவாக்குங்கள். ஒரு பெரிய வாக்கியத்தின் முதல் எழுத்துகளை மட்டும் இணைத்து பாஸ்வேர்டு உருவாக்குவது அதில் ஒரு வகை. கூடவே சில எழுத்துகள், ஸ்பெஷல் கேரக்டர்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆட்டோ பாஸ்வேர்டு ஆப்ஷனை பயன்படுத்தாதீர்கள். வைரஸ் தாக்கப்பட்ட சிஸ்டம்களில் எந்த பரிவர்த்தனையும் செய்யாதீர்கள். ஜிமெயில் இப்போதெல்லாம் ரொம்ப முக்கியமாக மாறிவிட்டது. வங்கியோடெல்லாம் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே அதை வலிமையாக்குங்கள். வருமுன் காப்பது முக்கியம். தொலையும் முன் பாதுகாப்பது மிக முக்கியம்.

- சேவியர்

1 More update

Next Story