அழிவிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்போம்...!


அழிவிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்போம்...!
x
தினத்தந்தி 22 May 2019 4:59 AM GMT (Updated: 22 May 2019 4:59 AM GMT)

இன்று (மே 22-ந் தேதி) சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்

பல்லுயிரி என்றால், இந்த உலகில் காணப்படும் அனைத்து விதமான உயிரினங்களைப் பற்றி அறியும் படிப்பே ஆகும். ஏறக்குறைய 95 சதவீத உயிரினங்கள், முன்னதாகவே அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் 5 சதவீத உயிரிகளின் பெருக்கமே, இப்போது இருக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும். இப்போது இந்த உயிரினங்கள் மிகப்பெரிய மூன்று முக்கிய சவால்களை எதிர்நோக்கி உள்ளன.

வாழிடங்கள் அழித்தல், உணவுச் சங்கிலி அறுபடுதல் மற்றும் உயிரின மாசுபடுதல் ஆகும். இதில் வாழிடங்கள் அழித்தல், மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடலில் காணப்படும் தாவர மிதவை உயிரிகள் அதிக அளவில் வளிமண்டலத்தில் உள்ள கார்பனை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை ஒளிச்சேர்க்கையின் மூலம் உருவாக்குகிறது. இதற்கு கார்பன் இறக்கம் என்று பெயர்.

பருவ கால மாற்றங்களால் கடலின் தன்மை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பவள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களால் சில முக்கிய நுண்ணுயிரிகள் அழிந்து விடுகின்றன. கடல் அமிலமயமாக்குதல் என்ற நிகழ்வுகளால் சில நுண் உயிரிகள் முதல், பெரிய திமிங்கலம் வரை அனைத்து வாழிடங்களும் அழிவை எதிரிநோக்கி உள்ளன. இதற்கு காரணம் கார்பன்-டை-ஆக்சைடு ஆகும். காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு அதிக அளவில் கடலில் கலக்கும்போது கடல் அமிலத்தன்மைக்கு மாற்றப்படுகிறது. இதனால் கால்சியம் கார்பனேட் உருவாக்கம் தடைபடுகிறது. பவளபாறைகளில் கால்சியம் கார்பனேட் உருவாக்கம் செயலிழந்து காணப்படுகிறது. இதற்கு பவள வெளுத்தல் என்று பெயர்.

சுமார் 30 சதவீத கடல் அமிலத்தன்மை காரணமாக, சில முக்கிய செல்ஸ் உயிரினங்கள் உருவாக்கப்படுவதில்லை. இதை இயற்கை பாதுகாப்பு சர்வதேச சங்கம் ஹாட்ஸ்பாட்டாக அறிவித்துள்ளது.

இரண்டாவதாக, உணவுச் சங்கிலி அறுபடுதல். இயற்கையில் அனைத்து உயிரினங்களும் சமநிலையை பாதுகாக்கிறது. மனித செயல்களாலும் மற்றும் சில இயற்கை சீற்றங்களாலும் மீள் உருவாக்கம் நடைபெறுவதில்லை. விதைகளை உண்ணும் அணில் இனங்களும், பூச்சிகளை உண்ணும் தேவாங்கு இனங்களும் மற்றும் சில முக்கிய பறவை இனங்களும், ஏதோ ஒரு காரணம் காட்டி, உதாரணத்திற்கு மருத்துவகுணம் மந்திரவாதம் உள்ளிட்ட சில மூடநம்பிக்கையால் வேட்டையாடப்படுகின்றன. முக்கிய இனக்கருதுகோள் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த இனக்கருதுகோள் உயிரினங்கள் அழிந்தால், அதனைச் சார்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும். உணவுச் சங்கிலியும் முற்றிலும் நின்றுவிடும்.

மூன்றாவதாக உயிரின மாசுபடுதல். பூமி சில ஆண்டுகளாக வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. காடுகளில், மரங்கள் வெட்டப்படுவதால் மழை வளம் குறைந்துவிட்டன. நகரமயமாதல், தொழிற்சாலைமயமாக்குதல், காட்டுத்தீ மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகிய காரணங்களால் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன.

17 அடி உள்ள ஸ்போம் திமிங்கலம் அமெரிக்கா கடல் பகுதியில் காணப்படும் மிக அரிய வகை உயிரினங்கள் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதன் இறந்த உடலிலிருந்து 115 குடிநீர் கப்புகளும், பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும் மற்றும் ஏனைய பொருட்களும் எடுக்கப்பட்டன. இறந்த அரியவகை டால்பின் இனங்களிலிருந்து பெட்தலேட் சார்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டது. இந்த மூன்று காரணங்களால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிவை எதிர்நோக்கி உள்ளன.

இரண்டு வழிகளில் நாம் இப்போது உயிரினங்களை பாதுகாத்து வருகிறோம். ஒன்று உயிரினங்களை அதன் இடத்தில் இருந்தே பாதுகாக்கும் முறை. உதாரணத்திற்கு உலக அளவில் 120 நாடுகளில் 669 உயிரிகோள காப்பகங்களின் வழியாக உயிரினங்களை பாதுகாக்கிறோம். இவற்றின் முக்கிய நோக்கம், அரிதான உயிரினங்களை பாதுகாப்பதே ஆகும். இரண்டாவதாக தாவரவியல் தோட்டங்கள், விலங்கியல் பூங்காக்கள், சவாரி பூங்காக்கள், மரபணு மற்றும் விதை வங்கிகள் மூலமாக சில முக்கிய உயிரினங்களை பாதுகாக்கிறோம். தவிர நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மூலமாக மரத்தை கடவுளாக வழிபடுதல், கோவில் காடுகள், புனித தோப்புகள் மூலமாக உயிரினங்களை பாதுகாக்கிறோம்.

தற்போது உயிரி தொழில்நுட்பமுறையில் சில முக்கிய அரியவகை உயிரினங்களை நீண்ட ஆண்டுகளுக்கு பாதுகாக்க முடியும். இப்போது சில முக்கிய சட்டங்கள், உதாரணத்திற்கு ‘வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் பல்லுயிரி பாதுகாப்பு சட்டம் 2000’ கடுமையாக்கப்பட்டது. இவற்றை எல்லாம் பாதுகாக்க ஒரே வழி தற்போது உள்ள சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பேணிக்காப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைப்பது தான். அனைத்து உயிரினங்களால் எவ்வளவோ பயன்கள் இருந்தாலும் மனிதச் செயல்கள் பொறுத்தே அதற்கு பாதுகாப்பு அளிக்கமுடியும். இந்நாளில் உயிரினங்களைப் பற்றி விழிப்புணர்வு கொள்வோம். பாதுகாப்போம்.

- என்.அனந்தகுமார், உதவி பேராசிரியர், கல்வியல்துறை,
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், திண்டுக்கல்.


Next Story