அறிந்து கொள்வோம் அறிவுசார் சொத்துரிமை...!


அறிந்து கொள்வோம் அறிவுசார் சொத்துரிமை...!
x
தினத்தந்தி 11 July 2019 5:29 AM GMT (Updated: 11 July 2019 5:29 AM GMT)

சுற்றுச்சுவர் எழுப்பி எப்படி நம் வீட்டை பாதுகாக்கிறோமோ அதேபோல நமக்கு தோன்றும் புதிய புதிய சிந்தனைகளை பாதுகாக்கவும் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் பெயர் அறிவுசார் காப்புரிமை சட்டம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன. இந்தியாவை பொறுத்தவரை காப்புரிமை சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு குறைந்தே காணப்படுகிறது. அறிவுசார் படைப்புகள், புத்தகங்கள், புதிய டிசைன் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு வேண்டிய உரிமம் இந்த சட்டத்தின் மூலம் பெறலாம். சர்வதேச அளவில் புதிய கண்டுபிடிப்பு என்பதற்கு சில வரையறைகள் பின்பற்றப்படுகின்றன. முதலில் கண்டுபிடிப்பு தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததாக இருக்க வேண்டும்.

இந்த கண்டுபிடிப்பால் பயன் இருக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும் இருபது வருடம் வரை மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். அதற்கு பிறகு பொதுபயன்பாட்டிற்கு வந்துவிடும். கண்டுபிடிப்பாளர் தனியாகவோ, குழுவாகவோ அல்லது நிறுவனம் பெயரிலோ தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். இந்த முறையே அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன. கண்டுபிடிப்பாளரை தவிர வேறு யாரும் இதில் உரிமை கொண்டாட முடியாது. வணிக நிறுவனங்கள் யாரேனும் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை தயாரித்து சந்தைப்படுத்தி லாபம் ஈட்டும் பட்சத்தில் லாபத்தில் ஒரு தொகையை கண்டுபிடிப்பாளர்களிடம் கொடுத்தே ஆகவேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சதவீதத்தில் ஆரம்பித்து 50 சதவீதம் வரை வணிக நிறுவனம் ஈட்டும் லாபத்தில் கண்டுபிடிப்பாளர் பங்குதொகை கொடுத்தே ஆக வேண்டும். ஒன்றிற்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒருவரே காப்புரிமை பெற முடியும்.

அமெரிக்காவை சார்ந்த அறிவியல் வல்லுனரான தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்து தொன்னூற்று மூன்று கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். ஜப்பான் நாட்டை சேர்த்த சுன்பையமாசகி தனியாகவும், குழுவாகவும் இதுவரை 5,460 கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ளார். உலகத்திலேயே அதிக காப்புரிமை கொண்டவர். ட்ரான்சிஸ்டர், எல்இடி கணினித்திரை, சோலார் சாதனம் மற்றும் பல. இவர் கண்டுபிடித்த பொருட்களை உற்பத்தி செய்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளால் மக்களுக்கு பல நன்மைகள் நடந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர் டைனமைட் என்னும் வேதியியல் பொருளை கண்டுபிடித்தார். அறிவுசார் சட்டம் காப்புரிமை மூலம் பெரும் தொகையினை ராணுவம் வாரி வழங்கினாலும் இவருக்கு மனது உறுத்தியது.

அப்போதே இந்திய மதிப்பில், ரூ.22 கோடி மதிப்பிலான சொத்துகள் அவருக்கு இருந்தன. அவர் இறக்கும் தருவாயில் அவரின் விருப்பத்தை உயிலாக எழுதிவைத்தார். இவர் இறந்த பிறகு தலைப்பு செய்தியாக “பல மக்கள் இறக்க காரணமானவர் இறந்தார்” என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. நோபல் எழுதி வைத்த உயிலை அப்போது அவர் குடும்பத்தினர் வெளியிட்டனர். அதன்படி அவரின் சொத்தில் 94 சதவீதம் அறிவியல் துறைகளில் சாதிப்பவர்களுக்கு, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவ அறிவியல், அமைதி மற்றும் பொருளாதாரத்தில் உலக அளவில் சாதித்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது அனைத்திற்கும் நோபல் அறிவுசார் சொத்துரிமையே மூல காரணம்.

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்று இந்தியாவில் “மேக் இன் இந்தியா” போன்ற திட்டங்கள் மூலம் அறிவுசார் காப்புரிமை பெற்றவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு படைப்பாற்றல் அதிகம் இருந்தாலும் அறிவுசார் சட்டத்தை பயன்படுத்துவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இந்தியா பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பாரம்பரிய முறைகளுக்கு மற்றொரு நாட்டில் காப்புரிமை வழங்கி இருப்பின் இந்திய நாடு தகுந்த ஆதாரங்களை காட்டி அங்கு கொடுக்கப்பட்ட காப்புரிமையை நிரந்தரமாக ரத்து செய்யலாம்.

ஒருமுறை இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மஞ்சள் காயங்களை ஆற்றும் என கண்டுபிடித்துள்ளதாக கூறி காப்புரிமை பெற்றனர். இதை எதிர்த்து இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் “பழங்காலக்கலை” என்ற அடிப்படையில் ஆதாரங்களுடன் வாதிட்டதால் மஞ்சளுக்கான அமெரிக்க காப்புரிமை ரத்து செய்யப்பட்டது.

ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்டிஏ என்ற உர நிறுவனத்திற்கு வேம்பின் கொட்டையிலிருந்து பூஞ்சாணக்கொல்லி தயாரிக்கும் முறைக்கு உரிமம் வழங்கியது. பாரம்பரிய முறையை ஆதாரங்களுடன் வாதிட்டதால் இந்திய அரசு வெற்றி கண்டது. அமெரிக்க காப்புரிமை நிறுவனம் டெக்ஸ்மதி என்னும் நெல்லுக்கு காப்புரிமை அளித்தது. டெக்ஸ்மதி எனும் ரகம் பதினாறு உரிமைகளில் இந்திய பாஸ்மதியை ஒத்தது. ஆனால் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் பாஸ்மதி “அரோமா பாசுமதி” என்ற பெயரில் அமெரிக்க நிறுவனத்திடம்தான் காப்புரிமை உள்ளது. இதனால், இந்திய விவசாயிகள் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

மதுரைமல்லி, திருநெல்வேலி அல்வா, காஞ்சி பட்டு இது போல புவியியல் சார்ந்த வணிக பொருட்களை பழமை மாறாமல் குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே விற்க அறிவுசார் சொத்துரிமை வழிவகுக்கிறது.

இந்தியாவில் உள்ள 85 சதவீத பொருட்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் காப்புரிமை பெற்று வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் சிலநூறு ரூபாய்க்கு விற்கப்படும் பொருட்கள் ஆயிரங்களை தாண்டும். ஏனெனில், சர்வதே காப்புரிமை சட்டப்படி கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு ஒரு பெரும்தொகை சென்ற பின்னர் மட்டுமே பொருட்கள் சந்தைக்கு வரும். ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் மாதுளை, நிலவேம்பு, கீழாநெல்லி, நித்யகல்யாணி மற்றும் பல மூலிகைகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை பெற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம் பாரம்பரிய முறைகளை ஆராய்ச்சி செய்து ஆய்வு கட்டுரைகளாக சமர்ப்பிப்பதன் மூலம் நம் பாரம்பரியத்தை பாதுகாக்கலாம். இந்தியா உயர்கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடு. ஒரு வருடத்திற்கு பல லட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற இடத்தில் இருக்கும் இந்திய அரசின் அறிவுசார் காப்புரிமை அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஏதோ ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி காப்புரிமை கோரினாலே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்காக பெருகும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. 

- ரா.ராஜ்குமார், உதவி பேராசிரியர், தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை.

Next Story