ஜூன் மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,122 கோடி


ஜூன் மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.8,122 கோடி
x
தினத்தந்தி 18 July 2019 4:29 PM GMT (Updated: 18 July 2019 4:29 PM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஜூன் மாதத்தில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்களில் (எஸ்.ஐ.பி) முதலீடு ரூ.8,122 கோடியாக இருக்கிறது.

சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இந்த துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு இறங்குகிறது.

ஜூன் மாதத்தில் இத்துறை நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.25.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்த மாதத்தில் பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு நிகர அடிப்படையில் 42 சதவீதம் அதிகரித்து ரூ.7,663 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் கடன் சார்ந்த திட்டங்களில் இருந்து ரூ.1.71 லட்சம் கோடி வெளியேறி உள்ளது. சீரான முதலீட்டு திட்டங்களில் முதலீடு ரூ.8,122 கோடியாக குறைந்துள்ளது. மே மாதத்தில் ரூ.8,183 கோடியாகவும், ஏப்ரல் மாதத்தில் ரூ.8,238 கோடியாகவும் அது இருந்தது.

அதே சமயம் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர்களின் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 5.30 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.37 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.


Next Story