காந்தி கொண்டாடிய சொத்து, ஜீவா


காந்தி கொண்டாடிய சொத்து, ஜீவா
x
தினத்தந்தி 21 Aug 2019 5:22 AM GMT (Updated: 21 Aug 2019 5:22 AM GMT)

இன்று (ஆகஸ்டு 21-ந்தேதி) ப.ஜீவானந்தம் பிறந்த நாள். தோழர் ஜீவானந்தம் 1907-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி நாகர்கோவிலுக்கு அருகே உள்ள பூதப்பாண்டியில் பிறந்தார். 18.1.1963 வரை 56 ஆண்டுகளே வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்தது.

அந்நிய ஆட்சிக்கு ஆதரவாக மன்னர்களும், ஜமீன்தார்களும், நிலப்பிரபுக்களும், மேல் சாதி ஆதிக்கக்காரர்களும் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தார்கள். சாதி, மத பிரிவினைகளை பயன்படுத்தி மக்களை ஒன்றாக வாழ விடாமல் தடுத்து வந்தார்கள். பஞ்சமும், நோயும், வறுமையும், சாதிச் சண்டைகளும் மக்களை வாட்டி வதைத்தது.

இக்கொடுமைகளை எதிர்த்து நாஞ்சில் நாட்டில் அய்யா வைகுண்டர் தலைமையில் கிளர்ச்சி நடந்தது. கேரளாவில் நாராயணகுரு, அய்யன்காளி மற்றும் சிலர் பெரும் இயக்கங்களை நடத்தினார்கள். இத்தகைய இயக்கங்கள் பூதப்பாண்டி ஊரில் பிறந்த ஜீவானந்தத்திற்கு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. பூதப்பாண்டியில் அக்ரகாரத்தில் தலித்துகள் செல்லக்கூடாது என்ற தடையை எதிர்த்து, இளைஞர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார் ஜீவா. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்த அண்ணாவியிடம் கல்வி பயின்றார். ஜீவா வாழ்க்கையில் அண்ணாவியும் பல தாக்கத்தை ஏற்படுத்தினார். ஜீவாவுக்கு அவரது தந்தை சொரிமுத்து என பெயரிட்டார். பின்னர் இவரே தன் பெயரை தனித்தமிழ் என்ற முறையில் உயிரின்பன், ஜீவா, ஜீவானந்தம் என மாற்றிக்கொண்டார். இதை அறிந்த ஆசிரியர் அண்ணாவி ஜீவாவிடம் இப்படி அடிக்கடி பெயர் மாற்றினால் பிற்காலத்தில் சொத்து தாவாக்கள் வரும் என்று எச்சரித்தார்.

அதற்கு பதில் அளித்த ஜீவா “குத்துக் கல்லுக்கு சொத்து ஏது? சுகம் ஏது?” என்று கூறினார். இதுவே ஜீவாவின் எதிர்கால அரசியல் லட்சியத்தை உறுதி செய்தது.

பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்துகொண்டார். ஜீவா, காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றை தொடங்கி நடத்தினார். அங்கு காந்தி வர வேண்டும் என்று விரும்பினார். இதைக் கேள்விப்பட்டு காரைக்குடிக்கு வந்திருந்த காந்தி ஜீவாவை பற்றி அறிந்து, சிராவயல் ஆசிரமத்திற்கு நேரில் சென்று பார்த்தார். ஜீவாவிடம் ஆசிரமம் நடத்த சொத்து ஏதாவது வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு எனக்கு ஏது சொத்து? நாடு தான் என்னுடைய ஒரே சொத்து என்று பதிலுரைத்தார் ஜீவா. அதைக்கேட்டு நெகிழ்ந்து போன காந்தி “இல்லை இல்லை நீங்கள் தான் இந்தியாவினுடைய சொத்து” என்றார்.

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுதல், பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து போராடுவது, சாதி, மத வெறிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவது, தாய்மொழியான தமிழை வளர்ப்பது, முற்போக்கு இலக்கியங்களை படித்து அறிவது, உழைக்கும் மக்களை அமைப்பாகத் திரட்டுவது, பொதுக் கூட்டங்கள், தெருக்கூத்து நாடகங்கள், நாளிதழ்கள் மற்றும் பல சிறப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவதில் ஆர்வம் காட்டினார்.

ஒலிபெருக்கிகள் இல்லாத காலத்தில் ஆயிரக் கணக்கில் கூடும் மக்களுக்கு தன் கருத்தை சொல்வதில் ஆர்வமாக பேசினார். உள்ளார்ந்த உணர்வுடன் ஓங்கி ஓங்கி பேசுவார். இதன் விளைவாகவே இரு காதுகளும் பழுதாகி விட்டன. கோவை ஸ்டெயின்ஸ் மில்லில் பஞ்சாலை தொழிலாளர்களுக்கான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

“காலுக்குச் செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே, பசையற்றுப் போனோமடா!” என்கிற பாடலை இப்போராட்டத்தில் தான் எழுதினார். இப்பாடலை ஒலித் தட்டில் கவிஞர் ராமதாஸ் பாடி பதிவு செய்தார். தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களில் இப்பாடல் ஒலித்தது. தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. திரைப்படக் கலைஞர் டி.கே.சண்முகம் தான் அரங்கேற்றிய பல நாடகங்களில் இப்பாடலை பாடியுள்ளார். நடிகை கே.பி.சுந்தராம்பாள் இப்பாடலை பல இடங்களில் பாடியுள்ளார்.

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, டி.கே.சண்முகம் உள்ளிட்ட பல கலைஞர்களோடும் நெருக்கமாக பழகி வந்தார். கலையை கருவியாய் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை முன்னேற்றவும், பகுத்தறிவை பரப்பவும் முற்பட்டார். கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் இணைத்து அமைப்பாய் திரட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை தொடங்கினார். பல பத்திரிகைகள் தொடங்கி நடத்தினார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை மக்கள் கவிஞர் என்று பாராட்டி மகிழ்ந்தார். பாரதியின் நூல்களை தேசவுடைமையாக்க வேண்டுமென்றார். மொழிவாரி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்று ஐக்கிய தமிழகம் என்ற நூலினை எழுதினார். சாதிப் பிரச்சினையும், மொழிப் பிரச்சினையும் என்ற நூல்களையும் எழுதினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு பற்றிய விவாதத்தில் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டுமென்று தொடர்ந்து போராடினார்.

தமிழ்நாட்டில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளி திறப்பு விழாவிற்கு தாம்பரம் சென்றார். பள்ளியை தொடங்குவதற்கு தொடர்ந்து வலியுறுத்தியவர் ஜீவா என்பதற்காக, அவரை விழாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்து ஜீவாவின் வீட்டிற்கு சென்றார் காமராஜர். வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத அந்த வீட்டுக்குள் சென்றார். அப்போது ஜீவா மாற்று வேட்டி இல்லாததால் கட்டியிருந்த வேட்டியை துவைத்து காய வைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து கண்கலங்கிய காமராஜர் ஜீவாவிடம் இது தான் உங்கள் வீடா, உங்களுக்கு நல்ல மாற்று வீட்டை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னதற்கு இந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் நீங்கள் புது வீடு தந்தால் நானும் வாங்கிக் கொள்கிறேன், இல்லையேல் வேண்டாமென்று மறுத்து விட்டார்.

காசிமேட்டில் சுடுகாட்டிற்காக போராடிய ஜீவாவை பார்த்து, உலக அரசியல் பேசும் நீங்கள் ஏன் சுடுகாட்டிற்காக போராடுகிறீர்கள் என்று ராஜாஜி கேட்டதற்கு நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். எனவே அவர்களின் அனைத்து விதமான துன்பங்களையும் அறிவேன் என்றார். ஜீவாவும் இறுதியில் காசிமேட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டார். ஜீவா இறப்பதற்கு முன்பு நான் இறந்தவுடன் காமராஜரிடம் தகவலை தெரிவித்து விடுங்கள் என்றார்.

ஜீவாவின் மறைவுக்கு “நண்பர் ஜீவானந்தம் மறைவினால் நாடு ஒரு சிறந்த வீரரை இழந்துவிட்டது. மாசற்ற பொதுஜன ஊழியர். அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளவர்களும் அவர் சேவையைப் போற்றுகின்றனர்” என்று அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

“தான்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார். தீங்கு வரக்கண்டும் சிரித்து விடுவார். யாங்காணோம், துன்பச் சுமை தாங்கி சிவானந்தம் போன்ற அன்புச் சுமை தாங்கும் ஆள்” எனப் பாவேந்தன் பாரதிதாசன் மனம் உருகினார்.

குருதி எல்லாம் புரட்சி மணம் கமழுகின்ற வரிப்புலி, கொள்கையிலே உறுதிக்கொண்ட தமிழ்க்கவி என்கிறார் கலைஞர் கருணாநிதி.

தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பன்னாட்டு இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பலவற்றிலும் புலமை பெற்றிருந்தார். பல ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு பின்னரும் ஏழையாகவே மடிந்தார். முற்போக்கு இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தார். தமிழக கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூலவராகவும் திகழ்ந்தார். கட்சி வேறுபாடின்றி மக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஜீவா, ஆண் குழந்தைகளுக்கு ஜீவானந்தம் என்று பெயர் சூட்டி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

- நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி.

Next Story