ஜன்னல் அருங்காட்சியகம்


ஜன்னல் அருங்காட்சியகம்
x
தினத்தந்தி 20 Sept 2019 7:49 PM IST (Updated: 20 Sept 2019 7:49 PM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே சிறிய அருங்காட்சியகம் ஒரு வீட்டின் ஜன்னலில் செயல்படுகிறது என்பதை அறிவீர்களா?

வழக்கமாக தலைவர்கள், பிரபலங்கள் வாழ்ந்த வீடுகள் நினைவு இல்லமாக மாற்றப்படுவது உண்டு. அங்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நினைவுச்சின்னங்களாக பராமரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். ஆனால் தான் வாழும்வீட்டில் தான் சேகரித்த பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் அருங்காட்சியகமாக மாற்றி ஒருவா் உலகையே தன் வசம் ஈர்த்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள இந்த அருங்காட்சியகம் அந்த வீட்டின் ஜன்னலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக மிக சிறியதாக இருப்பதால் மக்கள் இதை ‘பேன்ட் பாக்கெட் மியூசியம்’ என செல்லமாக அழைக்கிறார்கள். சுவிஸ் மொழியில் இது ஹூசேக் மியூசியம் எனப்படுகிறது. சட்டைப்பை அருங்காட்சியகம் என்பது இதன் பொருளாகும்.

அருங்காட்சியகம் மிகச்சிறியதாக இருப்பதால் இங்கே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மொத்தமே 2 அடி ஜன்னலில் இருப்பதால் யாரும் நுழைந்து சென்று பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. ஜன்னல் ஓரமாக நின்று சில நிமிடங்களில் பார்த்து ரசித்துவிட்டுச் செல்லலாம்.

இந்த ஜன்னல் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ள வீடு 600 ஆண்டுகள் பழமையானது. சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் அமைந்துள்ளது. ஜன்னல் அருங்காட்சி யகத்தில் உள்ள பொருட்கள் அவ்வப்போது மாற்றப்பட்டுவிடுவதுதான் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பாகும்.

டக்மார் என்பவரது குடும்பம் அந்த வீட்டில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறது. அவர்கள்தான் இந்த அருங்காட்சியகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். 24 மணி நேரமும் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.

ஜன்னல் அருங்காட்சியகத்தில் அந்த குடும்பத்தினர் சேகரித்த அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. அக்கம்பக்கத்தினர் மற்றும் விவரம் அறிந்தவர்கள் கொடுக்கும் வித்தியாசமான பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

டக்மார் சிறுவயதில் இருந்து வித்தியாசமான பொருட்களை சேகரிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த அரிய பொருட்கள் அவரது வீட்டின் ஒரு அறையை நிரம்பி வழியச் செய்துவிட்டது. அறைக்குள் வைத்திருந்த அரிய பொருட்களை மற்றவர்களுக்கும் காட்சியாக வைக்கும் யோசனை திடீரென தோன்றவே, ஜன்னல் அருங்காட்சியகம் உதயமாகிவிட்டது.

பொருட்களுக்கு ஏற்ற வகையில் காட்சி மேடை உருவாக்குவது அல்லது கூரையில் இருந்து தொங்கவிட்டு பார்வைக்கு வைப்பது இவர்களது வழக்கம். சிறுவர்கள் விளையாடும் வித்தியாசமான பொம்மைகள், ரூபிக் கியூப், பிளாஸ்டிக் கண்ணாடிகள் போன்றவை முதல் பல்வேறு அரிய பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப் படுகின்றன.

முதலில் அதை பார்த்து ரசித்த அக்கம்பக்கத்தினர் பாராட்டு தெரிவித்தனா். 6 மாதங்களுக்குப் பிறகு, கத வைத் தட்ட ஆரம்பித்த பார் வையாளர்கள் சில பொருட் களின் விவரத்தை கேட்க ஆரம்பித்ததோடு, தங்களிடம் உள்ள சிறந்த பொருட்களை காட்சிப்படுத்த முடியுமா? என்றும் கேட்டுள்ளனர்.

உடனே தனக்கான மெயில் முகவரியைக் கொடுத்து வைக்க வேண்டிய பொருட்களின் புகைப்படங்களை கேட்டறிந்தார் டக்மார். அதில் மக்கள் விரும்பும் வித்தியாசமான பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக சேகரிக்க ஆரம்பித்தார். சுமார் 30 முதல் 35 பொருட்கள் சேர்ந்ததும் ஜன்னலில் உள்ள காட்சிப்பொருட்களை மாற்றி புதிய பொருட்களை காட்சிக்கு வைக்கிறார்.

ஜன்னல் அருங்காட்சியகத்தை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதாம். அதில் அதிக அளவில் குழந்தைகள் சென்று பார்வையிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அதிசய ஜன்னல் அருங்காட்சியகத்தை படத்தில் பார்த்து ரசியுங்கள்!
1 More update

Next Story