சிறப்புக் கட்டுரைகள்

பெண்களிடம் திருமணத்தை பற்றி கேட்கக்கூடாது-லட்சுமி கோபாலசுவாமி + "||" + Women should not ask about marriage

பெண்களிடம் திருமணத்தை பற்றி கேட்கக்கூடாது-லட்சுமி கோபாலசுவாமி

பெண்களிடம் திருமணத்தை பற்றி கேட்கக்கூடாது-லட்சுமி கோபாலசுவாமி
கனவுமெய்ப்பட வேண்டும், பீமா, அருவி போன்ற சினிமாக்களில் நடித்தவர் லட்சுமி கோபால சுவாமி. பரபரப்பான திரை உலக வாழ்க்கையில் இருந்து சற்று விலகி, அமைதியான நடன வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
னவுமெய்ப்பட வேண்டும், பீமா, அருவி போன்ற சினிமாக்களில் நடித்தவர் லட்சுமி கோபால சுவாமி. பரபரப்பான திரை உலக வாழ்க்கையில் இருந்து சற்று விலகி, அமைதியான நடன வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கு நாட்டிய பயிற்சியளிக்கிறார். அதை பற்றி நிறைய பேசுகிறார். அப்படியானால் அவர் சினிமாவை மறந்துவிட்டாரா? அவரிடமே கேட்போம்..!

இனி சினிமா வேண்டாம். நடனம் போதும் என்று முடிவு செய்துவிட்டீர்களா?

சினிமா, நடனம் இரண்டும் இரு விதங்களில் திருப்தி தருகிறது. நடிப்பில் எப்போதும் நம்மோடு நிறைய பேர் இருந்துகொண்டிருப்பார்கள். வித்தியாசமான கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டுவோம். ஆனால் நடனம் மவுனமானது. சினிமாவுக்கு நிறைய புத்திசாலித்தனம் தேவை. ஓரளவு படிக்கவும் வேண்டும். அதனால்தான் நடனத்தில் எனக்கு கூடுதல் ஆர்வம். இதில் இசை, தாளம், லயம் எல்லாம் என்னை அப்படியே ஈர்த்துவிடும். நான் நடித்தாலும், பாடினாலும், ஆடினாலும் அதில் எனக்கான மகிழ்ச்சியை கண்டுபிடித்துவிடுவேன். மேற்கத்திய நடனங்களுக்கும், பரதநாட்டியத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் கிளாசிக்கல் டான்சை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறேன்.

முன்பு நாட்டியத் திறமைகொண்டவர்களுக்குதான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டதே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாட்டியம் கற்றவர்களால் தங்கள் முகபாவங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். அவர்களது உடல்மொழியும், உடல் நெகிழ்ச்சித்தன்மையும் சிறப்பாக இருக்கும். அதனால் எங்களைப் போன்றவர்களால் சிறப்பாக நடிக்க முடியும் என்றாலும், சில பிரச்சினைகளும் உண்டு. நான் நடிக்கும்போது என் புருவங்களும், கண்களும் சில நேரங்களில் தேவைக்கு அதிகமான பாவனைகளை காட்டிவிடும். அதனால் தேவைக்கு அதிகமான பாவனை இருந்தால் சொல்லிவிடுங்கள் நான் குறைத்துக்கொள்கிறேன் என்று முதலிலே நான் டைரக்டர்களிடம் கூறிவிடுவேன். நடனம் தெரியாதவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. அவர்கள் டைரக்டர்கள் சொல்வதைக்கேட்டு அப்படியே நடித்துவிடுவார்கள்.

சிறந்த துணைநடிகைக்கான விருதினை இரண்டு மாநிலங்கள் உங்களுக்கு தந்திருக்கின்றன. ஆனாலும் உங்களுக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லையே ஏன்?

நான் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கான வாய்ப்புகிடைக்கவில்லை. ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நான் பயன்படுத்தியிருக்கிறேன். இனியும் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நான் நடித்த சில அம்மா வேடங்கள் என் வளர்ச்சியை பாதித்தது. கஷ்டங்களை வெளிப்படுத்தும் அம்மா அல்லாமல் வித்தியாசமான அம்மா வேடங்களை மட்டுமே இனி ஏற்றுக்கொள்வேன். தெலுங்கில் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது நடத்தை, வசனம் பேசும் பாங்கு, சமயோசிதம் எல்லாமுமே என்னை கவர்ந்தது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது.

பெண் உரிமை பற்றியும் நீங்கள் சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறீர்களே?

பெண்களுக்கு எல்லா துறைகளிலும் பாதுகாப்புகொடுக்கவேண்டும். சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்பதே என் கருத்து. மலையாள சினிமா உலகை எடுத்துக்கொண்டால் முன்பு நடிகர் களுக்கு மட்டுமே ‘கேராவேன்’ வழங்கினார்கள். அவர்கள் அதன் உள்ளே சென்று உடைமாற்றிக்கொள்வார்கள். நடிகைகள் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று உடை மாற்றவேண்டிய நிலை இருந்தது. இப்போது நடிகைகளுக்கும் கேராவேன் தருகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம். இந்த சவுகரியம் அப்போதே கிடைத்திருக்கவேண்டும். பெண்களும், ஆண்களும் சமமானவர்கள்.

உங்களை பற்றி கேட்கப்படும் கேள்விகளில் உங்களுக்கு பிடிக்காதது எது?

எனது திருமணத்தை பற்றி எப்போதும் கேட்கிறார்கள். பெண் களின் திருமணத்தை பற்றி மட்டும் எல்லோரும் ஏன் கேட்கிறார்கள்? பார்ட்னர் இருப்பதை பற்றியும், இல்லாமல் போவதை பற்றியும் சமூகத்திற்கு என்ன கவலை? அமெரிக்காவில் யாரும் இதுபோன்ற கேள்வியை கேட்பதில்லை. அடுத்தவர்கள் திருமணத்தை பற்றி அவர்களுக்கு ஒன்றும் கவலைஇல்லை. எனது திரு மணத்தை பற்றி கேரளாவில் இருந்து நிறைய கேள்வி கேட்கப்படுகிறது. திருமணம் எனது தனிப்பட்ட விஷயம். அது நடக்கும்போது நடக்கட்டும். எனக்கு திருமணமாகவேண்டும் என்று என் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் என்னை நிர்பந்திப்பதில்லை. எனது திருமணத்தை பற்றி முடிவெடுக்கும் சுதந் திரத்தை எனக்கு தந்திருக்கிறார்கள். நான் ஒருபோதும் திருமணத்திற்கு எதிரானவள் அல்ல. ஆனால் அது தனிப்பட்ட ஒவ்வொருவருடைய விருப்பத்தை பொறுத்தது.

சுதந்திரத்தை அதிகம் விரும்பும் பெண்களுக்கு சமூகம் போதுமான அளவு ஊக்கம் தருகிறதா?

சந்தேகம்தான். பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிக்கும்போது பெரிய அளவில் பிரச்சினை ஒன்றும் இல்லை. அவர்கள் வெளிப்படையானவர்கள். நான் சுதந்திர விரும்பி. எல்லாபெண்களும் அதுபோல் இருந்தால் நல்லது. மற்றவர்களின் எதிர்பார்ப்பு களுக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. மற்றவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் நமது ஆத்மாவை நாம் சுதந்திரமாக விடவேண்டும். நிறைய பயணம் செய்யவேண்டும். வாழ்க்கையை அனுபவித்து அறியவேண்டும். என்னை எனக்கு தக்கபடி வாழ அனுமதித்த என் பெற்றோருக்கு நன்றி சொல்லவேண்டும். எனது தந்தை கோபாலசுவாமியும், தாயார் டாக்டர் உமாவும் இசைஞானம் கொண்டவர்கள். எனது சகோதரன் அர்ஜூன் வனஉயிரியல் விஞ்ஞானி.

நடிகை ஆகாமலே இருந்திருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டா?

அப்படி ஒரு எண்ணம் எப்போது வருகிறதோ அப்போதே நான் சினிமாவில் இருந்து விலகிவிடுவேன்.

இன்றைய நடிகைகள் தைரியமானவர்கள். தனியாக வசிக் கிறார்கள். தனியாக நடிக்க வருகிறார்கள்..?

அது ஒரு நல்ல முன்னேற்றம். மற்ற துறைகளைப்போல சினிமாவும் ஒரு தொழில்துறை. மற்ற வேலைகளுக்காக பெண்கள் தனியாக செல்வதுபோல் இதையும் தனியாக எதிர்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என் அம்மாவையும் அழைத்துக்கொண்டுதான் நடிக்க வருவேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக நான் தனியாகத்தான் பயணிக்கிறேன். இன்னொரு விஷயம், சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு போதுமான அளவு கல்வியறிவு அவசியம். நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்றால், மனஅழுத்தம் உருவாகிவிடும்.