பூமியின் வெப்ப நிலையை குறைப்போம், உலகைக்காப்போம்


பூமியின் வெப்ப நிலையை குறைப்போம், உலகைக்காப்போம்
x
தினத்தந்தி 31 Oct 2019 10:43 AM IST (Updated: 31 Oct 2019 10:43 AM IST)
t-max-icont-min-icon

உலகில் இப்போதைய ஆடம்பர வாழ்க்கை முறை இப்படியே தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குப்பிறகு புவி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

லகில் இப்போதைய ஆடம்பர வாழ்க்கை முறை இப்படியே தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குப்பிறகு புவி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 2015-ம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் கார்பன்-டை- ஆக்சைடு வாயுவின் அளவைக் குறைத்தாலும்கூட, புவிவெப்பநிலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து விடும். புவிவெப்பம் அதிகமாவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும். 2050-ம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒருபுறம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கடுமையான உடல்நல பாதிப்புகளும் உருவாகும். மிக மோசமான காலநிலைகள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்களும், காயங்களும் ஏற்படும். புவிவெப்பமடைதலின் தீய விளைவுகளால் மோதல்கள், வன்முறைகள், உள்நாட்டுக் கலகம், போர் போன்றவைக் கூட ஏற்படக்கூடிய ஆபத்துகள் உள்ளன.

அதிகரிக்கப்படும் புவி வெப்ப நிலை கட்டுப்படுத்தப் படாத நிலையில் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் 10 அடி வரை உயரக்கூடும். இதனால் அடுத்த 40, 50 ஆண்டுகளில் சென்னை, மும்பை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட கடலோர நகரங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மாலத்தீவு போன்ற சிறிய தீவுகள் கடலில் மூழ்கி விடும். இதுபோன்ற பேரழிவுகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கால நிலை அகதிகளாக மாறுவர். இது கொடுமையானது. உலகைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அதிகரிக்கப்படும் புவிவெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் குறைக்கவேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு போலந்தில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகள் தீர்மானித்துள்ளன. இந்த இலக்கு எட்டப்பட்டால்கூட, மனித இனம் அழியாமல் தப்பிக்குமே தவிர உடலை எரிக்கும் வெயில், உடலைக் குடையும் குளிர் ஆகியவை மனித இனத்தை வாட்டும். இதுவும் கூட பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்யாது.

அதிகரித்துவரும் புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டும் தான் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். அதுவும் கூட இப்போது இருக்கும் சூழலை விட சற்று மோசமாகத் தான் இருக்கும். அதை உறுதி செய்வதற்காகக் கூட உலகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இதற்காகத் தான் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும். அவசர நிலை காலத்தில் எந்த வேகத்தில் பணிகள் நடக்குமோ, அதே வேகத்தில் புவிவெப்பமடைதலின் தீயவிளைவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கையைக் கேட்டு உலக நாடுகள் விழித்துக் கொண்டிருக்கின்றன. கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்கள் உட்பட உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் நிறுவனங்கள் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டிருக்கின்றன.

அங்கு தீமைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை.

புவிவெப்பம் அதிகமாவதற்கு காரணமானவர்கள் யார்? என்பது நீண்ட விவாதத்திற்கு உரியது. ஆனால், புவிவெப்பமடைதல் என்பது உலகில் அனைவரையும் தாக்கும். அதனால், புவிவெப்பமடைதலின் தீய விளைவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கி தனிநபர்கள் வரை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். புவி வெப்பமயமாதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என்று கூறி, காலநிலை அவசர நிலையை பிரகடனம் செய்ய மாட்டோம் என்றோ, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம் என்றோ இந்திய அரசு கூறக்கூடாது; கூறவும் முடியாது.

புவிவெப்பமயமாதலின் தாக்கத்தைக் குறைப்பதற்காக 2030-ம் ஆண்டுக்குள் படிம எரிபொருட்களின் பயன்பாட்டை பாதியாக குறைத்தல், ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு வாகனம் பயன்படுத்துவதைத்தவிர்த்து, பசுமைத் தொழில்நுட்பத்தில் இயங்கும் பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்தல், போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை ஊக்குவித்தல், வனப்பரப்பையும், பசுமைப் போர்வையையும் விரிவாக்குதல் ஆகியவை சார்ந்த கொள்கைகள் உடனடியாக வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும்.

மரபுசாரா எரிசக்தியை, குறிப்பாக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள், மழைநீர் சேமிப்பு, ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்மேலாண்மைக் கொள்கைகள், குப்பைகளை எரிப்பதை தடை செய்தல் உள்ளிட்ட கழிவு மேலாண்மைக் கொள்கை ஆகியவை வகுக்கப்படுவதுடன், பிளாஸ்டிக் தடையும் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். புதுமையான நகர்ப்புற திட்டமிடல் கொள்கைகளை ஊக்குவித்தல், மனிதர்களின் இறைச்சித் தேவைக்காக அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் வளர்க்கப்படுவதை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை சீரழித்தவை பணக்கார மேற்கத்திய நாடுகள் தான். ஆனால், அதுகுறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இதுவல்ல. ஒரு வீடு தீப்பிடித்து எரியும் போது, அதற்கு யார் தீவைத்தது என்பது குறித்து விவாதிப்பதை விட, தீயை அணைப்பது தான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும். எனவே, இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் முதல் மத்திய அரசு வரை அனைத்துத் தரப்பினரும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும். அதன் தீமைகளை கட்டுப்படுத்த காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைத் திட்டத்தை அனைவரும் செயல்படுத்துவதுடன், மற்றவர்களும் கடைபிடிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.வாருங்கள்.... இந்தியர்களே ஒன்றாக கை கோர்த்து உலகத்தைக் காப்போம்!

டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

(முற்றும்)
1 More update

Next Story