அபார ருசி நிறைந்த ஆற்காடு மக்கன்பேடா


மக்கன்பேடாவிற்கான மாவுக் கலவை தயாராகிறது..; தயாராகி, ஜீராவில் ஊறும் காட்சி
x
மக்கன்பேடாவிற்கான மாவுக் கலவை தயாராகிறது..; தயாராகி, ஜீராவில் ஊறும் காட்சி
தினத்தந்தி 24 Nov 2019 5:29 PM IST (Updated: 24 Nov 2019 5:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் ருசிக்கு பெயர்பெற்ற மாநிலம். இங்கு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான உணவுகள் பிரசித்திபெற்றவை.

அந்தந்த பகுதியில் தயாராகும் அந்தந்த உணவுகள் அபார சுவைமிகுந்ததாக இருக்கும். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அந்த ருசி மாறாது. மறையாது. அந்த வரிசையில் வேலூர் மாவட்டம், ஆற்காடு நகரில் புகழ்பெற்றவை இரண்டு உணவுகள். ஒன்று ஆற்காடு பிரியாணி, மற்றொன்று இனிப்பு வகையான மக்கன்பேடா.

சுவையான மக்கன்பேடா பற்றி காண்போம். இந்த பெயருக்கு என்ன காரணம்?
ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்தியாவில் ஆற்காட்டை தலைநகராக கொண்டு முகலாயர்களின் பிரதிநிதிகளாக வடதமிழக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற அவர்களின் விருந்தில் இடம் பெற்ற முக்கியமான ஒரு இனிப்பு வகை தான் இந்த மக்கன்பேடா.

‘மக்கன்’ என்றால் உருது மொழியில் நயம் என்றும், ‘பேடா’ என்றால் சர்க்கரை பாகில் ஊறவைக்கும் இனிப்பு என்றும் அர்த்தம். நயம் என்பது உயர்தரம் மற்றும் நம்பர் ஒன் என்ற பொருளையும் தந்து, பேடாவிற்கு பெருமை சேர்க்கிறது. இது கொழுக்கட்டையை போன்று மேலே வெள்ளையாய் இருக்கும். கொழுக்கட்டையை கடிக்கும்போது உள்ளே இருக்கும் பூரணம் நாக்கில்பட்டு அலாதி சுவையை கொடுப்பது போலவே இந்த மக்கன்பேடாவிலும் ருசி நிறைந்திருக்கும். இதன் உள்ளே பாதாம் பருப்பு போன்ற சுவையான கொட்டை வகைகள் இடம்பெற்றிருக்கும்.

சர்க்கரை பாகிலிருந்து ஒரு மக்கன்பேடாவை எடுத்து சிறிய தட்டில்வைத்து கரண்டியால் சிறிதுசிறிதாக வெட்டி எடுத்து வாயில் வைத்தால் அபார சுவையோடு அப்படியே கரைந்து, தொண்டையை கடந்து இதமாக வயிற்றுக்குள் செல்லும். குலோப்ஜாமூன் சில நேரங்களில் உதிர்ந்துவிடும். அது கெட்டியாகிவிடுவதும் உண்டு. ஆனால் இந்த மக்கன்பேடாவின் வெளிப்புறம் சற்று கடினமாக இருந்தாலும், உள்ளே அவ்வளவு மென்மையாக இருக்கும்.

ருசி மிகுந்த மக்கன்பேடாவை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:
மைதா, சர்க்கரை சேர்க்காத பால்கோவா, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், நெய், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, பாதாம்பருப்பு, பிஸ்தா, அக்ரூட், பேரீச்சம் பழம், அத்திப்பழம், ஜாதிபத்ரி, ஜாதிக்காய், தர்பூசணிவிதை, வெள்ளரி விதை, சிறிதளவு சோடா மாவு.

மக்கன்பேடா செய்முறை:
பால்கோவா, மைதா ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, நெய் ஊற்றி சிறிதளவு சோடாமாவு சேர்த்து ஏலக்காயை பொடி செய்து தூவிவிட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் தட்டையாக செய்து அதில் முந்திரி, உலர்திராட்சை, பாதாம்பருப்பு, பேரீச்சம்பழம், அக்ரூட், அத்திபழம், ஜாதிக்காய், தர்பூசணிவிதை, வெள்ளரிவிதை, ஜாதிபத்ரி போன்றவைகளை துண்டாக்கி கலந்து பூரணமாக்கவேண்டும். அதை தட்டை வடிவ மாவில்வைத்து உருண்டையாக மாற்ற வேண்டும்.

பின்னர் அந்த உருண்டைகளை சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பொரித்த உருண்டைகளை, நன்கு காய்ச்சிய சர்க்கரை பாகில் (ஜீராவில்) போட்டு 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைக்கவேண்டும். பின்பு எடுத்து சுவைக்கவேண்டியதுதான்.

ஆற்காடு நகரில் பஜார் வீதியில் மூன்று தலைமுறையாக மக்கன்பேடா தயார் செய்து விற்பனை செய்து வரும் கே.ராஜா, “எங்கள் கடையில் 120 வகையான இனிப்பு வகைகள் இருந்தாலும், மக்கன்பேடாதான் அதிகமாக விற்பனையாகிறது. வெளியூர் மக்களும் இதனை விரும்பி வாங்குகிறார்கள். வெளிநாடுகளிலும் இதற்கு தனி மவுசு உள்ளது. இதனை தயாரித்த ஏழு நாட்கள் வரை வைத்திருந்து சுவைக்கலாம். தயாரிக்கும் கைப்பக்குவத்தில்தான் இதன் சுவை அதிகரிக்கும். பல்வேறு தலைவர்களையும் கவர்ந்த உணவு இது. தந்தை பெரியார் ஆற்காடு மக்கன்பேடாவை விரும்பி சுவைத்திருக்கிறார்..” என்றார்.
1 More update

Next Story