காட்டுக்குள் யானையும்.. அதை கவர்ந்த பெண்களும்..


காட்டுக்குள் யானையும்.. அதை கவர்ந்த பெண்களும்..
x
தினத்தந்தி 8 Dec 2019 8:30 AM GMT (Updated: 8 Dec 2019 8:30 AM GMT)

அரங்கத்தில் இருந்துகொண்டிருந்த சலசலப்பு, அந்த வீடியோ ஓடத் தொடங்கியதும் அப்படியே அடங்கி நிசப்தமாகிவிட்டது.

அடர்ந்த காட்டுக்குள் நகர்ந்துசெல்லும் கேமரா, கம்பீரமாக நின்றுகொண்டிருந்த ஒரு யானையை காட்சிப்படுத்தியதும், அடுத்து என்ன நடக்கப்போகிறதோ? என்ற திகில் கலந்த கேள்வி நம்மிடம் ஏற்படுகிறது. காட்டுக்குள் நின்று கொண்டிருக்கும் அழகுப் பெண்ணான பைசா அமான்கான் அந்த யானையை பார்த்து மிரள்கிறார். அதன் அருகில் செல்லவே அஞ்சுகிறார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு சிலமுறை அவர் அருகில் நெருங்கி சென்றாலும், வியர்த்து வழிய பயந்து மீண்டும் திரும்பி ஓடிவந்து, அங்கிருந்த அப்துல் அருகில் வந்து நின்றுகொள்கிறார்.

‘அவர் பயத்துடன் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த யானைக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்குமே!’ என்று நாம் நினைக்கும் நேரத்தில், அது தும்பிக்கையை தூக்கி பைசா அமான்கானை நோக்கி அசைக்கிறது. அங்குசத்தோடு நின்றிருந்த பாகன் அப்போது முன்னால் வந்து, ‘அது உங்களை பாசத்தோடு அருகில் அழைக்கிறது. பயப்படாமல் வாருங்கள்..’ என்று சொல்கிறார். உடனே தயங்கித் தயங்கி பைசா அமான்கான் அருகில் செல்ல, யானை தும்பிக்கையால் அவரை அணைத்து உச்சி முகர்கிறது.

யானைக்கும்- அவருக்கும் இடையே அங்கே அன்பான புரிதல் ஏற்பட்டுவிட்டதால், உற்சாகமாக திட்டமிட்டபடி பைசாவின் குழுவினர் மளமளவென வேலையில் இறங்குகிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் அந்த யானையோடு நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, போட்டோக்கள் எடுத்து அற்புதமான காலண்டர் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

அதில் யானையுடன் வித்தியாசமான உடை அலங்காரத்தில் அற்புதமாக தோன்றுபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். 12 மாதங்களுக்கும் யானையை 12 விதங்களில் பயன்படுத்தி போட்டோ எடுத்திருக்கிறார்கள். இதற்கான கருத்து, இயக்கம் அனைத்தையும் செய்திருப்பவர், பைசா அமான்கான். இவர் சென்னையில் உள்ள முன்னணி பேஷன் டிசைனர்களில் ஒருவர். இந்த ‘போட்டோ ஷூட்டில்’ சாக்‌ஷிக்கு தேவையான அனைத்துவிதமான ஆடைகளையும் பைசா அமான்கான்தான் வடிவமைத்திருக்கிறார்.

திகிலும், புதுமையும், அழகுணர்ச்சியும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘யானை காலண்டர்’ அறிமுக விழாவில்தான், யானையின் கலாட்டாக்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. விழாவில் நடிகை சாக்‌ஷி உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பின்பு காட்டுக்குள் யானையுடனான அனுபவங்களை கேட்க, இதனை தயாரித்து வழங்கிய பேஷன் டிசைனர் பைசா அமான்கானை (வயது 29) சந்தித்தோம்!


அப்துலுடன் பைசா அமான் கான்; ராஜா யானையுடன் நடிகை சாக்‌ஷி அகர்வால்; பைசா அமான் கான்

“நான் வாணியம்பாடியில் பிறந்துவளர்ந்தேன். எனது பெற்றோர் அமானுல்லா- நுஸ்ரத்ஜகான். எனக்கு ஒரு அக்காளும், தங்கையும் இருக்கிறார்கள். நான் பள்ளி இறுதி ஆண்டுகளில் ‘ஹோம் சயின்ஸ்’ பாடத்தை தேர்ந் தெடுத்து படித்தேன். அதில் ‘ஆடை வடிமைப்பு மற்றும் ஆடை உருவாக்கம்’ எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்டாக இருந்தது. என் அம்மா கைவினைப் பொருட்களை தயாரிப்பார். அம்மா கொடுத்த ஆர்வத்தால் நான் சிறுவயதிலேயே தையல் கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளியில் படிக்கும்போதே எனக்கான ஆடைகளை நானே உருவாக்கினேன்.

பின்பு நான் நவீன அழகுக்கலை கல்வியை கற்று அதிலும் தேர்ச்சிபெற்றேன். அடுத்து சென்னையில் விமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தேன். எனது திறமையை பார்த்துவிட்டு அதே நிறுவனம் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் வாய்ப்பினை தந்தது. ஆனால், அந்த வேலையில் சேர்ந்தால் தொடர்ச்சியாக விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டியதாகிவிடும் என பயந்து, என் அம்மா அனுமதிக்கவில்லை..” என்று கூறும் பைசா, வெள்ளித்திரையிலும் தோன்றியிருக்கிறார். சகுனி உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி, பில்ஸா சூசைன் என்ற ஐந்து வயது மகள் உள்ளாள்.

பைசா அமான்கானின் வாழ்க்கையில் அவரது மகள் மூலம்தான் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதை பகிர்ந்துகொள்கிறார்..

“ஆடை வடிவமைப்பில் எனக்கு இருந்த ஆர்வம், பெங்களூருவில் அது தொடர்பான உயர்கல்வியை கற்கவைத்தது. பின்பு எனக்கும் என் மகளுக்குமான உடைகளை மட்டும் நான் வடிவமைத்துக்கொண்டிருந்தேன். பொதுநிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான கலர்புல்லான உடை அலங்காரத்தில் தோன்றுவது பலரையும் கவர்ந்தது. இந்த நிலையில் என் மகள் குழந்தைகளுக்கான பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு மேடையில் ‘கேட்வாக்’ செய்ய ஆசைப்பட்டாள்.

அவளுக்கு பயிற்சியளிக்க ‘மாடலிங் கோஆர்டினேட்டர்’ ஒருவரை சந்தித்தேன். அவர் பயிற்சியளித்தார். பின்பு அவளை மேடை ஏற்றும்போது, அவளுக்கான காஸ்ட்யூம்களுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். அப்போதுதான் என் மகளுக்கு தேவையான காஸ்ட்யூம்களை நானே வடிவமைப்பதாக சொன்னேன். சரி என்ற அவர், நான் வடிவமைத்த ஆடைகளை பார்த்துவியந்து ஷோவில் இடம்பெறும் அனைவருக்குமான உடைகளையும் வடிவமைத்து தரும்படி என்னிடம் கேட்டார். அந்த ஷோவுக்காக ஒரே வாரத்தில் 6 குழந்தைகள் மற்றும் 14 பெண்களுக்கு வித்தியாசமான முறையில் ஆடைகளை வடிவமைத்து கொடுத்தேன்.

அந்த நிகழ்ச்சியில் என் ஆடைகளுக்கு அதிக பாராட்டு கிடைத்ததோடு அடுத்தடுத்து நிறைய பேஷன்ஷோக்களுக்கு ஆடைகள் வடிவமைத்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்கள். பல்வேறு ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றினேன். லீமெரிடியன் ஓட்டலில் ஒரு மாதம் முழுக்க தொடர்ச்சியாக பேஷன்ஷோக்கள் நடத்தினேன். அதில் 112 விதமான காஸ்ட்யூம்களை இடம்பெற செய்தேன்..” என்றவரிடம், ‘யானையையும்- நடிகையையும் இணைத்து காலண்டர் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது?’ என்று கேட்டபோது...

“முற்றிலும் புதுவிதமாக காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்த ஆசைப்பட்டேன். அதற்காக பலவிதமான ஐடியாக்களை பரிசீலித்தோம். அப்போதுதான் காட்டுக்குள் சென்று யானையைவைத்து போட்டோ எடுக்கும் திட்டம் உதயமானது. ஆனால் அதில் பல்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். கம்பீரமான யானையை தேர்ந்தெடுப்பது, அதன் உரிமையாளரிடம் பேசுவது, அரசாங்கத்திடம் படப்பிடிப்பிற்கான உரிமத்தை பெறுவது, காட்டுக்குள் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து படம்பிடிக்கும் வேலைகளை செய்வது என்று நிறைய சிரமங்கள் இருந்தன.

கேரளாவில் ஆலப்புழையில் உள்ள ஒருவர் நான்கு யானைகளை வளர்த்து வருகிறார். அவைகளை வீடியோவில் பார்த்து நீண்ட தந்தங்களை கொண்ட கம்பீரமான இந்த ராஜா யானையை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அந்த யானை எங்களைவிட பிசியாக இருந்துகொண்டிருந்தது. எல்லா நாட்களும் ஏதாவது ஒரு விழாவுக்காக அதனை முன்பதிவு செய்து வைத் திருந்தனர். அதன் கால்ஷீட் கிடைக்க தாமதமானது. கிடைத்ததும் மின்னல் வேகத்தில் செயல்படத்தொடங்கினோம்.

முதலில் அதற்கான குழுவை உருவாக்கினோம். நடிகை சாக்‌ஷி என்தோழி. அவரிடம் சொன்னதும் முதலில் ‘யானை யுடனா?’ என்று பயந்தார். பின்பு திகில் நிறைந்த வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று கருதி ஒத்துக்கொண்டார். போட்டோகிராபர் அலெக்ஸ் ஜூட்சன், மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் விஜி சரத் போன்றோரும் எங்கள் குழுவில் இணைந்தார்கள். அப்துலின் வழிகாட்டுதலில் 20 பேரை ஒருங்கிணைத்தோம்.

யானையோடு நெருக்கமாக நிற்பது, அதன் மீது ஏறி அமர்வது, அதன் தந்தங்களை பிடிப்பது, யானையோடு குளிப்பது போன்ற பல்வேறு கடினமான காட்சிகளை எடுக்க இருந்ததால் அதற்கு ஏற்றவிதத்தில் சவுகரியமான, அழகான உடைகளை புதுமையான முறையில் வடிவமைத்தேன். ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதத்தின் சீதோஷ்ணநிலை, இயற்கை சிறப்பு போன்ற கருத்தோட்டங்களையும் உடையிலும், காட்சியிலும் வெளிப்படுத்த திட்டமிட்டேன். அதற்கு ஏற்றபடி நுட்பமாக ஆடைகளை வடிவமைத்தேன்.

பின்பு அனைவரும் ஆலப்புழை சென்றோம். அங்குள்ள காட்டுப்பகுதியில் யானையை சந்தித்தோம். பத்து அடி உயரத்தில் நின்ற அது பார்க்க திகிலூட்டுவதாக இருந்தாலும், விரைவாகவே எங்களிடம் நெருக்கமாக பழகத் தொடங்கிவிட்டது. அது கொடுத்த நம்பிக்கையில் விறுவிறுப்பாக வேலைபார்த்தோம். நான்கு நாட்கள் படம்பிடித்தோம். சாக்‌ஷி நான் விசேஷமாக வடிவமைத்த புடவை மற்றும் இந்தோ வெஸ்டர்ன், ஹை-பேஷன் உடைகளில் யானையில் ஏறி போட்டோவுக்கு மாடலாக செயல்பட்டார். இந்தியாவிலேயே காட்டுக்குள்வைத்து யானை மூலம் எடுக்கப்பட்ட முதல் வித்தியாசமான ஷூட் இதுதான்.

வருடத்தின் தொடக்கமான ஜனவரி மாதத்தை நாம் மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்கொள்வோம். அதனால் அந்த காட்சியை சாக்‌ஷி லாந்தர் விளக்கோடு யானையுடன் வருவதுபோல் படமாக்கினோம். பிப்ரவரி மாதம் காதலர்களுக்கு ஏற்றது. அதனால் சிவப்பு புடவையில் அவர் யானை மீது தேவதைபோல் தோன்றும் விதத்தில் படமாக்கினோம். இ்ப்படி ஒவ்வொரு மாதத்திற்கான காட்சியும் ஒவ்வொரு விதத்தில் புதுமையாக அமைந் திருக்கிறது” என்ற பைசா அமான்கானிடம், காட்டுக்குள் யானையுடனான ருசிகரமான விஷயங்கள் பற்றி கேட்டபோது..!

“யானையும், சாக்‌ஷியும் பெரிய தண்ணீர் தொட்டி ஒன்றில் ஒன்றாக குளித்து மகிழ்வதுபோன்ற காட்சியை படம்பிடிக்க நினைத்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த மாதிரியான தொட்டி அங்கு இல்லை. அதனால் சாக்‌ஷியை யானையே குளிப்பாட்டுவதுபோல் காட்சியை மாற்றினோம். பாகன்கள் யானைக்கு அந்த காட்சியை புரியவைத்தார்கள். பெரிய பக்கெட் நிறைய தண்ணீரை கொண்டு வந்து யானையின் முன்னால்வைத்தோம். யானை மீது சாக்‌ஷியை ஏற்றினோம்.

யானை ஒரு பக்கெட் தண்ணீரையும் ஒரே நேரத்தில் தன் தும்பிக்கை மூலம் உறிஞ்சி எடுத்து, அப்படியே மேலே தூக்கி, தன்மீது உட்கார்ந்திருந்த சாக்‌ஷியை நோக்கி பீய்ச்சியது. அதுபோல் பலமுறை செய்தது. யானை மீதிருந்து சாக்‌ஷி குளியல்போட்ட அந்த காட்சி மிக தத்ரூபமாக படமாகியுள்ளது. யானையும் ரசித்து செய்தது, எங்களுக்கு ஜாலியான அனுபவமாகிவிட்டது. அந்த யானையோடு இருந்த நாட்கள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது..” என்று கூறும் பைசா அமான்கான் ‘பேப் பை பைசா’ என்ற ஆடை வடிவமைப்பு மையத்தையும் சென்னையில் நடத்தி வருகிறார்.

இவர் தனது எதிர்கால லட்சியம் பற்றி கூறுகையில்..“பெண்களின் ஆடை கனவுகள் அற்புதமானவை. அனைத்து பெண்களுக்குமே தாங்கள் நினைப்பது போன்ற கனவு ஆடை கிடைத்துவிட்டால் அவர்கள் பேரழகிகளாக ஜொலிப்பார்கள். அதை என் அனுபவத்திலே உணர்ந்திருக்கிறேன். நான் வடிவமைக்கும் சிறந்த ஆடைகள் மூலம் பெண்களின் ஆசை கனவுகளை நிறைவேற்ற விரும்புகிறேன். பிரபலங்களுக்கும் ஆடைகள் வடிவமைத்து வழங்குகிறேன்” என்றார். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகள் பேசுகிறார். பைசா அமான்கானுடன் நட்பு பாராட்டிய அந்த யானைக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அது தங்கள் மீது செலுத்திய அன்புக்கு நன்றிக்கடனான பைசா அமான்கானும், நடிகை சாக்‌ஷி அகர்வாலும் குறிப்பிட்ட கால அளவுக்கு அதற்கு உணவளிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

காட்டுக்குள் படம் பிடிக்கப்பட்ட ‘ராஜா’, இனி காலண்டர் வழியாக நாட்டுக்குள் வலம் வருவார்!

Next Story