அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 3.8% சரிவு


அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 3.8% சரிவு
x
தினத்தந்தி 13 Dec 2019 10:39 AM GMT (Updated: 2019-12-13T16:09:39+05:30)

அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 3.8 சதவீதம் குறைந்து இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் இத்துறையின் உற்பத்தி 4.3 சதவீதம் குறைந்து இருந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

பொருளாதார குறியீடு

தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐ.ஐ.பி) என்பது இந்தியாவின் ஒரு பொருளாதார குறியீடு ஆகும். சுரங்கம், மின்சாரம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியை இது சுட்டிக் காட்டுகிறது. அடிப்படை ஆண்டு ஒன்றை வைத்து ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளின் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை இந்த குறியீட்டு எண் அளவிடுகிறது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் 8 உள்கட்டமைப்பு துறைகளாகும். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் இந்த துறைகளின் பங்கு 40 சதவீதமாக இருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் 8 துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் குறைந்துள்ளது. எனவே அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். அதன்படி உற்பத்தி 3.8 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில், அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் தொழில்துறை உற்பத்தி 0.5 சதவீதம் மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆக, முதல் 7 மாதங்களிலும் இத்துறையின் வளர்ச்சி வேகம் திருப்திகரமாக இல்லை.

அடிப்படை ஆண்டு

தற்போது தொழில்துறை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய பொருளாதார குறியீடுகளை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2011-12-ஆக இருக்கிறது. அடுத்த அடிப்படை ஆண்டை 2017-18-ஆக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story