இசை தரும் பறை இப்படித்தான் தயாராகிறது

பறை இசைக்கலைஞர்களாக இருந்துகொண்டே, பறை இசைக்கருவியை உருவாக்கி ஏற்றுமதி செய்கிறார்கள் இரு சகோதரர்கள்.
பறை இசைக்கலைஞர்களாக இருந்துகொண்டே, பறை இசைக்கருவியை உருவாக்கி ஏற்றுமதி செய்கிறார்கள் இரு சகோதரர்கள். அவர்கள் பெயர்: ராஜ்குமார், முத்துப்பாண்டி. இவர்களது தந்தை நாகராஜ். திண்டுக்கல் அருகே முள்ளிப் பாடியை அடுத்த எம்.செட்டியபட்டியை சேர்ந்தவர்கள்.
“நாங்கள் 4 தலைமுறைகளாக பறை இசைக் கலைஞர்களாக உள்ளோம். சகோதரர்களான நாங்கள் 13 வயதிலிருந்து பறை இசைக்கிறோம். இளைஞரானதும் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்குழு அமைத்தோம். திருமணம், காதுகுத்து, கோவில் திருவிழா உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் எங்கள் இசை இடம்பெறுகிறது. நகரங்களில் பறை இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. துள்ளல் இசையுடன், நளினமான உடல் அசைவுகளையும் வெளிப்படுத்துவதால் நகரவாசிகளை எளிதாக ஈர்த்து விடுகிறோம். எங்களுடன் சேர்ந்து அவர்களும் ஆடத்தொடங்கி விடுவார்கள்.
நிகழ்ச்சிகளுக்கு தக்கபடி வெவ்வேறு தாளத்தில் இசைப்போம். ஒரு குழுவில் 15 முதல் 30 பேர் வரை இருப்போம். நிகழ்ச்சிக்கு ஏற்ப கலைஞர்களின் எண்ணிக்கை இருக்கும். அனைவரும் ஒரே மாதிரி இசைப்பதோடு, உடல் அசைவும் ஒரே மாதிரி இருக்கும்” என்று பறை இசை பற்றி விளக்கிய இந்த சகோதரர்கள், தற்போது பறையை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கவும் செய்கிறார்கள்.
“பறை இசை நிகழ்ச்சி மூலம் தை மாதம் தொடங்கி சுமார் 6 மாதங்கள் வரைதான் நல்ல வருமானம் கிடைக்கும். நாங்கள் பறை இசையை மட்டுமே நம்பி வாழ்வதால், வேறு தொழில் எதுவும் எங்களுக்கு தெரியாது. இசை நிகழ்ச்சி இல்லாத காலகட்டத்தில் ஏற்படும் பணநெருக்கடியை சமாளிக்க, பறை இசைக்கருவியை தயாரித்து விற்கும் முடிவுக்கு வந்தோம்.
எருமை கன்றின் தோலில் தயார்செய்தால்தான் ஓசை அற்புதமாக வெளிப்படும். அதனால் நாங்கள் ஆந்திராவில் இருந்து அந்த தோலினை வாங்கி பறை தயார்செய்கிறோம். உறுதியான மரக்கட்டையும் இதற்கு தேவை. அது எடை அதிகம் இல்லாமலும் இருக்க வேண்டும். வேம்பு மரக்கட்டையை பயன்படுத்துகிறோம். அதனை வட்டவடிவில் அறுத்து வாங்கி வருவோம். அதன்பின்னர் தேவையான அளவுக்கு ஏற்ப தோலை அறுத்து, மரக்கட்டையில் வைத்து நூல் மூலம் கட்டிவிட்டு, பின்னர் பசையால் ஒட்டுவோம். இதற்கு புளி விதைகளை அரைத்து விசேஷமான பசை தயாரிப்போம். தயார் செய்யப்பட்ட பறையை முதலில் நிழலிலும், பின்னர் வெயிலிலும் காய வைப்போம். இதனால் தோல் உறுதியாகி மரக்கட்டையை பிடித்து கொள்ளும்.
பறையின் அளவைபொறுத்து ஒலியின் அளவு மாறுபடும். இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் மொத்தம் 8 அளவுகளில் தயாரிக்கிறோம். 9 அங்குலத்தில் இருந்து பறை தயாராகிறது. அதிகபட்ச அளவான 18 அங்குலம் கொண்டது ஆதிபறை எனப்படுகிறது. அதன் இசை ஒலி அதிகமாக இருக்கும். எந்த அளவில் பறை தயாரித்தாலும், பயன்படுத்தும் விதத்தை பொறுத்துதான் அதன் ஆயுள் அமையும். பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும், இசைக்குழுக்கள் நடத்துபவர்களும் இசைப்பதற்காக இதனை வாங்கிச்செல்கிறார்கள். இதில் பெரிய அளவில் வருமானம் இல்லை. பாரம்பரிய இசைக்கருவியை மீட்டெடுப்பதே எங்கள் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பறைகளை ஏற்றுமதிசெய்கிறோம்.
ஆந்திராவில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு தோல் வாங்குவோம். அதில் 2 பறைகள் தான் செய்ய முடியும். தோலை பதப்படுத்தி சரிசெய்தல், மரக்கட்டை வாங்கி தேவையான அளவில் அறுத்தல், நூல் உள்ளிட்ட செலவுகள் சேர்த்து ஒரு பறை செய்வதற்கு ரூ.1,800 செலவாகும். அதனை ரூ.2,500-க்கு விற்பனை செய்கிறோம். ஒரு பறை தயார் செய்ய 3 நாட்கள் தேவைப்படும். பயன்படுத்திய பறையை பழுதுபார்க்க, இசைக்குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்தவர்கள் தருவார்கள். அதையும் சரிசெய்து கொடுப்போம். இந்த கலை எங்களுக்கு ஆத்ம திருப்தியை தந்துகொண்டிருக்கிறது. அதற்காக உழைக்கிறோம்” என்கிறார்கள், இந்த சகோதரர்கள்.
Related Tags :
Next Story






