சவாலான போட்டியில் சாதித்த சிறுமி
சகமாணவர்களின் உற்சாக வாழ்த்துக்களை பெறும் நிமீஷா; பெற்றோர் மற்றும் தங்கையுடன்..நமது நாடு பன்முக கலாசாரம், பலவித மொழிகளை கொண்டது என்பதால் ஆங்கில மொழி உச்சரிப்பில் சில மாநிலங்களில் லேசான மாற்றங்கள் இருக்கின்றன.
அதேபோல அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டிஷ் ஆங்கிலம் என இருவகையாகவும் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆங்கிலமே வழக்கத்தில் இருந்து வருகிறது.
இங்கிலாந்தில் உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளது. அதன் பதிப்பக பிரிவு, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்கிவருகிறது. அங்கு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடும் பணியும், ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. கூடவே ஒவ்வொரு வருடமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழிப்புலமை தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சர்வதேச அளவிலான தேர்வில் கலந்துகொள்வார்கள்.
சமீபத்தில் ‘ஆக்ஸ்போர்டு பிக் ரீட்’ என்று சொல்லப்படும் ஆசிய அளவிலான தேர்வுக்கான போட்டி நடந்தது. அதில் இந்தியா, சீனா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 6 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 20 பள்ளிகளை சேர்ந்த 300 பேர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் புத்தக வாசிப்பு, புத்தக மதிப்புரை ஆகியவற்றில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் வெற்றி பெற்றனர். அதில் 5 முதல் 8 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி பி.ஆர்.நிமீஷா முதலிடம் பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த இவர் அங்குள்ள ஸ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளியில் படிக்கிறார். 9 முதல் 11 வயது வரை மற்றும் 12 முதல் 15 வயது வரையிலான பிரிவில் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 4 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்களிடம் இளம் வயதிலேயே புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கவும், வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், மொழிப்புலமையில் சிறந்து விளங்கவும் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சவாலான இந்த போட்டியில் சாதித்த பி.ஆர்.நிமீஷா, “நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். பள்ளியில் நடக்கும் பெரும்பாலான போட்டிகளில் கலந்துகொண்டு எனது திறமையைகாட்டி வெற்றிபெறுவேன். இந்த போட்டி சவாலாக இருந்தது. போட்டியில் நான் ஜங்கிள்புக் வாசித்தேன். புத்தக மதிப்புரையும் செய்தேன். எனது மதிப்புரை ஆக்ஸ்போர்டு பிக் ரீட் தேர்வாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பள்ளியில் என்னை நன்றாக ஊக்கப்படுத்துகிறார்கள். நடனம் ஆடுவது, ஓவியங்கள் வரைவது, புத்தகங்கள் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, கீ போர்டு வாசிப்பது ஆகியவை எனது பொழுதுபோக்கு..” என்றாள். நிமீஷாவின் தந்தை பரத், தாயார் லேகா. நிமீஷாவுக்கு ரபேலா என்ற 2 வயது தங்கையும் உள்ளார்.
நிமீஷாவின் தாயார் லேகா, “இவள் ரொம்ப சுட்டியான குழந்தை. ஆனால் எங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்கமாட்டாள். அவளுக்கு ஓவியம் வரைவதிலும், கைவினைப்பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் அதிகம். நடனம் ஆடுவது, உடற்பயிற்சி செய்வதிலும் ஈடுபாடுகாட்டுகிறாள். ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழக தேர்வு பற்றி சொன்னபோது அதற்காக அவளே ஜங்கிள்புக் கதையை தேர்வுசெய்தாள். அந்த நேரத்தில் ஜங்கிள்புக் சினிமாவும் வந்ததால் அதன் அனைத்து கதாபாத்திரங்களும் அவள் மனதில் பதிந்துவிட்டது. அந்த கதாபாத்திரங்களை ஓவியமாக தீட்டி, அந்த கதாபாத்திரங்களின் இயல்புகளையும் விவரித்து எழுதி அனுப்பினாள். அதற்காக ஒரு வாரம் கடுமையாக உழைத்தாள். பரிசை வெல்ல அவள் கையெழுத்தும் முக்கிய காரணம்.
நிமீஷா புத்திசாலி சிறுமி. தினமும் அதிகாலையில் விழித்து அவளே பள்ளிக்கு கிளம்பி, பள்ளிக்கு கொண்டு செல்லவேண்டிய உணவுப் பொருட்களையும் அவளே தனது தேவைக்கு எடுத்துக்கொள்வாள். பின்பு தங்கையை எழுப்பி அவளையும் தயார்செய்வாள். பொறுப் புணர்வோடு அவள் நடந்துகொள்வதால், அவளை நாங்கள் கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறோம். நான் முன்பு விமான நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக பணியாற்றினேன். நிமீஷா பிறந்ததும் அவளோடு அதிக நேரத்தை செலவிட்டு நல்லபடியாக வளர்க்கவேண்டும் என்பதற்காக வேலையில் இருந்து விலகிவிட்டேன். குழந்தைகளை அறிவாற்றல்மிக்கவர்களாகவும், நல்லவர்களாகவும் வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமை..” என்றார்.
Related Tags :
Next Story






