உஷாரய்யா உஷாரு... காதலிக்கும் மகளை கண்டிக்கலாமா?


உஷாரய்யா உஷாரு... காதலிக்கும் மகளை கண்டிக்கலாமா?
x
தினத்தந்தி 28 Dec 2019 10:00 PM GMT (Updated: 28 Dec 2019 10:37 AM GMT)

அவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார்கள். நட்புரீதியான பழக்கம் பின்பு அவர்களுக்குள் காதலை உருவாக்கியது.

அவனுக்கு 31 வயது. அவளுக்கு 25 வயது. அவன் பிளஸ்-டூ வரை படித்திருக்கிறான். அவள் கல்லூரி படிப்பை நிறைவு செய்திருக்கிறாள். இருவருமே சுமாரான அளவிலே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அவள் குடும்பம் ஓரளவு வசதியானது. அவள் திருமணத்திற்காக பெற்றோர் நகை, பணமெல்லாம் சேர்த்துவைத்துக்கொண்டு வரன் தேடத் தொடங்கினார்கள். அப்போதுதான் அவள் தனது தாயாரிடம் பட்டும்படாமலும் தான் காதலித்துக்கொண்டிருக்கும் தகவலை சொன்னாள். அதிர்ந்துபோகாமல் நிதானமாக மகள் சொன்ன காதல் தகவல்கள் அனைத்தையும் கேட்ட தாயார், ‘அவனோடு ஊர் சுற்றுகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு ‘எப்பவாச்சும் தான்ம்மா..’ என்று பதிலளித்தாள். ‘ரகசிய கல்யாணம் அது இதுன்னு ஏதாவது பண்ணி தொலைச்சிருக்கியா?’ என்று கேட்டார். ‘அப்படி எந்த அசிங்கியத்தையும் உன் மகள் பண்ணமாட்டாள்ம்மா..’ என்று பதிலளித்தாள்.

‘சரி அப்படின்னா பொறுமையாக இரு. காதலை பற்றி உன் அப்பாவிடம் சொல்கிறேன். அவர் விசாரித்து எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அது சரியாக இருக்கும். அதற்கு நீ கட்டுப்படவேண்டும்’ என்றார்.

மகளின் காதல், அம்மாவால் அப்பாவிடம் சொல்லப்பட்டது. அவர் மகளின் காதலனை பற்றி தீரவிசாரித்துவிட்டு, ‘அவன் உன்னைவிட குறைவாக படிச்சிருக்கான். இப்போ இரண்டு பேரும் வாங்குற சம்பளத்தை சேர்த்தால் உங்க குடும்ப செலவுக்குகூட போதாது. அதுமிட்டுமில்லை அவனுக்கு எதிர்காலத்தை பற்றிய எந்த லட்சியமும் இல்லை. அவனோட சேர்க்கையும் சரியில்லை. அதனால அந்த காதல் வேண்டாம். அவன்கிட்டே விவரமா எடுத்துச்சொல்லிக்கிட்டு ஒதுங்கிடு. நான் உனக்கு வேறு வரன் பார்த்திருக்கேன். அடுத்த மாதமே நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்’ என்றார்.

காதலை விட்டுக்கொடுக்க அவளுக்கு மனமில்லை. அழுதாள்.. அரற்றினாள். பெற்றோர் மனம்மாறவில்லை. நடந்ததை எல்லாம் காதலனிடம் கூறி, அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டாள். அவன் ரகசியமாக ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு வரும்படி சொன்னான். அவளும் அந்த இடத்தை கண்டுபிடித்து சென்றாள்.

அங்கே காதலனுடன் மேலும் இருவர் இருந்தனர். அவர்களை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனால் அது ஆட்கள் புழங்கும் இடமாக இருந்ததால் அவள் தைரியமாக காதலன் அருகில் அமர்ந்தாள். ‘அவர்கள் யார்?’ என்று கேட்டாள். ‘என் நண்பர்கள்.. நம் காதல் நிறைவேற அதிரடியான ஆலோசனைகளை தர வந்திருக்கிறார்கள்’ என்றான்.

அவள், ‘என் பெற்றோர் நமது காதலை நிராகரித்து விட்டார்கள். எனக்கு சீக்கிரமே வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. அதை எப்படியாவது நிறுத்தியாகவேண்டும்..’ என்றாள்.

அது தொடர்பாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, புதிதாக வந்த நண்பர்களில் ஒருவன் திடீரென்று, ‘உங்கள் திருமணத்திற்காக உங்கள் வீட்டில் எத்தனை பவுன் நகை சேமித்துவைத்திருக்கிறார்கள்? கல்யாண செலவுக்கு எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள்?’ என்று கேட்டான்.

அவள், ‘எங்க வீட்டில் எனக்காக எழுபது பவுன் நகை வைச்சிருக்காங்க.. ஆறு லட்சம் ரூபாய் ரொக்கமும் வைச்சிருக்காங்க.. ஆனால் அவை எல்லாமும் வங்கியில்தான் இருக்கிறது’ என்றாள். அதை கேட்டதும் அவர்களுக்குள் சிறிது நேரம் கிசுகிசுவென ஏதோ பேசிக்கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் ‘முதலில் உன் கல்யாண ஏற்பாடுகளை நிறுத்தனும். அதற்கு நாங்க ஒரு அதிரடியான முடிவை எடுத்திருக்கிறோம். உனக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, லாக்கரில் இருக்கும் நகைகளை உன் வீட்டிற்கு எடுத்துவருவார்கள். அப்போது ரொக்கம் கொடுக்க பணத்தையும் எடுத்து தயாராக வைத்திருப்பார்கள். எடுத்துவந்த பின்பு அந்த நகையையும், பணத்தையும் எங்கே வைக்கிறார்கள் என்ற தகவலை மட்டும் உன் காதலனிடம் சொல்லிவிடு. நாங்கள் நள்ளிரவில் உன் வீட்டிற்கு வந்துவிடுவோம். உன் உதவியோடு நாங்கள் அவைகளை எல்லாம் கொள்ளையடித்து உன் காதலனிடம் கொடுத்துவிடுவோம். பணமும், நகையும் பறிபோவதால் உன் திருமணம் நின்றுவிடும். அதன் பின்பு நாம் நிதானமாக சிந்தித்து திட்டமிட்டு உங்கள் கல்யாணத்தை நடத்திவிடலாம்’ என்றான்.

அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அந்த யோசனையை கேட்டதும் அவளது காதலன், ‘சூப்பரான ஐடியா அப்படியே பண்ணிடலாம்..’ என்றான்.

‘சரி.. நாம் நான்கு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்குவோம்’ என்ற அவள், தனது போனில் அவர்களுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டு, வீடு திரும்பினாள்.

அப்பாவிடம், ‘நீங்க சொன்னது சரிதான்ப்பா. அவன் சேர்க்கை சரியில்லை.. திருட்டு பசங்களோட சேர்க்கை வைச்சிருக்கான்’ என்றபடி நடந்ததை எல்லாம் விவரித்துவிட்டு, அவர்களுடன் எடுத்த செல்பியை காட்டி, அந்த இரு வாலிபர்களையும் அடையாளம் காட்டினாள்.

அப்பா உடனே ‘நல்ல காரியம் பண்ணியிருக்கே.. இனியுள்ளதை நான் கவனிச்சுக்கிறேன்’ என்றார்.

காதலிக்கும் பெண்களே காதலனையும், காதலனின் பின்னால் இருப்பவர்களையும் கண்மூடித்தனமாக நம்பிடாதீங்க!

Next Story