மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு..


மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு..
x
தினத்தந்தி 5 Jan 2020 5:18 AM GMT (Updated: 5 Jan 2020 5:18 AM GMT)

திருமணமான புதிதில் தம்பதியரிடையே அதிக ஈர்ப்பும், நேசமும், பாசமும் நிலைத்திருக்கும்.

மாதங்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையேயான நெருக்கம் குறைய தொடங்கிவிடும். இருவருக்குமிடையே போதுமான தகவல் தொடர்பு இல்லாததே மனதளவில் இடைவெளி ஏற்பட காரணம். திருமணத்திற்கு முன்பும், திருமணமான புதிதிலும் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்புடனும், சந்திக்கும் வேளைகளில் மனம் விட்டு பேசியும் மனதளவில் நெருக்கமாகி இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு அப்படி காட்டிய நெருக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதில் பின்தங்கிவிடுகிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடிகள், பணிச்சூழல், வாழ்க்கை பற்றிய தேடல்கள், எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் தம்பதியரிடையேயான நெருக்கத்தை குறைத்துவிடுகிறது. திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தக்கவைத்துக்கொள்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

துணையுடன் நெருக்கத்தை பேணுவது ஆரோக்கியமான உறவுக்கு அடித்தளமிடும். முக்கியமான தருணங்களை துணையுடன் செலவிடவில்லை என்றால் இருவருக்குமிடையேயான தூரம் அதிகரித்துவிடும். துணையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. எத்தகைய பிரச்சினைகளுடன் வீட்டிற்குள் நுழைந்தாலும் துணை சொல்ல வரும் விஷயங்களை காது கொடுத்து கேட்க வேண்டும். வெறுப்புடனோ, சலிப்புடனோ அணுகக்கூடாது. அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்தவும் கூடாது. அது தம்பதியரிடையேயான ஈர்ப்பை குறைத்துவிடும்.

துணையின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் பொய் பேசவோ, துணையை ஏமாற்றும் விதமாகவோ நடந்துகொள்ளக்கூடாது. திருமணமான புதிதில் செய்யும் தவறுகளை துணை மன்னித்துவிடலாம். ஆனால் ஒருபோதும் அதனை மறக்கமாட்டார். அதனால் மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது. தொடர்ந்து தவறு செய்து கொண்டிருந்தால் துணை மத்தியில் நம்பிக்கையின்மை உண்டாகிவிடும். மன மகிழ்ச்சியையும் குறைத்துவிடும். அது இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட வழிவகுத்துவிடும்.

துணையுடன் தொடர்ந்து வாக்குவாதம், சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு கொண்டிருந்தால் அவர் மீது உண்மையான அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தம். இருவருக்கும் இடையே சச்சரவு தோன்றுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அப்படி தீர்வு காண முடியாவிட்டால் ஒருவர் மீது மற்றவர் போதுமான அக்கறை கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிவிடும். யாராவது ஒருவரே விட்டுக்கொடுத்து செல்லும் மனநிலையில் இருப்பதும் உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதை வெளிப்படுத்திவிடும்.

இருவருக்கும் இடையே எதிர்கால திட்டங்கள் குறித்து ஒருமித்த கருத்து நிலவ வேண்டும். கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் மனநிலையில் இருக்கலாம். ஆனால் மனைவி அதை விரும்பாதபோது அந்த முடிவை கைவிட்டுவிடுவதுதான் நல்லது. அல்லது வெளிநாட்டுக்கு செல்வதற்கான காரணத்தை மனைவி ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கணவன் தன் தரப்பு நியாயத்தை புரியவைக்க வேண்டும்.

வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை எடுக்கும்போது இருவரும் கருத்தொற்றுமை கொண்டிருக்க வேண்டும். இருவருக்குமிடையே மாற்றுக்கருத்து நிலவுவது மகிழ்ச்சியை குலைத்துவிடும்.

Next Story