நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6 சதவீதம் சரிவு


நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6 சதவீதம் சரிவு
x
தினத்தந்தி 10 Jan 2020 10:27 AM GMT (Updated: 2020-01-10T15:57:42+05:30)

நடப்பு நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கொல்கத்தா

நடப்பு நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 6 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மூன்றாவது இடம்

உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் சர்வதேச நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 61 கோடி டன்னாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் அது 60.7 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்தது. எனினும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது உற்பத்தியில் 7 சதவீத வளர்ச்சி இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 6 சதவீதம் குறைந்து 38.84 கோடி டன்னாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 41.25 கோடி டன்னாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 5.80 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் அதிகமாகும். அப்போது அது 5.41 கோடி டன்னாக இருந்தது.

அனல்மின் நிலையங்களில் நிலக்கரிதான் முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

நிலக்கரி சப்ளை

சென்ற ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாத காலத்தில் கோல் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 41.70 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்துள்ளது. 2018-ஆம் ஆண்டின் இதே காலத்தில் அது 44.46 கோடி டன்னாக இருந்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 5.34 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 5.28 கோடி டன்னாக இருந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story