நலிந்து வரும் சிற்பக்கலை


நலிந்து வரும் சிற்பக்கலை
x
தினத்தந்தி 24 Jan 2020 5:47 PM IST (Updated: 24 Jan 2020 5:47 PM IST)
t-max-icont-min-icon

இக்கலை தன் வரலாற்றை மாமல்லபுரம், தஞ்சை, மதுரை போன்ற இடங்களில் சான்றுகளுடன் இன்றும் பறை சாற்றுகின்ற வகையில் அமைந்து இருக்கிறது.

ரு நாட்டின் தொன்மையான வரலாற்றை அறிய வேண்டுமென்றால் அந்த நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை சார்ந்த இடங்கள், பொருட்கள், அவர்கள் விட்டு சென்ற பதிவுகள் இவைகளை ஆராய்ந்து அறிந்து தெரிந்து உலகறிய செய்வதுதான் அறிவு சார்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் வழியாகும். அந்தவகையில் தமிழகத்தில் தொன்மை வாய்ந்த அழியாத கலைகளில் முதலிடம் வகிப்பது சிற்பக்கலை ஆகும். இக்கலை தன் வரலாற்றை மாமல்லபுரம், தஞ்சை, மதுரை போன்ற இடங்களில் சான்றுகளுடன் இன்றும் பறை சாற்றுகின்ற வகையில் அமைந்து இருக்கிறது.

ராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவியால் முதலில் இக்கலை அழியாமல் பாதுகாக்கப்பட்டது. எப்படி என்றால் இவர் காலத்தில்தான் செங்கல் கோவில்களெல்லாம் எக்காலத்திலும் அழியாத வண்ணம் கற்கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. இவர் காலத்திற்கு பின்புதான் கற்களே இல்லாத விவசாயம் செய்திடும் வளமான தஞ்சை பகுதியில் தஞ்சை பெரியகோவில், தாராசுரம் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் இன்னும் பல கற்கோவிலாக சோழமன்னர்களால் அமைக்கப்பட்டு இன்றும் அழியாத கோவிலாக அக்காலத்தை சொல்வதற்கு ஆதாரமாக விளங்குகின்றன.

சோழ ராஜாக்களால் ஆதரிக்கப்பட்ட இச்சிற்பக்கலை பல வருடங்களாக மண்ணில் மறைந்த நிலையில் இருந்தாலும், சுவாமிமலையில் மட்டும் பஞ்சலோக கலையினை கட்டி காத்து வரும் பாரம்பரியம் மிக்க 40 குடும்பங்கள் இன்றும் இக்கலையினை கைவிடாமல் காத்து வருவது உலக கலை பிரியர்களுக்கு ஒரு மன நிறைவை ஏற்படுத்துகிறது.

இவ்வகையில் சுவாமிமலை பஞ்சலோக சிற்பக்கலை சோழர் காலம் முதல் 1000 ஆண்டுகள் கடந்து நிலைத்து நிற்கிறது. உலக அளவில் பிரசித்தி பெற்று வரும் இக்கலை மத்திய அரசின் புவிசார் குறியீடு சட்டத்தின் படி “சுவாமிமலை பஞ்சலோக சிலைகள்” என்கிற பெயரில் காப்புரிமை கிடைக்க பெற்று அதன் பயனாளிகளாக சுவாமிமலை வாழ் சிற்பிகள் என அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இச்சட்டத்தின் படி இத்தொழிலுக்கு மிகவும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி சுவாமிமலை பஞ்சலோக சிலைகளை பிற இடங்களில் செய்துவிட்டு, சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் என விற்பனை செய்தால் தண்டனை பெற வழிவகை செய்துள்ளது. இச்சட்டத்தால் பாரம்பரிய தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படுவது மட்டுமல்லாது உலக நாடுகளில் பெயர் பெற காரணமாகிறது. இப்பெருமை மிக்க பாரம்பரிய பஞ்சலோக சிற்பங்களையும், அதனை செய்து வரும் சிற்பிகளின் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, காரணம் வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்களால் தரம் குன்றி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சுவாமிமலை பஞ்சலோக விக்ரக தொழில் செய்யும் உடல் உழைப்பு தொழிலாளர்களான கைவினை கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இத்தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மிகச்சிறந்த கைவினை கலைஞர்கள் இத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு தமிழ்நாடு அரசு இக்கலைக்கு 5 சதவீத வாட் வரி விதிப்பு அளித்திருந்த நிலையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் 12 சதவீதமாக அதிகரித்ததால் இக்கலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வாழும் ஏழை விவசாயிகள் தங்கள் வழிபாட்டிற்கு சிறிய கோவில் கட்டி வழிபட மிகவும் சிரமப்படுகின்றனர். கோவிலில் வழிபடும் தெய்வத்திற்கு வரியா? என கேட்டு கொடுக்க மறுக்கின்றனர். இத்தொழிலில் இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் அடைகின்றனர். தன்னுடைய உடல் உழைப்பால் உருவாக்கும் சிற்பத்திற்கு தேவையான அதிக லாபம் கிடைப்பதில்லை. பஞ்சலோக சிலைகளை வாங்குபவர்கள் அனைவரும் கலை பிரியர்களும், கோவில் நிர்வாகத்தினரும் தான். இவர்கள் அனைவரும் நுகர்வோர் என்கிற முறையில் இச்சிலைகளுக்கு உண்டான வரி சுமையை அவர்களே ஏற்கக்கூடிய ஒரு நிலை. வியாபாரிகளாக இருந்தால் கொள்முதல் வரியை கழித்துக் கொண்டு விற்பனை வரியை செலுத்துகிற வாய்ப்பு ஏற்படாது.

இவ்வரி சுமையால் நலிந்துவரும் சுவாமிமலை பஞ்சலோக சிற்ப கலையினை மேற்படி வரியிலிருந்து முழுமையாக நீக்கி அல்லது குறைந்தபட்ச வரியாக குறைத்து இக்கலையினையும், இக்கலையினைசெய்து வரும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் மத்திய, மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கலை பிரியர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் கோரிக்கை.

தேவ.ஸ்ரீகண்ட ஸ்தபதி, முன்னாள் இயக்குனர், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக்கழகம், சுவாமிமலை.
1 More update

Next Story