சிறப்புக் கட்டுரைகள்

அகிலனின் நாவல் எம்.ஜி.ஆர். படமான கதை...! + "||" + Akilan's novel MGR Movie

அகிலனின் நாவல் எம்.ஜி.ஆர். படமான கதை...!

அகிலனின் நாவல் எம்.ஜி.ஆர். படமான கதை...!
இன்று (ஜனவரி 31-ந் தேதி) எழுத்தாளர் அகிலனின் நினைவு நாள்.
இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப்பெற்ற எழுத்தாளர் அகிலன் எனது தந்தையார் என்ற பெருமை எனக்கு உண்டு. அகிலன் 27-6-1922-ம் ஆண்டு கரூரில் பிறந்தார். அவரது தந்தை வைத்தியலிங்கம். தாயார் அமிர்தம் அம்மாள். அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் புதுக்கோட்டையில் இருந்து 11 மைல் தூரத்தில் உள்ள பெருங்களூர் அவருடைய சொந்த ஊர்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரிபள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த போது பள்ளி காலாண்டு இதழில் என் தந்தையார் ‘அவன் ஏழை’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினார். அதுவே அவரின் முதல் கதை. அவர் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய முதல்கதை அரசியல் ஜாதகம் கல்கியில் பிரசுரம் ஆனது.

திருமணத்திற்கு பிறகு ரெயில்வே மெயில் சர்வீசில் (ஆர்.எம்.எஸ்) வேலை கிடைத்தது. 1945-ல் கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் அகிலனின் பெண் என்ற நாவலுக்கு முதல்பரிசு கிடைத்தது. கல்கி பத்திரிகையில் பாவை விளக்கு நாவலை தொடர்கதையாக எழுதினார். இந்த நாவல் அப்பாவுக்கு லட்சக்கணக்கான வாசகர்களை தேடித்தந்தது. பாவை விளக்கு படமானது. இதில் நடிகர் சிவாஜி கணேசன், நடிகைகள் பண்டரிபாய், சவுகார் ஜானகி நடித்தனர். பிறகு அவருடைய கதை ‘வாழ்வு எங்கே’ (குலமகள் ராதை) என்ற பெயரில் படமாக வெளிவந்தது.

தொடர்ந்து சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு சிறுவர்கதை, கட்டுரை நாடகம் என பல படைப்புகள் வழியாக தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் குடியேறினார். 20 நாவல்கள், 200 சிறுகதைகள், நாடகம், சிறுவர் நூல், கட்டுரைகள், பயண நூல் என்று பலதளங்களில் தமது பங்களிப்பை நல்கினார்.வேங்கையின் மைந்தன், கயல்விழி ஆகிய நாவல்களை கல்கியிலும், சித்திரப்பாவை நாவலை ஆனந்த விகடனிலும் எழுதினார்.

சித்திரப்பாவைக்கு அகில இந்திய ரீதியில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பெரும்பரிசான ஞானப்பீடம் விருது (ரூ.1லட்சம்) கிடைத்தது. வேங்கையின் மைந்தன் நாவல் சாகித்ய அகாடமி பரிசைப்பெற்றது.

அகிலனின் பல நாவல்கள், சிறுகதைகள், பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகிலனின் கயல்விழி நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு கிடைத்தது. கயல்விழி சரித்திர நாவலை எம்.ஜி.ஆர் படமாக்க விரும்பினார்.

ஒருநாள் காலை எம்.ஜி.ஆர். தொலைபேசியில் என் தந்தையிடம் பேசினார். இன்று மாலை உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை ஒரு விழாவிற்கு அழைத்துச் சென்று மீண்டும் கொண்டுவந்து விட்டுச்செல்கிறேன். “நான் வரும்போது உங்களிடம் ஒன்று கேட்பேன்; தரவேண்டும்” என்று பீடிகையுடன் கூறிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார். பின்னர் என் தந்தை இன்னிக்கு சாயங்காலம் எம்.ஜி.ஆர். நம்ம வீட்டுக்கு வருகிறார் என்று என்னிடம் கூறினார். எனக்கு ஒரே பரபரப்பு. அப்போது சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் நல்வாழ்வு திருமண மண்டபம் எதிரே இருந்த வீட்டில் குடியிருந்தோம். வீட்டில் உள்ளோர் மற்றும் அக்கம் பக்கம் வீட்டினர் எல்லோரும் அன்றுமாலை எம்.ஜி.ஆர். வருகைக்காக பேராவலுடன் காத்திருந்தோம்.நான் அன்று மதியமே கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் இருந்து வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். எம்.ஜி. ஆர், அப்பாவிடம் என்ன கேட்கப் போகிறார்? என்று பரபரப்பாக இருந்தது.

அன்றுமாலை 5.30 மணிக்கு எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு முன்பு காரில் வந்து இறங்கினார். வீட்டுக் காம்பவுண்டு முழுக்க ரசிகர் கூட்டம் கூடி நின்றது.ரோஜா நிறத்தில் வெள்ளை உடையில் வந்த எம்.ஜி.ஆர். அப்பாவை கட்டித் தழுவினார். வெளியில் காத்திருந்த ரசிகர்களுக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, எங்கள் வீட்டிற்குள் நுழைந்தார். எம்.ஜி.ஆரிடம் குடும்ப உறுப்பினர்களை அப்பா அறிமுகம்செய்து வைத்தார். எம்.ஜி.ஆரும், அப்பாவும் தனி அறையில் கதவைப்பூட்டிக்கொண்டு சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் கதவைத்திறந்து மகிழ்ச்சி பொங்க வெளியே வந்தனர்.பின்னர்தான் தெரிந்தது எம்.ஜி.ஆர் அப்பாவிடம் கயல்விழி” நாவலைப் படமாக்க.அனுமதி கேட்ட விவரம். அப்பா மகிழ்வுடன் இசைவு தந்தார்.

எம்.ஜி.ஆர். அப்பாவையே திரைக்கதை வசனமும் எழுதச் சொன்னார். ஆனால், அவரோ கயல்விழியில் நான் கதாநாயகிக்கே முதன்மை தந்திருக்கிறேன்; நீங்கள் உங்கள் திரைப்படத்திற்கேற்றபடி மூலக் கதையின் ஜீவன் சிதையாமல் திரைக்கதை, வசனத்தை வேறு உரிய நபரை வைத்து எழுதிக் கொள்ளுங்கள்; மேலும் நான் அகில இந்திய வானொலியில் பணியில் இருப்பதால் படப்பிடிப்பு நேரத்தில் உடன் இருக்க இயலாது. எனினும் கதையையும், எழுத்தாளர் நோக்கையும் நீங்கள் மிக உயர்வாக மதிக்கிறீர்கள். பந்துலு இயக்கப்போகிறார் என்கிறீர்கள். பந்துலு மிகத் திறமையான இயக்குனர். என் இனிய நல்வாழ்த்துக்கள் என்னால் ஆன உதவியை இயன்ற அளவு செய்கிறேன் என கூறிவிட்டார். இடையில் அரசியல் மாற்றங்கள். பந்துலு லோகேஷன் பார்க்க மைசூர் பக்கம் சென்றபோது திடீரென இறந்துவிட்டார். எம்.ஜி.ஆர். பெருங்கவலை கொண்டார். எம்.ஜி.ஆரின் அரசியல் ஈடுபாடும் தீவிரமாகிக்கொண்டு வந்தது. அண்ணா தி.மு.க பிறந்து வளர ஆரம்பித்துவிட்டது.

எப்பாடுபட்டேனும் “கயல்விழி”யைப் படமாக்கிட தீர்மானித்து ப.நீலகண்டனை திரைக்கதை, வசனம் எழுத வைத்துத் தாமே இயக்கவும் செய்தார் எம்.ஜி.ஆர். “கயல்விழி” “மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன்” ஆனாள்.

அகிலன் கண்ணன், 
எழுத்தாளர் அகிலனின் மகன்.