ஜனவரி மாதத்தில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு 210 கோடி டாலராக அதிகரிப்பு


ஜனவரி மாதத்தில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு 210 கோடி டாலராக அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 9:31 AM GMT (Updated: 14 Feb 2020 9:31 AM GMT)

இந்திய நிறுவனங்கள் பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் வாயிலாக வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன.

மும்பை

ஜனவரி மாதத்தில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு 210 கோடி டாலராக (சுமார் ரூ.15 ஆயிரம் கோடி) அதிகரித்து இருக்கிறது என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் முதலீடு

இந்திய நிறுவனங்கள் பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் வாயிலாக வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. வெளிநாட்டு கூட்டுத் திட்டங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் இவ்வாறு முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் நமது நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்த முதலீடு 210 கோடி டாலராக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 147 கோடி டாலராக இருந்தது. ஆக, முதலீடு 43 சதவீதம் உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஜனவரி மாதத்தில் நிறுவனங்கள் செய்த ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டில் 79.38 கோடி டாலர் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வங்கி உத்தரவாதங்கள் வாயிலாக செய்த முதலீடு 89.08 கோடி டாலராக இருக்கிறது. 36.86 கோடி டாலர் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் மொரீஷியசில் உள்ள தனது முழுமையான துணை நிறுவனத்தில் 24.75 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. இதே போன்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 22.61 கோடி டாலரும், ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் 8.81 கோடி டாலரும் முதலீடு செய்து இருக்கின்றன.

வணிக கடன்

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வது போல் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் விற்பனை மூலம் நிதியும் திரட்டுகின்றன. பாரத ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்றும், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையிலும் வெளிநாடுகளில் கடன் திரட்டப்படுகிறது. இதில் வணிக கடன்கள், அன்னிய செலாவணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்கள் (எப்.சி.சி.பீ) மற்றும் ரூபாய் மதிப்பு கடன்பத்திரங்கள் வெளியீடு ஆகியவை பிரபலமாக உள்ளன.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story