தொல்லியல் - அருங்காட்சியக அதிகாரி பணிகளை அறிவீர்களா?

பழம் பெருமைகளையும், பண்பாட்டையும் விளக்கும் தொல்பொருள் சான்றுகள் பாதுகாக்கப்படும் இடங்களே அருங்காட்சியகங்கள்.
பெருமை மிகு அருங்காட்சியகங்களை பராமரிக்க, மத்திய மாநில அரசுகள் கணிசமாக நிதி ஒதுக்கி வருகின்றன. இதில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. அவற்றைப் பெற குறிப்பிட்ட கல்வித்தகுதியைப் பெறுவது அவசியம். சமீபத்தில்கூட கொல்கத்தா அருங்காட்சியகத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத் தக்கது.
அருங்காட்சியக அதிகாரி பணி பற்றியும், அதற்கு தேவையான திறன்களைப் பற்றியும் இங்கு பார்ப்போம்...
அருங்காட்சியக கல்வி அதிகாரியின் பணி என்பது பார்வையாளர்களாக வருவோரை இன்முகத்துடன் வரவேற்பதுடன், தொல்லியல்துறை சான்றுகள் தொடர்பாக அவர்கள் விரும்பும் வண்ணம் விளக்கி கற்றுத்தர வேண்டும். அருங்காட்சியகம் என்பது அனைத்துப் பிரிவினரும் கற்றுக்கொள்ளும் இடமாகும்.
அருங்காட்சியக அதிகாரி பல பிரிவினருக்கு நடத்தும் இந்தத்துறை தொடர்பான வகுப்புகளை மதிப்பீடு செய்வது, நிகழ்ச்சிகள் நடத்துவது என்று அருங்காட்சியகத்தை முழுமையாக அவர்களிடம் படம் பிடித்துக்காட்ட வேண்டும். அருங்காட்சியகத்தின் அளவு நிதி நிலைமை கொள்கைகள் ஆகியவற்றை பொறுத்து அருங்காட்சியக அதிகாரியின் பணிப்பழு கூடவும், குறையவும் செய்யும்.
பேச்சு பயிற்சி பட்டறை நடத்துதல்,
கண்காட்சி நடத்துதல்,
ஆண்டு விழா நடத்துதல்
பழம் பொருட்களை சேகரிக்கும் பழக்கத்தை பள்ளி-கல்லுரி மாணவர்களுக்கு ஏற்படுத்துதல்,
அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பழம் பொருட்களைப் பற்றி யாவரையும் அறியச் செய்தல்
அருங்காட்சியகத்தை பாதுகாத்தல் - பராமரித்தல்
இவை யாவும் அருங்காட்சியக அதிகாரியின் பணிகளில் மிகவும் இன்றியமையாதது.

தொல்லியல் மற்றும் கலைப்பொருள்களை சேகரிப்பது, பதிவேடுகளை பராமரிப்பது, பொதுமக்களுக்கு அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்களை காட்சிப்படுத்துவது விரிவுரை நிகழ்த்துவது அருங்காட்சியக துறையுடன் தொடர்புடைய கல்வித்துறை, நிதி ஆதாரங்களை சேகரிக்கும் துறை, சந்தையியல் துறை போன்ற துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பும் இந்த அதிகாரிகளுக்கு உண்டு. கணினியில் தமது துறை சார்ந்த செய்திகளை தற்காலம் வரை சேமித்து வைப்பதும் முக்கிய பணியாகும்.
தொல்பொருள் ஆய்வாளர்
அருங்காட்சியக அதிகாரி - தொல்பொருள் ஆய்வாளர் பணி இரண்டும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. தொல்பொருள் ஆய்வாளரின் முக்கிய பணி களப்பணியாற்றுவதாகும். களப்பணியில் விசாரணை செய்வது, ஆய்வு செய்ய வேண்டிய இடங்களை ஆராய்வது, முடிவுகளை ஆராய்வது, கள ஆய்வின் முடிவுகளை வெளியிடுவது இத்துறையின் பல்வேறு பிரிவுகளைப் பற்றி ஆய்வு மனப்பான்மையுடன் படிப்பதும் இவரது பணியாகும்.
இந்தத் துறையில் களத்தொழில் நுட்ப பணியாளராக ஆரம்ப நிலையில் பணியை தொடங்க வேண்டும். தொடர்ந்து பணியாற்றுவோர் களப்பிரிவின் இயக்குனராக பதவி உயர முடியும்.
இந்தத் துறை தொடர்பான கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளராக, பேராசிரியராகவும் இத்துறை சார்ந்தவர்கள் பணியாற்ற முடியும்.
தொல்பொருள் துறையில் முதுகலை - முது அறிவியல் படித்து எம்.பில் முடித்த, பி.எச்டி ஆய்வு செய்து பட்டம் பெறுவோர் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாக, பேராசிரியர் ளாக பணியாற்றலாம்.
ஆய்வு தொடர்பாக அவ்வப்போது இவர்கள் களப்பணிக்கும் செல்ல வேண்டியதிருக்கும். தொல்லியல் முதுகலைப் பட்டம் பெற்று இத்துறையில் ஆய்வாளர்களாக உள்ளவர்களை வனத்துறை, நிலமேலாண்மை, பண்பாட்டு ஆதார மேலாண்மை, தேசிய பூங்கா சேவை, நெடுஞ்சாலைத் துறை போன்ற துறைகளிலும் பணி பெறும் வாய்ப்பு உள்ளது.
அரசு சாராத துறைகளும், தொல்லியல் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு பொருட்களை செய்திகளை ஆவணப்படுத்தி வருகின்றன. அரசுக்கும் தகவல் தெரிவித்து உதவியாக இருக்கின்றன. குறிப்பாக வரலாற்று இடங்களில் அரசு சாராத நிறுவனங்கள் ஆய்வுகளில் ஈடுபட விரும்புகின்றன.
பல்வேறு கழகங்களும் வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களைப் பாதுகாத்து வருவதுடன் அங்கே அடிப்படை வசதிகளைப் பார்வையாளர்களுக்கு செய்து தருகின்றன. தொல்பொருள் ஆய்வாளர்களும் இந்தவகை நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக உள்ளனர்.
தொல்பொருள் ஆராய்ச்சி துறையிலும் எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்கள் கள ஆய்வு செய்து, கள ஆய்வின் அறிக்கை தயாரிப்பது, தொல்பொருள் ஆய்வின் முடிவுகளை ஆராய்வது கண்டறிந்த கலை நுட்பங்களை பதிவு செய்வது அவற்றை புகைப்படம் எடுப்பது, புதிய தொல்பொருள் ஆய்வுக்குரிய இடங்களை கண்டறிந்து பட்டியல் தயாரிப்பது ஆகிய பணிகளை செய்கின்றனர். இவர்கள் இத்துறையில் குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்றிருந்தால்தான் தொல்பொருள் துறை இயங்கும் விதத்தை புரிந்துகொள்ள முடியும். இந்தத் துறையில் சுதந்திர பணியாளராக ஒருவர் உருவாவதற்கு மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் தற்காலத்தில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகப் பிரிவில் சிறந்த வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரியது.
Related Tags :
Next Story