யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பயம் தீருமா?


யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பயம் தீருமா?
x
தினத்தந்தி 10 March 2020 8:42 AM GMT (Updated: 2020-03-10T14:12:46+05:30)

1969 -ம் ஆண்டு 14 தனியார் வங்கிகளும், 1980-ம் ஆண்டு 6 தனியார் வங்கிகளும் தேசியமயக்கப்பட்ட பின்னர் 1968-ம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட சில தனியார் வங்கிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.

1969 -ம் ஆண்டு 14 தனியார் வங்கிகளும், 1980-ம் ஆண்டு 6 தனியார் வங்கிகளும் தேசியமயக்கப்பட்ட பின்னர் 1968-ம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட சில தனியார் வங்கிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. 1994-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி சில நிறுவனங்களுக்கு தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய வங்கிகள் ஆரம்பிப்பதற்கு லைசென்ஸ் வழங்கியது. அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிகள்தான் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, இண்டஸ் இன்ட் வங்கி, செஞ்சுரியன் வங்கி, டைம்ஸ் வங்கி, பேங்க் ஆப் பஞ்சாப் வங்கி ஆகிய வங்கிகள் ஆகும்.

பின்னாளில் நிர்வாக காரணங்களால் 2008-ம் ஆண்டு டைம்ஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்தது, பின்னர் 2005-ம் ஆண்டு செஞ்சுரியன் வங்கியும், பேங்க் ஆப் பஞ்சாப் வங்கியும் இணைந்து செஞ்சுரியன் பேங்க் ஆப் பஞ்சாப் என்று பெயரை மாற்றிக்கொண்டது. அதே ஆண்டு இறுதியில் செஞ்சுரியன் பேங்க் ஆப் பஞ்சாப் வங்கி, எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்தது.

யெஸ் வங்கி 2004-ம் ஆண்டு ராணா கபூர் என்ற வங்கி அதிகாரியும், அவரது உறவினரான அசோக் கபூர் என்பவராலும் மும்பையை தலைமையகமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ராபோ பேங்க் என்ற வங்கியும் 20 சதவீத பங்குகளை வாங்கியது. பின்னர் 2008-ம் ஆண்டு அசோக் கபூர் இறந்து விட்டார். ராணா கபூர் வங்கியை நடத்தி வந்தார்.

தற்போதைய நிலைமையில் இந்த வங்கி 18 ஆயிரத்துக்கும் மேல் ஊழியர்களையும், 1,122 கிளைகளையும் மற்றும் 1,220 ஏ.டி.எம்.களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்த வங்கி சிறப்பாக செயல்பட்டு கீழ்கண்ட விருதுகளையும் பெற்றுள்ளது.

1. 2004-ம் ஆண்டு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வங்கி என்ற பரிசை ப்ளூம்பெர்க் நிறுவனம் வழங்கியது. 2. 2015-ம் ஆண்டு “இந்த ஆண்டின் சிறந்த வங்கி” என்ற பரிசை லண்டனில் இருந்து வெளிவரும் “பேங்கர்” என்ற பத்திரிகை நிறுவனம் வழங்கியது. 3. மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தங்கள் தொழில் நுட்பதுறை, “டிஜிட்டல் பரிமாற்றத்தில் சிறந்த வங்கி” என்ற பட்டத்தை வழங்கியது.

இவ்வளவு பெருமையுடன் செயல்பட்டு வந்த யெஸ் வங்கியின் தற்போதைய நிலைமை என்ன? யெஸ் வங்கி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்குவதையே குறிக்கோளாக கொண்டிருந்தது. யெஸ் வங்கியின் வாராக்கடன்கள் ரூ.3,277 கோடிகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கிக்கு தெரியவந்தது. மேலும் வங்கியின் சில நிர்வாக முடிவுகளும் அதன் தற்போதைய நிலைமைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பற்றாக்குறையை சரிக்கட்ட ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய முதலீட்டையும் கொண்டுவர தவறிவிட்டது.

2020-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 11949 பிரிவு 45-ன் கீழ், ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியின் மீது “மாரடோரியம்” (கட்டுப்பாடு) விதித்துள்ளது. இதற்கு சொல்லப்பட்ட காரணம், யெஸ் வங்கி நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டை கொண்டுவர தவறிவிட்டது என்பதுதான். மாரடோரியம் என்பது சில தடை விதிப்புகளை குறிக்கும். ரிசர்வ் வங்கி தனது பலவிதமான ஆய்வுக்கு பின்னர், வங்கியை பலமுறை அறிவுறுத்தியும், யெஸ் வங்கியானது ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ள குறைகளை சரி செய்யாததன் காரணமாக இந்த தடை விதிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கியின் செயல்பாட்டை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதில் ஒன்றுதான் இந்த வங்கியை வேறொரு வங்கியுடன் இணைத்து வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளை பாதுகாப்பது ஆகும். இந்த மாரடோரியம் கால அவகாசத்தில் யெஸ் வங்கியின் உயர்மட்ட நிர்வாக குழு முடக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை மேனேஜிங் டைரக்டராக இருந்த பிரஷாந்த் குமார் என்பவரை யெஸ் வங்கியின் நிர்வாகத்தை கவனிக்க ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.

இந்த தடை காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகளை விதிப்பது ஒரு வழக்கமான நடைமுறையே ஆகும். அதுதான் தற்போதைய அதிகபட்ச தொகையான ரூ.50 ஆயிரம் மட்டும் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு. வாடிக்கையாளர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் சில சிக்கல்களும் அதை சரி செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்படுவதையும் தங்களின் பணத்துக்கு பாதுகாப்பை ஏற்படுத்தவே என்பதை உணர வேண்டும். இந்த கால கட்டத்தில் கலவரப்பட்டு வங்கியின் முன் திரளுவது தேவை இல்லை. யெஸ் வங்கி தனியார் வங்கியாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கி ஆகும். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வாடிக்கையாளர்களின் பணத்தின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் ஏற்படாது என்பதை உறுதி செய்துள்ளது.

இதற்கு முன்பும் கூட சில வங்கிகள் மீது மாரடோரியம் விதிக்கப்பட்டு பின்னர் அந்த வங்கிகளை மற்ற வங்கியுடன் இணைத்து வாடிக்கையாளர்களின் பணத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, 2004-ம் ஆண்டு குளோபல் டிரஸ்ட் வங்கி என்ற தனியார் வங்கியை ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்ற பொதுத்துறை வங்கியுடன் இணைத்தது இதைப்போன்ற ஒரு சூழ்நிலையில்தான். யெஸ் வங்கியின் மீது விதிக்கப்பட்ட மாரடோரியம் காலம் மார்ச் 5, 2020 முதல் ஏப்ரல் 3, 2020 வரை ஆகும்.

இந்த இடைப்பட்ட கால அவகாசத்தில், ரிசர்வ் வங்கி ஒரு “ஸ்கீம் ஆப் ரிகன்ஸ்ட்ரக்க்ஷன்” என்ற வரைவை ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளது. இதில் எஸ்.பி.ஐ. வங்கி பெரும்பங்கு முதலீடு செய்ய இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் ஊழியர்கள், அவர்கள் ஊதியம் மற்றும் வங்கி கிளைகள் இவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணைப்புக்கு பின்னர் புதிய வங்கி, தற்போது உள்ள வங்கி கிளைகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யெஸ் வங்கியின் மூலதனத்தில், பாரத ஸ்டேட் வங்கி 49 சதவீதம் வரை முதலீடு செய்ய இருப்பதாக அந்த வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுடனும், நிதி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏப்ரல் 3, 2020 மாரடோரியம் முடியும் முன்னர் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. அதுவரை வதந்திகளை நம்பி செயல்படாமல் இருப்போம்.

எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி.

Next Story