கச்சா எண்ணெய் விலை சரிவால் நடப்புக்கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைய வாய்ப்பு

நடப்பு நிதி ஆண்டில் (2019-20), ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் 1,420 கோடி டாலர் அளவிற்கு நடப்புக்கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது.
புதுடெல்லி
கச்சா எண்ணெய் விலை சரிவால் நடப்புக்கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அன்னிய செலாவணி
நடப்புக்கணக்கு பற்றாக்குறை என்பது மொத்த அன்னிய செலாவணி செலவிற்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமாகும். வர்த்தக பற்றாக்குறை (சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) அதிகரிக்கும் போது நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் (2019-20), ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் 1,420 கோடி டாலர் அளவிற்கு நடப்புக்கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது. அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் பற்றாக்குறை 630 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. மொத்த உற்பத்தி மதிப்பில் இது 0.9 சதவீதமாகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 1,900 கோடி டாலராக (2.9 சதவீதம்) இருந்தது. முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) பற்றாக்குறை (2.6 சதவீதத்தில் இருந்து) 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.
அன்னிய முதலீடுகள் அதிகம் வெளியேறுவது, ரூபாய் வெளிமதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் நடப்புக்கணக்கு நிலவரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்க வேண்டுமானால் தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதுடன் அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அண்மைக் காலத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் இறக்குமதியை அதிகம் நம்பி இருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஆதாயம் என்றே சொல்லலாம். வர்த்தக பற்றாக்குறை குறைந்து நடப்புக்கணக்கு நிலவரங்கள் முன்னேற்றம் காணும் என்பதே இதற்கு காரணமாகும்.
ஒரு பேரல் விலை
ஒரு பேரல் எண்ணெய் விலை 7 டாலர் சரியும் பட்சத்தில், எதிர்வரும் நிதி ஆண்டில் (2020-21) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை 0.7 சதவீதமாக குறையும் என்றும், ஒரு பேரல் எண்ணெய் விலை 10 டாலர் குறைந்தால் 0.3 சதவீதமாக குறையும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
Related Tags :
Next Story