கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும்? - ஆய்வில் புதிய தகவல்


கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு  சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும்? - ஆய்வில் புதிய தகவல்
x
தினத்தந்தி 14 July 2020 10:15 AM GMT (Updated: 14 July 2020 10:15 AM GMT)

கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும்? என்பது குறித்து புதிய ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மின்னல் வேகத்தில் இந்த நோய்த்தொற்று பரவி வருகிறது. இது ஒருபுறமிக்க கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்நோய்த்தொற்று ஏற்படுமா?  இல்லையா? என்பது குறித்து பல்வேறு புதிரான  கருத்துக்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று இங்கிலாந்தின் பல்கலைக்கழக ஆய்வு  தெரிவித்துள்ளது.  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.  இதில், குணமடைந்த 3 வாரங்கள் வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது.

60 சதவீத நோயாளிகளுக்கு  ஆரம்ப கட்ட வாரங்களில் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி  தென்பட்ட போதிலும் ,  மூன்று மாதங்களுக்கு பிறகு 17 சதவீத  நபர்களுக்கு  மட்டுமே எதிர்ப்பு திறன் இருந்தது. 90 நாட்களுக்கு பிறகு பலருக்கு உடலில் ஆண்டிபாடிகள்(antibodies) எதுவும் இல்லை என்று ஆய்வு கூறுகிறது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது.  இந்த ஆய்வு முடிவுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.


Next Story