விவாகரத்தை நோக்கி விரைந்து செல்லவேண்டாம்


விவாகரத்தை நோக்கி விரைந்து செல்லவேண்டாம்
x
தினத்தந்தி 28 Feb 2021 2:33 PM GMT (Updated: 28 Feb 2021 2:33 PM GMT)

தேடிக் கண்டுபிடித்து பல்வேறு விதங்களில் பல மாதங்கள் விசாரித்து மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்கிறார்கள். ஏகப்பட்ட அலைச்சல், கடும் உழைப்பு, கணக்கற்ற பணத்தை செலவு செய்துதான் மணவிழாவில் அவர்களை கணவன்-மனைவியாக இணைத்துவைக்கிறார்கள்.

இதில் பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டால் ஏகப்பட்ட கனவுகளோடுதான் புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்துவைக்கிறார்கள். கணவரோடு கல்யாண வாழ்க்கையை தொடங்கும் பலரது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தாலும் ஒருசில பெண்களின் வாழ்க்கை திசைமாறி விவாகரத்தை நோக்கி சென்றுவிடுகிறது.‘வேறு வழியே இல்லை.. விவாகரத்து மட்டுமே தீர்வு' என்று நினைக்கும் பெண்கள், சில முக்கியமான விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். அவைகளை நன்றாக புரிந்து தெளிவுபெற்ற பின்புதான் பெண்கள் விவாகரத்து பற்றிய முடிவுக்கு வரவேண்டும்.

விவாகரத்து செய்துகொண்ட பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். கணவரால் ஏற்பட்ட துக்கம், துரோகம், ஏமாற்றம், அலைச்சல் போன்றவைகளை அவர்கள் கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில மாதங்களாகும். அப்போது அவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். உணர்ச்சிவசப்படுவார்கள். வன்மம், குற்ற உணர்ச்சி போன்றவைகள் தலைதூக்கும். இவைகளை எல்லாம் நீங்களும் எதிர்கொண்டு படிப்படியாக அதில் இருந்து மீண்டு வெளிவரவேண்டியதிருக்கும்.விவாகரத்தாகிவிட்ட பின்பு, நடந்து முடிந்த விஷயங்களையே மீண்டும் நினைத்து வருந்திக்கொண்டிருக்க கூடாது. 

புதிய விஷயங்களில் கவனத்தை செலுத்தவேண்டும். பழையதை மறந்து, புதியதை நோக்கி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை நகர்த்திச்செல்ல தயாராக இருக்கவேண்டும். குழந்தை இல்லாத பெண்களுக்கு அதிக மனஉளைச்சல் ஏற்படாது. குழந்தைகள் இருந்து பெற்றோர் பிரியும்போது, அவைகள் பெரிதும் பாதிக்கப்படும். இருவரது அரவணைப்பிலும் இணைந்து வளர்ந்த குழந்தைகள், பெற்றோர் ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்துபோவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். விவாகரத்து செய்துகொள்வதற்கு முன்பு இருவரும் இணைந்து குழந்தைகளிடம் பக்குவமாக பேச வேண்டும். ‘உங்களின் அனைத்து தேவைகளையும் நாங்கள் நிறைவேற்றிவைப்போம். எங்கள் பிரிவை நினைத்து நீங்கள் கலங்க வேண்டியதில்லை’ என்று கூறி, குழந்தைகளுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கவேண்டும். வார்த்தைகளோடு அதை விட்டுவிடாமல் செயலிலும் காட்டவேண்டும்.

விவாகரத்து ஆகும்போது அனைத்து குழந்தைகளுமே தாயின் அரவணைப்பை நாடித்தான் வருவார்கள். தாயின் பராமரிப்பில்தான் அவை வளரவும் விரும்பும். ஆனால் விவாகரத்துக்கு பின்பு குழந்தைகளிடம் தனது செல்வாக்கை நிரூபித்து அவைகளை தன் பக்கம் இழுக்க கணவர் முயற்சிக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது என்ன செய்யவேண்டும் என்பதை விவாகரத்துக்கு முன்பே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

திறமை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறமுடியும். கணவரோடு வாழ்ந்தது வரை உங்கள் திறமைகள் முடக்கப்பட்டிருக்கலாம். விவாகரத்துக்கு தயாராகும்போது முதலில் உங்கள் திறமைகளை எல்லாம் புத்தாக்கம் செய்யவேண்டும். புதுவேகத்தில் அந்த திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த திட்டமிடவேண்டும். கூடுதலாக கற்று, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு 
நகர்த்திச்செல்லும் தன்னம்பிக்கையையும் கொண்டிருக்கவேண்டும்.

பெண்கள் விவாகரத்து செய்துகொண்டதும் சிலர் தேடிவந்து ஆறுதல் சொல்வார்கள். உதவுவதாக உறுதிகொடுப்பார்கள். அப்படிப்பட்ட அனுதாப கூட்டத்திற்குள் ஒருபோதும் பெண்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. அனுதாபத்திற்குள் சிக்கிக்கொண்டால் அதிலே மூழ்கி விடுவீர்கள். மற்றவர்கள் காட்டும் அனுதாபம் சிறிது காலத்திற்குதான் கைகொடுக்கும். அதனால் தொடக்கத்தில் இருந்தே மற்றவர்கள் உங்கள் மீது அனுதாபம் காட்ட இடம்கொடுத்து விடக்கூடாது. அடுத்தவர்கள் கொடுக்கும் ஆலோசனையை கேட்டு விவாகரத்துக்கான முடிவை எடுத்துவிடாதீர்கள்.

ஒரு பெண் விவாகரத்து பெறும்போது அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். கணவனும்- மனைவியும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம். ஒருவேளை தவறு பெண்கள் பக்கமே இருக்கலாம். அப்படி தவறு உங்கள் பக்கம் இருந்தால் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் செய்த தவறை தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. தவறுகளை திருத்திக்கொண்டால்தான் வாழ்க்கையில் சரியான பாதையில் பணிக்கமுடியும்.

விவாகரத்து செய்த பெண்கள் பலர் வாழ்க்கையில் தோற்றுப்போயிருக்கலாம். அதையே நீங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் வாழ்க்கையும் அதுபோல் ஆகிவிடும் என்று பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ முன்வரவேண்டும். அதே நேரத்தில் முடிந்த அளவு விவாகரத்து செய்யாமல் பொருந்தி வாழ முயற்சிக்க வேண்டும்.

Next Story