சிறப்புக் கட்டுரைகள்

காற்றால் `கரையும்' நகரங்கள் + "||" + Cities melting by the wind

காற்றால் `கரையும்' நகரங்கள்

காற்றால் `கரையும்' நகரங்கள்
காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அது பெருமளவு சுகாதார சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. உலக பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
உலகளாவிய பருவ காலநிலை ஆர்வலர் குழுவான ‘கிரீன்பீஸ்’ எனும் அமைப்பு ‘காற்று மாசு ஆய்வு 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், காற்று மாசு காரணமாக இந்தியாவில் 

உள்ள 6 நகரங்களில் மட்டும் சுமார் 1.2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், காற்றின் தரம் மோசமடைந்திருப்பதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு 2 லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கிறது.

உலக அளவில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் காற்று மாசுபாடு பாதிப்பில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 3.7 கோடி பேர் வசிக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக டெல்லி (3 கோடி), சாங்காய் (2.6 கோடி), மெக்சிகோ (2.2 கோடி), சாவோ பாலோ (2.2 கோடி) போன்ற நகரங்கள் காற்று மாசு பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 54 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக மும்பையில் இறப்பு எண்ணிக்கை 25 ஆயிரமாக உள்ளது. மூன்றாவது இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. அங்கு 12 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 
உலக அளவில் இந்த ஐந்து நகரங்களில் மட்டும் காற்று மாசு காரணமாக தோராயமாக 1 லட்சத்து 60 ஆயிரம் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதுபற்றி கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த அவினாஷ் சஞ்சல் கூறும்போது, ‘‘கடுமையான ஊரடங்கு சமயத்தில் மட்டும்தான் காற்றின் தரம் சற்று மேம்பட்டிருக்கிறது. பசுமை சூழல் மற்றும் நிலையான தீர்வுகளை நோக்கி நாம் நகர வேண்டியுள்ளது. மாசுபட்ட காற்றானது, புற்றுநோய் மற்றும் பக்கவாதம் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்திருக்கிறது. ஆஸ்துமா பாதிப்புக்கும் ஆளாக்குகிறது. கொரோனா அறிகுறிகள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். நிலையான மற்றும் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதை உறுதி செய்வது 
இன்றியமையாதது. கார்பன் உமிழ்வை குறைக்கும் போக்குவரத்தை நாட வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், பொது போக்குவரத்து, தூய்மையான எரிபொருள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இவை பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதோடு பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்’’ என்கிறார்.

பெங்களூருவில் மட்டும் 820 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 94 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஊரடங்குக்கு பிறகு வாகன பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதுபற்றி கர்நாடக மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘காற்று மாசுபாட்டின் பின்னணியில் வாகன எண்ணிக்கை, மெட்ரோ மற்றும் பிற கட்டுமானங்கள், தொழில்துறை நடவடிக்கைகள் போன்றவை ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன’’ என்கிறார்கள்.