சிட்டுக்குருவிகளின் ‘காதலர்’

காணாமல் போன சிட்டுக்குருவிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க நினைப்பவர்களின் பட்டியலில், பாண்டியராஜனும் ஒருவர்.
லேத் பட்டறை நடத்துபவரான இவர், கடந்த 9 வருடங்களாக சிட்டுக்குருவிகளுக்கான மரக்கூடுகளை உருவாக்கி, இலவசமாக வழங்கி வருகிறார். ஊர் முழுக்க சிட்டுக்குருவி வளர்ப்பு கூடுகளை தொங்கவிட்டிருக்கிறார். சிட்டுக்குருவிகளின் காதலராக அறியப்படும் இவரிடம் சிறுநேர்காணல்...
* உங்களை பற்றி கூறுங்கள்?
கோவை போத்தனூர், என் சொந்த ஊர். இங்குதான் லேத் பட்டறை வைத்திருக்கிறேன். 5-ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். இருப்பினும் வாசிப்பு பழக்கத்தின் மூலம் பல புத்தகங்களை படித்து, பல விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன். வாசிப்பு பழக்கத்தினால்தான் சூழலியல் பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் எனக்கு உண்டானது.
* சிட்டுக்குருவிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
சிட்டுக்குருவிகளை யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்கள்? எனக்கும் சிறுவயதில் இருந்தே சிட்டுக்குருவிகளை பிடிக்கும். எங்கள் வீட்டின் ஓட்டு இடுக்குகளில் தங்கி இருந்து குஞ்சி பொரிக்கும். நாங்கள் தூவும் அரிசிகளை உணவாக்கி கொள்ளும். கீச்... கீச்... சத்தம் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் திடீரென சிட்டுக்குருவிகளை பார்க்கமுடியவில்லை. அதன் ‘கீச்’ ராகத்தையும் கேட்கமுடியவில்லை. இப்படி என் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகளை தேட ஆரம்பித்து, இன்று அவற்றிற்காக வாழ பழகி கொண்டிருக்கிறேன்.
* சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைக்க தொடங்கியது எப்போது?
விளையாட்டாக ஆரம்பித்த முயற்சி அது. பழைய அட்டைப்பெட்டிகளை தேடி எடுத்து, வீட்டிலும் அக்கம் பக்கத்து தெருக்களிலும் மாட்ட ஆரம்பித்தோம். காணாமல் போயிருந்த சிட்டுக்குருவிகள் மெதுவாக அட்டைப்பெட்டி கூட்டிற்குள் குடிபெயர ஆரம்பித்தன. அதனால் என் நண்பர்களோடு இணைந்து, ஊர் முழுக்க அட்டைப்பெட்டி கூடுகளை தொங்க விட்டேன். சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காகவே, 2012-ம் ஆண்டு ‘சிட்டுக்குருவி காப்பு இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கினோம்.
* இதுவரை எத்தனை கூடுகளை அமைத்திருப்பீர்கள்?
ஆரம்பத்தில் அட்டைப்பெட்டிகளில்தான் கூடுகளை அமைத்தோம். இது ரொம்பவும் எளிமையானது. சுலபமானதும் கூட. ஆனால் சிட்டுக்குருவிகளால் அதை நிரந்தரமாக பயன்படுத்தமுடியாது. மழை, பனிப்பொழிவு போன்ற காரணங்களால் அட்டைப்பெட்டி கூடுகள் வெகு விரைவிலேயே சேதமடைந்துவிட்டன. அதனால் நிரந்தர கூடுகளை அமைக்கும் பணியில் இறங்கினோம். அந்தசமயத்தில் கோவை மாநகராட்சி ஆணையரின் வழிகாட்டுதலின்படி, ‘புராஜெக்ட் ஸ்பேரோ’ என்ற திட்டத்தின் மூலமாக, பிளைவுட் பலகையில் உறுதியான கூடுகளை அமைத்து, கோவை நகரம் முழுக்க தொங்கவிட்டோம்.
கோவை மட்டுமின்றி, சிட்டுக்குருவி வளர்க்க ஆசைப்படும் நல் உள்ளங்களின் இல்லங்களுக்கு இலவசமாக வழங்கினோம். பெங்களூரு, ஒடிசா... என எங்களது உழைப்பில் உருவான பிளைவுட் கூடுகள், பல பகுதிகளில் சிட்டுக்குருவி வீடாக மாறியிருக்கிறது. 2012-ம் ஆண்டில் இருந்து இப்போது வரைக்கும், 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிரந்த கூடுகளை அமைத்திருக்கிறோம்.
* சிட்டுக்குருவிக்கு கூடு அமைப்பதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?
சிட்டுக்குருவி கூட்டின் முக துவாரத்தை மிக சிறிதாக அமைக்க வேண்டும். இல்லையெனில் சிட்டுக்குருவிக்கு என அமைக்கும் கூட்டில் மைனா போன்ற சிறு பறவைகள் ஆக்கிரமித்து கொள்ளும்.
ஆரம்பத்தில் நாங்களும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டோம். பிறகு சுதாரித்து, சிறிய முகத்துவாரங்கள் கொண்ட கூடுகளை அமைத்து, சிட்டுக்குருவிகளின் நலன் காத்தோம்.
* ஒரு கூடு செய்ய எவ்வளவு செலவாகும்?
பிளைவுட், ஆணி போன்ற மூலப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, நண்பர்களோடு சேர்ந்து நானே உருவாக்கி விடுவதால், ஒரு கூட்டிற்கு ரூ.80 செலவாகிறது. என் லேத் பட்டறையை, சிட்டுக்குருவி கூடு உருவாக்கத்திற்கான தொழிற்சாலையாக பயன்படுத்திக்கொள்கிறோம். இதற்கான மொத்த செலவையும், நாங்களே பார்த்து கொள்கிறோம். இதுவரை தொங்கவிட்ட, 3 ஆயிரம் கூடுகளும் எங்களுடைய சொந்த உழைப்பில் உருவானதுதான்.
* இலவச கூடுகளை யாருக்கெல்லாம் வழங்குகிறீர்கள்?
சிட்டுக்குருவி மீது காதலும், அன்பும் கொண்ட எல்லா மக்களுக்கும் இலவச மரக்கூடுகளை வழங்கி இருக்கிறோம். இனியும் வழங்க தயாராக இருக்கிறோம். கோவை நகருக்குள் இலவசமாகவே வழங்கிவிடுவோம். வெளியூர் மக்களுக்கும் கூடுகள் இலவசம்தான். ஆனால் போக்குவரத்திற்கான செலவை மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும்.
* சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதா?
என்னை போன்றே பல ஊர்களிலும், பல நல்ல உள்ளங்களின் முயற்சியினால் சிட்டுக்குருவிகள் பாதுகாக்கப்படுகின்றன. கூடு அமைத்தல், உணவு படைத்தல், தண்ணீர் தொட்டிகள் உருவாக்குவதல் போன்ற பல செயல்களை முன்னெடுக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் சிட்டுக்குருவிகளை ஆங்காங்கு காண முடிகிறது.
* சிட்டுக்குருவிகள் திடீரென குறைந்தது ஏன்?
சிட்டுக்குருவிகள் மனிதர்களையே நம்பி வாழ்பவை. அவற்றுக்கான உணவும், இருப்பிடமும் மனிதர்கள்தான் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். மற்ற பறவைகளை போல இவை மரத்தில் கூடுகட்டுவதில்லை. வீடுகளில்தான் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன. அதேபோல வீடுகளில் சிதறி கிடக்கும் அரிசி பொருட்களைதான் உணவாக உட்கொள்கின்றன. ஆனால் நாம் அரிசி புடைக்கும் பழக்கத்தை மறந்தாச்சு. தண்ணீர் வைக்கும் பழக்கத்தையும் விட்டாச்சு. பிறகு எப்படி சிட்டுக்குருவிகளை அதிகளவில் பார்க்கமுடியும்?
* சாதாரண தொழிலாளியான நீங்கள் குடும்பத்தை சமாளித்தபடியே, சிட்டுக்குருவிகளுக்கு கரிசனம் காட்டுவது எப்படி?
சிட்டுக்குருவிகள் மீதான காதலை என்னுடைய மனைவி அனிதா உணர்ந்திருக்கிறார். என்னுடைய மகள்கள் தமிழரசி மற்றும் வெண்மணி இருவருக்கும் அதுபுரியும். அதனால் வருமானத்தின் பாதியை
சிட்டுக்குருவிகளுக்காக செலவழிப்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆதரவும் கொடுக்கிறார்கள்.
செல்போன் டவர் ரேடியேஷன் சிட்டுக்குருவிகளை பாதிக்கிறதா?
இருக்கலாம். ஆனால் மனிதர்களின் வாழ்க்கை முறை மாற்றமும், பழக்க வழக்கமும்தான் சிட்டுக்குருவிகளை அதிகமாக பாதித்திருக்கிறது. ஏனெனில் செல்போன் டவருக்கு கீழ் இருக்கும் வீடுகளில் கூட, சிட்டுக்குருவிகள் சந்தோஷமாக வாழ்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதனால் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதர்களின் பொறுப்பற்ற செயல்கள்தான், அவைகளை அதிகமாக பாதிப்பதாக உணர்கிறேன்.
Related Tags :
Next Story






